முதுமைக் கண்ணீரின் வலி



தள்ளாடும் வயதினிலே
தடி ஊன்றி நடை நடந்து
தேகங்கள் தளர்ந்தாலும்- மனதில்
தெம்பு மட்டும் குறையாமல்

வேகாத வெயிலினிலே
வெளியூர்க்கு பஸ் ஏறி
நோகாமல் நோகடிக்கும்
நோய்களுடன் போராட

மணிக்கணக்கில் காத்திருந்து
மருத்துவரைப் பார்த்த பின்பு
வழக்கம் போல் மாத்திரையை
வாரி வாரி அவர் வழங்க

வாங்கி அதைக் கையில் வைத்து
வந்த வழி திரும்பிடவே
வழியில் ஒரு வயோதிடன்
என் பிம்பம் போல் எதிர் வரவே

அவனைப் பார்த்ததுமே என் கண்கள்
கண்ணீரைக் கசிந்ததுவே...

-------------------------

இவங்கதான் ரியல் சாம்பியன்ஸ்

தினமும் செய்தித்தாள்களைப் படிக்கும் போது ஏதாவது ஒரு பக்கத்தில் யாரேனும் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பார்த்து விட முடிகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, காதல் தோல்வி, வறுமை, கடன் தொல்லை, தீரா நோய் என ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு காரணம் முன் வைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் கூட இது போன்ற செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது.

அது போலவே நம் அன்றாட வாழ்க்கையில் நாள் தவறாமல் வாகன விபத்துகள் நடந்த செய்தியையும் செய்தித்தாள்களில் வாசித்து விட முடிகிறது. வாரம் இருமுறையேனும் நம் அக்கம் பக்கத்திலேயே ஏதாவது விபத்துகளை நேரில் பார்த்து விடுவதும், மற்றவர்கள் மூலமாக காதால் கேட்டு விடுவதும் இயல்பாகிவிட்டது. விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து நடந்த இடம் பழைய நிலைக்கு திரும்பி விட்டாலும் நாம் அந்த இடத்தைக் கடக்கும் ஒவ்வொரு கணமும் அந்த விபத்துக் காட்சிகள் நம் கண் முன்னே ஓட ஆரம்பித்து விடுகின்றன. சில சமயங்களில் சிறிய விபத்துகளாக இருந்தால் உயிர் இழப்புகள் இல்லாமல் உறுப்புகள் இழப்போடும் அந்த வடுக்களோடும் முடிந்து போனாலும் பல சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுவதும் சாதாரணமாகவே நடந்து விடுகின்றது.

சில நேரங்களில் ஒரு பக்கம் சாலையில் சரியாகவே சென்றாலும் எதிர் வருபவர்களின் அலட்சியத்தால் இரு தரப்பினருக்குமே சேதாரங்கள் ஏற்பட்டு விடுகின்றது. பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு இன்று முக்கியக் காரணமாக இருப்பது குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது தான். விபத்துகள் என்பது கண நேரத்தில் நடந்து விடுவது தான். ஆனாலும் நம்மால் முடிந்த வரை தடுக்கக்கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதில் கடும் விபத்தினை சந்தித்து உயிர் தப்பி, கை கால் என ஏதாவது உறுப்புகளை இழந்து சமூகத்தில் உள்ள சக மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் சில நேரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி மனதில் உள்ள குறைகளை அவர்கள் வெளிக்காட்டாமல் நம்மோடு சக மனிதர்களாக பழகும் போது நமக்கு நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு சற்று கூடவே செய்கிறது. அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் என்பது இருந்தாலும் அவர்கள் நம்மிடம் எந்த உதவியும் கேட்காத தருணங்களில் அவர்கள் சிறந்த முன் உதாரணங்களாக நம் கண் முன்னே தெரிகின்றனர்.

தொலைக்காட்சிகளை குறிப்பிட்ட நேரம் பார்த்தாலும் அதில் வரும் விளம்பரங்களை மற்றவர்களைப் போலவே நானும் அதிகம் விரும்பிப் பார்ப்பதில்லை. சன் டிவியில் இன்று (10.11.13) சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று முன்னரே விளம்பரப்படுத்தியதை நான் பார்க்கவில்லை. இன்று எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டு வரும்போது இந்த நிகழ்ச்சி என் கண்ணில் பட்டது.

வழக்கமாக நான் பார்த்த இது போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் அமர்ந்திருப்பர். ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருப்பார். திறமையை வெளிப்படுத்தும் நபர்களின் திறமையை சிறப்பு விருந்தினர் மட்டும் பாராட்டுவர். ஆனால் நடுவர்கள் மட்டும் அடுக்கடுக்காய் பல காரனங்களைக் கூறி திறமையை வெளிப்படுத்தும் நபரின் மனதை கடப்பாரையால் தாக்குவது போன்று தாக்கி அவர்களில் மனதைப் புண்படுத்தியே தீருவர். சில நேரங்களில் அவர்களை கண்ணீர் வர வைத்தும் ரசிப்பர்.

நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்
இன்றைய நிகழ்ச்சியிலும் அது போலவே நடுவர்களாக நடிகை ரேவதி மற்றும் பட்டிமன்றம் ராஜா அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் அவர்களும் அமர்ந்திருந்தார். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மற்ற நிகழ்ச்சிகளைப் போன்று எதாவது அழ வைக்கும் சம்பவம் நடந்து விடுமோ என்ற சலனம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் நல்ல வேளையாக அப்படி ஏதும் நடக்காமல் இருந்தது என் மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளித்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு (மாற்றுத்)திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தக் காணொளியைக் காணும் போது என் மனம் என்னிடமே இல்லை. நான் ஒரு குழந்தை போலவே மாறி எந்த முழு நிகழ்ச்சியும் கண்டு ரசித்தேன். ஆட்டம், பாட்டம், இசை என எல்லாவற்றிலும் எள்ளளவும் குறை கூறாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

திறமைகளை வெளிப்படுத்திய (மாற்றுத்)திறனாளிகள்

உடலில் குறை இருந்தாலும் மனதில் அதை நினைத்துக் கொள்ளாமல் தங்களையும் ஒரு சராசரி மனிதர்கள் போலவே நினைத்து அவர்கள் அசத்திய ஒவ்வொரு திறமையும் என்னை மிகவும் நெகிழச் செய்தது.
மரணத்தைப் பற்றிய பயமோ, மனதில் தற்கொலை எண்ணமோ உள்ளவர்கள் இவர்கள் போன்றவர்கள் திறமைகளைப் பார்ப்பார்களேயானால் அவர்கள் புது வாழ்க்கை பற்றிய சிந்தனைகளையே நினைப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.

வாழத்துணிந்தவனுக்கு வாழ்க்கை என்பது சவால் அல்ல. கண்டிப்பா இவங்கதான் சாம்பியன்ஸ்....
--------------------------------------


பயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயனளிக்குமா பண்ணைக் குட்டை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாகக் கூட இந்தக் கட்டுரையை வைத்துக் கொள்ளலாம். மழை இவ்வளவு விரைவில் எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நாங்கள் அமைத்திருந்த பண்ணைக் குட்டை முழுவதும் தண்ணீர் நிறைந்தது எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு இயற்கை அளித்த இந்த மழை, கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த அந்த நாட்கள் நிறைவேறியது போல ஒரு மன மகிழ்ச்சி.

மழை நீர் சேகரிப்பு பற்றி பல ஊடகங்கள் வாயிலாக நமது அரசாங்கமும், பல சமூர்க ஆர்வலர்களும் அவர்களால் இயன்ற வரை மக்களிடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் மக்கள் இதை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நாட்களில் மக்கள் குடி நீருக்குக் கூட குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் செல்வதும், தண்ணிரை தொலைவிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நிலையும் உள்ளது. ஆனால் மக்கள் முழு மனது வைத்து மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும். அதனால் நீர் வளமும் உயரும். குடி நீர் பிரச்சினை என்பது நம்மை நெறுங்க முடியாத அளவிற்கு நம்மை நாமே காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அருகாமையில் நிரம்பிய ஏரி ஒன்றின் புகைப்படம்


மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர வைக்க அப்படியொரு அருமையான திட்டம் தான் இந்த பண்ணைக் குட்டை திட்டம். அதிகமாக மழை பெய்யும் நாட்களில் மழை நீர் வீணாக ஆறுகளில் சென்று கலப்பதன் மூலம் மழை பெய்யும் இடங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வது சந்தேகம் தான். மாறாக முடிந்த வரை மழை நீரை அந்தந்த இடத்திலேயே இது போன்று பண்ணைக் குட்டை அமைத்தும் நீரை முழுவதுமாக பூமிக்குள்ளேயே செலுத்தலாம். இதன் மூலம் கிணறுகளும், ஆழ் துளைக் கிணறுகளும் மிக விரைவிலேய பயன் பெறும்.


 நிரம்பிய பண்ணைக் குட்டை


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்கள் ஊரில் பெய்த கன மழையால் நாங்கள் ஏற்படுத்தியிருந்த இந்த பண்ணைக் குட்டை முழுவதும் நிரம்பியது. இதன் காரணமாக அருகாமையில் இருந்த கிணறும், ஆழ்துளைக் கிணறும் இரண்டு நாட்களிலேயே பயன் பெற்றது என்பது நெகிழ்ச்சியான தருணம் தான்.

நாம் நம்முடைய எதிர்கால வாழ்விற்கு பொன், பொருள் சேமித்து வைப்பது மட்டுமல்ல நீரையும் சேமித்து வைப்பது இன்றைய சூழலுக்கு மிக மிக தேவையான ஒன்றே..


--------------------------------

கீச்சுகள்- 13


புறப்பட்ட இடமும், சேர்ந்த இடமும் சரி என்பதற்காக வந்த பாதைகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது...

*

ஆகச்சிறந்த ஆயுதங்கள்
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..



 *

விதிகளே சரியாக இல்லாத போது விதி மீறலைப் பற்றி என்ன பேசி என்ன பயன்??...

*

இந்த மண்ணிற்கு அப்படி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது அந்த வானத்திடம்..
மழையைத் தவிர...

*


சாதனைக்காக படைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை..
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...


*

கேள்வி என்பது மற்றவர்களைக் கேட்க மட்டமல்ல, நம்மையே நாம் கேட்பதற்கும் தான்...


*


அடையாளம் தெரியாமல் காணாமல் போனவைகள் பட்டியலில் நேற்றைய மழை தான் இன்று முதலிடம் பிடிக்கிறது....

*

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்துகொண்டு நம்பிக்கை என்னும் கயிற்றால் இழுக்கப்படுவதுதான் வாழ்க்கைக்தேர்....

*


மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் ஒன்று தான் இந்த 'சம்மதம்'...

---------

பஞ்சு கன்னம்





கொடிய

நஞ்சு கூட
அமிழ்தம் ஆகும்..
அவள்
பஞ்சு போன்ற
கன்னத்தில்
பட்டுத் தெரித்தால்...

-------

கீச்சுகள்- 12


களைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது புத்திசாலித்தனமாகவும், உழைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது சோம்பேறித்தனமாகவும் தான் எனக்குப் படுகின்றது...

*

நினைக்காததும் கிடைக்க தேடிக்கொண்டே இரு....

*

லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்பதாலோ என்னவோ அதை இன்னும் ஒழித்து விட முடியவில்லை...


* 


தினமும் இருமிக் கொண்டே தான் இருக்கிறாய்.. கொஞ்சம் உமிழ்ந்து நீரைத் துப்பி விட்டுத்தான் போய் விடேன் மேகமே...


*

விழுந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே எழுந்து விட்டால் அதுவும் ஒரு வெற்றி தான்..

-தடங்கல் இல்லாமல் தடங்கள் அமைவதில்லை...


*

கொஞ்சம் நாமாகவும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம்..
அனுபவம் தான் அத்தனையையும் கற்றுத் தர வேண்டுமென்பதில்லை.

* 

 நிலவைப் போல் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தான் பார்க்கிறது.. ஆனாலும் அமாவாசையில் மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றி கிடைக்கிறது இந்த சோலார் விளக்கிற்கு...

*

காரணங்கள் கச்சிதமாக இருக்கவேண்டும் என்றில்லை..
- குழந்தையின் அழுகைக்கும், புன்னகைக்கும்..



....

இதழ் படிப்பு




ஆங்கில நாளிதழைக் கூட
முழுமையாய்
படித்து விட
முடிகிறது என்னால்.,
.

ஆனால்.,
அவளின்
இதழைப் படிப்பதில்
இன்னும் நான்
Pre-Kg 
தான்...


...

கீச்சுகள்- 11


பிரிதலின் போதுதான் அதைப் பற்றிய புரிதலும் அதிகமாகிறது...
-மின்வெட்டு உள்பட..

*

முட்டைக்கும் வருவலுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....

-
கோழிக்கு..


*
இப்போதைக்கு சொல்ல இதுதான்..

அதே குற்றம், அதே பிழை
-
அநேக இடங்களில்



*

குழந்தை அழுதால் மட்டுமல்ல அந்த வானம் அழுதாலும் ரசிக்க ஒரு கூட்டமே உள்ளது...


*

ஏன், எதற்கு என்பதை மற்றவர்களிடம் கேட்பதற்கு முன்னால், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக இருக்கும்..

* 

வழிமுறைகளையே சரியாக அமைக்காமல் நடந்த தவறுக்கு வருத்தப்படுவதும், வார்த்தைகளைக் கொட்டுவதும் நல்ல நிர்வாகத்திற்கு பொருத்தமான செயல் அல்ல....

*

இயற்கையாக வெளிப்படுவது, செயற்கையாக வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளது மனிதனின் சிரிப்பு...


*


'இப்படி கெட்டது நடக்குமென்று எனக்கு முன்னரே தெரியும்' என்று கூறும் பலரும் அதைத் தடுக்க முயற்சி எடுத்திருந்தால் அப்பொழுதே நல்லவன் பட்டம் வாங்கி இருக்கலாமே.........

கீச்சுகள்- 10


நல்ல உள்ளங்களுக்கு, நல்ல உள்ளங்கள் வாழ்த்துவதற்காவே இந்த உள்ளங்கையால் ஆசிர்வாதம் செய்வது நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம்...

*


உயிருக்குப் (நீதிக்குப்) போராடும் உயிரை (நீதியை), அவரவர் கொன்றால் குணப்படுத்த முடியாததாகவும், அடுத்தவர் கொன்றால் மிகப்பெரிய குற்றமாகவும் தீர்ப்பளிக்கிறது நம் மனம் எனும் நீதிமன்றம்...


*


எதிரி என்று நினைத்து அவரை
உதறி நீயும் எறிந்து விட்டு,
சிதறி நீயும் கிடந்த போது
பதறி வந்து உதவிய அதே 'அவரை' நினைத்து
கதறி அழ மட்டும் எப்படி கற்றுக் கொண்டாய் மனமே?.


*

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிவதற்கு அனுபவம் எனும் அகராதி நன்றாகவே உதவுகின்றது.....

*

கூர்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான், நரசிம்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான்.
-
உருவம் முக்கியமல்ல... உபயோகம் தான் முக்கியம்..

*


ஏட்டில் எழுதாமலேயே நாட்டில் நிறைவேற்றப்பட்ட மறைமுக சட்டம் தான்
இந்த லஞ்சம்....

*

திட்டங்களைப் பற்றி தெளிவாய்த் தெரியாத அதிகாரிகளும்,

அரைகுறையாய் அறிந்து வைத்துள்ள அறிவிப்பு பலகைகளும்.. .

-(
அரசு) அலுவலகங்களில்.

கீச்சுகள்- 9


திட்டித் திருந்துவதற்கு முன்னாலேயே, பட்டுத் திருந்தி விட்டால் நல்ல பாட்டாளி என்ற பெயரையே வாங்கி விடிகிறோம் சில நேரங்களில்...........

*

தற்பொழுதெல்லாம் பல திரைப்படங்களின் தலைப்பு படத்துடன்தான் ஒட்டுவதில்லை பாவம் ...


*

பாலுக்கும், பாம்புக்கும் ஆடை கொடுத்து கௌரவம் செய்திருக்கிறது இந்த இயற்கை....

*

நமக்குத் தேவை உள்ளபோது பராமரிப்பதும், தேவை இல்லாதபோது நிராகரிப்பதும், சில பொருள்களை மட்டுமல்ல., பல மனிதர்களையும் தான்




ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதற்கு, இன்னொரு மரத்தின் கிளையினால் செய்யப்பட்ட ஏணியே துணைபுரிவதற்கு உதவி என்பதா?, துரோகம் என்பதா?....


*

குழந்தைக்கு உணவு ஊட்ட இந்த அறிவியல் யுகத்திலும் சில அம்மாக்களின் நம்பிக்கை.......
-அந்த நிலா... 

*

குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று குறிப்பிட்டு சலுகைகளை அறிவிப்பதும் ஒருவகை பாரபட்சம் தான்...


*

கண்ணீர் அஞ்சலி பதிவிலும் புன்னகைத்துக் கொண்டுள்ள புகைப் படங்களைப் பார்த்தால் நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு நம்மை அறியாமலேயே நிறையவே கூடி விடுகிறது...

மனமார்ந்த மண வாழ்த்து


கெட்டி மேளங்கள் சத்தமாய் முழங்க
நாதஸ்வரமும் இதமாய் இசையமைக்க
முன்னோர்கள் சான்றோர்கள்
ஆசிகள் பல அமைய

பட்டாடை பளபளக்க
மலர் மாலையும் மணமணக்க
மணமகனும் மணகளும்
மின்னொளியில் ஜொலி ஜொலிக்க

மங்கை அவள் கழுத்தினிலே
மன்னன் இவன் மாலையிட
கண்ணன் ராதை ஜோடியென்று
கண் குளிர வாழ்த்திடவே

இல்லறத்தின் இலக்கணமாய்
எப்பொழுதும் கூடி வாழ்ந்து
வாழ்க்கையினை வாழ்ந்திடவே
வாழ்த்துகிறேன் இப்பொழுதே

வாழ்க வாழ்கவே
வாழ்க பல்லாண்டு...

.

நானு லோடு மேனு




கண்ணில் பல கனவுகளோடு
மனதில் நிறைய ஆசைகளோடு
கையில் காய்த்த காப்புகளோடு
சீக்கிறம் ஆறா காயங்களோடு

மாட்டை ஓட்டும் சாட்டைகளோடு
மூட்டை தூக்கும் ஊக்குகளோடு
சீருடையான வேட்டி துண்டோடு
திடமாக கட்டிய உருமாலையோடு

திட்டியே தீர்க்கும் அதிகாரிகளோடு
ஒட்டியே உடனிருக்கும் தொழிலாளிகள் நட்போடு
அட்டி அடுக்கும் வண்டிகளோடு
போராடியே பெறும் மாமூல்களோடு

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றோடு
ஓடி ஓடி ஓடாய் உடைந்து சேர்த்த காசு இருநூறை வைத்து
குடும்பம் நடத்துற மனைவியை நினைத்தும்
கொடுத்ததை தின்கிற புள்ளையை நினைத்தும்

சிரித்து மகிழ்கிற பெற்றோரை நினைத்தும்
ஆறுதல் அடையுது இந்த ஆசாமி மனசு
காலைல மீண்டும் கந்து வட்டிக்காரன் நினைவு வந்ததும்
உடனே ஊக்கை தூக்குற நானு லோடு மேனு...
.

சுற்றுச்சூழலில் நாமும் ஒருவராய்....

டாலருக்கு நிகரான ரூபாயின்  மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி கடும் உயர்வு. அடுத்த பிரதமருக்கு தகுதியானவர் யார். நாட்டில் கொலை, கொள்ளை பெருகி விட்டது. இது போன்ற பல பேச்சுகளை சாதாரண மக்களும் பேசும் வகையில் விஞ்ஞானம் மக்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிகின்றது. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் ஒரு துளி கூட மழை இல்லாமல் பல வகையான மரங்கள் எல்லாம் காய்ந்து விழுகின்றது. குடிநீர் விநியோகம் முறையாகச் செய்ய வேண்டி மக்கள் சாலை மறியல். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் அதன் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வருகின்றதாகவும், உடனே அதற்கு சீல் வைக்கக் கூறியும் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போன்ற பல செய்திகளும் பலதரப்பட்ட மக்களும் எளிதில் வாசிக்கும் விதமாக எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது பக்கங்களில் அன்றாடம் வந்து விடுகின்றது.

காங்கயத்திலிருந்து திருப்பூர் நோக்கி காலை வேளையில் இரு சக்கர வாகனத்திலே பயணம் செய்கின்றேன். பல கனவுகளைச் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கமும், பல ஆசைகளை மனதிலும், கனமான அந்த புத்தக மூட்டையை முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிப் பேருந்திற்காக நிற்கும் மாணவ மாணவிகள் கூட்டம் மறு பக்கமும் கண்ணில் தென்படுகிறார்கள்.

காலை பத்து மணிக்கு திறக்கும் கடைக்காக எட்டு மணிக்கே கடைக்கு அருகாமையில் வந்து, கடைக்காரரின் (டாஸ்மாக்) வருகைக்காக காத்துக் கொண்டிருப்போர் கூட்டமும் எப்பொழுதும் குறைவதே இல்லை. பல விளை நிலங்கள், விலை நிலங்களாக பல வித்தியாசமான பெயர்களில் நகரங்களாகவும் மாறிக்கொண்டு வருவதும் வழக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தங்கள் வீட்டுக் குப்பைகளை ரோட்டோரத்திலும், நொய்யல் ஆற்றின் அருகாமையிலும் கொட்டும் பழக்கத்தையும் மக்கள் எப்பொழுதும் போலவே நமக்கென்ன என்ற மனநிலையோடவே செய்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


அந்தக் குப்பைகள் எல்லாம் அடிக்கின்ற காற்றிற்கு அருகில் உள்ள வீடு, காடு என அனைத்தையும் விட்டு வைக்காமல் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் 80% மக்காத பாலித்தீன் பைகளே அதிகம் உள்ளது. அந்த பாலித்தீன் பைகளின் தன்மைகளைப் பற்றி அரசாங்கம் தன்னால் முடிந்த வரை முன்னர் குறிப்பிட்ட அதே ஊடகங்களில் தான் விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அந்தக் குப்பைகள் எல்லாம் எப்பொழுது அழியும்? எப்பொழுது நம் மக்கள் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள்? சமூகம் என்பதில் தான் நாமும் இருக்கிறோம் என்பதை எப்பொழுது உணர்வார்கள்? என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளப்பட்டன.

உள்ளூர் செய்திகள் முதல் உலக நிகழ்வுகள் வரை ஆராய்ந்து அலசும் நாம் வீணாக எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டாமல், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பது பற்றி நாமே உணர்ந்து செயல்படுதல் தான் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாக இருக்க முடியும்...
.
.

நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...


தமிழ் வலைப்பூக்களைப் பற்றி சென்ற வருடம் வரை எதுவுமே தெரியாத எனக்கு, இந்த வருடம் தான் இந்த வலைப்பூவைப் பற்றியும், அதிலில் நம் சொந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரியும். இருந்தாலும் சென்ற வருடம் எந்த பதிவையும் இடுகின்ற தகுதி எனக்கிருந்ததாக நான் யோசித்தே பார்த்ததில்லை.

இந்த வருடம் எனக்கு கொஞ்சம் முகநூலில் அதிகம் நட்புகள் கிடைத்ததாலும், அவர்களில் அதிக பேர் தமிழில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதையும் கவனித்து நானும் எதேச்சையாக முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து, பிறகு ஈரோடு கதிர் அண்ணன் எழுத்துக்களால் கொஞ்சம் அதிகமாகவே கவரப்பட்டு இந்த வலைப்பூவிற்குள் நானும் வந்தேன். மனக்குதிரை என்றும் தலைப்புமிட்டு எழுத ஆரம்பித்தேன். (இந்தக் குதிரைக்கு கடிவாளம் கிடையாது)

நானும் என் சொந்த எழுத்துகளை மட்டுமே எழுதுகின்றேன். இன்னும் இருபது பதிவுகளைக் கூடவும் தாண்டவில்லை (இதுதான் இருபதாவது பதிவு). ஆனாலும் நான் ஈரோடு புத்தகத் திருவிழா- துவக்க நாள் 03.08.13 என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவை அண்ணன் சதீஸ் சங்கவி அவர்கள் படித்துவிட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், நானும் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். எனக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே ஆச்சர்யம். நான் இது போன்ற விழாவிற்கு தகுதியானவன் தானா என்று மிகவும் யோசித்தேன். இருந்தாலும் என்னை எப்படியோ கண்டுபிடித்து அழைத்த அவருக்காகவே, விளம்பரதாரர்கள் சொல்வது போல் 99 % நான் வருவதாக அப்பொழுதே உத்திரவாதம் அளித்தேன்.

இருந்தாலும் நேற்று வரை கொஞ்சம் இரு மனதாகவே இருந்தேன். சதிஸ் சங்கவி அண்ணின் இந்த விழா தொடர்பான தகவல்களை அவர் வலைப்பூவில் படித்துக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் அதிகமே கவரப்பட்டு இன்று முழு மனதாக விழாவிற்கு செல்வதென்று முடிவும் செய்தேன். சென்னைக்கு சென்றாதாகவும் இருக்கட்டும், விழாவில் கலந்து கொண்டதாகவும் இருக்கட்டுமென்று அண்ணன் சதிஸ் சங்கவி அவர்களிடம் என் வருகையை உறுதி செய்தேன்.

நாளை மனது மாறினானும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று இன்றே இரயில் பயணத்திற்கான முன் பதிவையும் செய்து, மின்னணு பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டேன். நான் சென்னை சென்றது இதுவரை இரண்டு முறை. முதல் முறை நான் கல்லூரி படிக்கும் பொழுது (2008), இரண்டாவது முறை அலுவலக வேலையாக (2010). அதற்கும் மேல் இதுவரை எனக்கும் சென்னைக்கு வேலை இல்லை, என்னாலும் சென்னைக்கும் ஒரு வேலையும் இல்லை.

இந்த விழாவில் சேட்டைக்காரன் அவர்கள் எழுதிய மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற நூலும், சதீஸ் சங்கவி அவர்கள் எழுதிய இதழில் எழுதிய கவிதைகள் என்ற நூலும், மோகன்குமார் அவர்கள் எழுதிய வெற்றிக்கோடு என்ற நூலும் வெளியிடப்போவதாக விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படுள்ளது.





இப்பொழுது தான் மூன்றாவது முறையாக சென்னைக்கு அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்காக (01.09.13) செல்ல இருக்கின்றேன். நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே என்று மதியம் முதல் நிறைய பேரிடம் என் வாய் உளரிக்கொண்டே இருக்கின்றது...

பயனளிக்குமா பண்ணைக் குட்டை???

தலைப்பிலிருந்தே உங்களுக்கு ஓரளவு யோசனை தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்.. இது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் தான். இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டம் பற்றி வீடு தேடி வந்து அரசாங்க அதிகாரிகள் எங்கள் தோட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவிலேயே ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள்.

முதலில் கொஞ்சம் யோசித்த பின், மழை நீரை சேகரிக்கும் திட்டம் தானே, இதனால் நிலத்தடி நீர் மட்டம் தானே பெருகப் போகின்றது என்று நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். திட்டத்தின் மதிப்பீடு ரூ.36000 என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்தே முழு பணியும் செய்து தருகின்றோம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கும் இரண்டு குச்சிகளை நட்டி கயிற்றைக் கட்டி பங்கு பிரித்துத்தான் வேலை செய்வார்களே என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.

திட்டமும் தொடங்கியது. இது குழி பறைக்கும் வேலை என்பதால் நல்ல வேளையாக அந்த அளவு குச்சிகளை நடாமல் அவர்கள் வேலை செய்தது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. இந்த வேலையை மேற்பார்வையிட்டு அவர்களிடம் சரியாக வேலை வாங்குவதற்கும், ஆட்கள் வருகை பதிவு கணக்கை எழுதுவதற்குமாக இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியையும் சிறப்பாக செய்தனர்.


வேலை நடைபெறும்போது பார்வையிடும் என் தந்தை


திட்டமும் ஒரு வாரத்தில் நிறைவு பெற்றது. சராசரியாக 45x45x2 அடி என்ற விகிதத்தில் குட்டையும் அமைக்கப்பட்டது. எப்படி கணக்கு போட்டாலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம் என்று மன நிறைவைப் பெற்றுக் கொண்டோம்.

திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறியது. எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது தான் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் வானம் பார்த்த பூமியாகவே உள்ள எங்கள் தோட்டத்திற்கும் வருணன் வழி விடுவான் என்று நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.

கலைஞர் ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்பட்டது, அம்மா ஆட்சியில் எங்களுக்காக ரூ.36000 செலவு செய்யப்பட்டுள்ளது. (JCB விட்டு வேலை செய்திருந்தால் 5000 தானே ஆகியிருக்குமென்று யாரும் கேட்டு விடாதீர்கள்.)

ஏழு கோடிக்கும் மேல் வாழும் இந்த தமிழகத்தில், எங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இவ்வளவு செலவு செய்திருப்பது அதிசயம் கலந்த ஆச்சர்யமும் தான். ஆகையால் முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் முதலமைச்சருக்கும் லட்சோப லட்ச நன்றிகள்..