சுற்றுச்சூழலில் நாமும் ஒருவராய்....

டாலருக்கு நிகரான ரூபாயின்  மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி கடும் உயர்வு. அடுத்த பிரதமருக்கு தகுதியானவர் யார். நாட்டில் கொலை, கொள்ளை பெருகி விட்டது. இது போன்ற பல பேச்சுகளை சாதாரண மக்களும் பேசும் வகையில் விஞ்ஞானம் மக்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிகின்றது. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் ஒரு துளி கூட மழை இல்லாமல் பல வகையான மரங்கள் எல்லாம் காய்ந்து விழுகின்றது. குடிநீர் விநியோகம் முறையாகச் செய்ய வேண்டி மக்கள் சாலை மறியல். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் அதன் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வருகின்றதாகவும், உடனே அதற்கு சீல் வைக்கக் கூறியும் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போன்ற பல செய்திகளும் பலதரப்பட்ட மக்களும் எளிதில் வாசிக்கும் விதமாக எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது பக்கங்களில் அன்றாடம் வந்து விடுகின்றது.

காங்கயத்திலிருந்து திருப்பூர் நோக்கி காலை வேளையில் இரு சக்கர வாகனத்திலே பயணம் செய்கின்றேன். பல கனவுகளைச் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கமும், பல ஆசைகளை மனதிலும், கனமான அந்த புத்தக மூட்டையை முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிப் பேருந்திற்காக நிற்கும் மாணவ மாணவிகள் கூட்டம் மறு பக்கமும் கண்ணில் தென்படுகிறார்கள்.

காலை பத்து மணிக்கு திறக்கும் கடைக்காக எட்டு மணிக்கே கடைக்கு அருகாமையில் வந்து, கடைக்காரரின் (டாஸ்மாக்) வருகைக்காக காத்துக் கொண்டிருப்போர் கூட்டமும் எப்பொழுதும் குறைவதே இல்லை. பல விளை நிலங்கள், விலை நிலங்களாக பல வித்தியாசமான பெயர்களில் நகரங்களாகவும் மாறிக்கொண்டு வருவதும் வழக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தங்கள் வீட்டுக் குப்பைகளை ரோட்டோரத்திலும், நொய்யல் ஆற்றின் அருகாமையிலும் கொட்டும் பழக்கத்தையும் மக்கள் எப்பொழுதும் போலவே நமக்கென்ன என்ற மனநிலையோடவே செய்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


அந்தக் குப்பைகள் எல்லாம் அடிக்கின்ற காற்றிற்கு அருகில் உள்ள வீடு, காடு என அனைத்தையும் விட்டு வைக்காமல் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் 80% மக்காத பாலித்தீன் பைகளே அதிகம் உள்ளது. அந்த பாலித்தீன் பைகளின் தன்மைகளைப் பற்றி அரசாங்கம் தன்னால் முடிந்த வரை முன்னர் குறிப்பிட்ட அதே ஊடகங்களில் தான் விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அந்தக் குப்பைகள் எல்லாம் எப்பொழுது அழியும்? எப்பொழுது நம் மக்கள் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள்? சமூகம் என்பதில் தான் நாமும் இருக்கிறோம் என்பதை எப்பொழுது உணர்வார்கள்? என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளப்பட்டன.

உள்ளூர் செய்திகள் முதல் உலக நிகழ்வுகள் வரை ஆராய்ந்து அலசும் நாம் வீணாக எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டாமல், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பது பற்றி நாமே உணர்ந்து செயல்படுதல் தான் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாக இருக்க முடியும்...
.
.

நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே...


தமிழ் வலைப்பூக்களைப் பற்றி சென்ற வருடம் வரை எதுவுமே தெரியாத எனக்கு, இந்த வருடம் தான் இந்த வலைப்பூவைப் பற்றியும், அதிலில் நம் சொந்த பதிவுகளை வெளியிடுவதன் மூலம் நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்ளலாமென்றும் தெரியும். இருந்தாலும் சென்ற வருடம் எந்த பதிவையும் இடுகின்ற தகுதி எனக்கிருந்ததாக நான் யோசித்தே பார்த்ததில்லை.

இந்த வருடம் எனக்கு கொஞ்சம் முகநூலில் அதிகம் நட்புகள் கிடைத்ததாலும், அவர்களில் அதிக பேர் தமிழில் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவிப்பதையும் கவனித்து நானும் எதேச்சையாக முகநூலில் தமிழில் எழுத ஆரம்பித்து, பிறகு ஈரோடு கதிர் அண்ணன் எழுத்துக்களால் கொஞ்சம் அதிகமாகவே கவரப்பட்டு இந்த வலைப்பூவிற்குள் நானும் வந்தேன். மனக்குதிரை என்றும் தலைப்புமிட்டு எழுத ஆரம்பித்தேன். (இந்தக் குதிரைக்கு கடிவாளம் கிடையாது)

நானும் என் சொந்த எழுத்துகளை மட்டுமே எழுதுகின்றேன். இன்னும் இருபது பதிவுகளைக் கூடவும் தாண்டவில்லை (இதுதான் இருபதாவது பதிவு). ஆனாலும் நான் ஈரோடு புத்தகத் திருவிழா- துவக்க நாள் 03.08.13 என்ற தலைப்பில் எழுதி இருந்த பதிவை அண்ணன் சதீஸ் சங்கவி அவர்கள் படித்துவிட்டு என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இரண்டாம் ஆண்டு தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், நானும் அவசியம் இதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். எனக்கு கொஞ்சம் அல்ல, நிறையவே ஆச்சர்யம். நான் இது போன்ற விழாவிற்கு தகுதியானவன் தானா என்று மிகவும் யோசித்தேன். இருந்தாலும் என்னை எப்படியோ கண்டுபிடித்து அழைத்த அவருக்காகவே, விளம்பரதாரர்கள் சொல்வது போல் 99 % நான் வருவதாக அப்பொழுதே உத்திரவாதம் அளித்தேன்.

இருந்தாலும் நேற்று வரை கொஞ்சம் இரு மனதாகவே இருந்தேன். சதிஸ் சங்கவி அண்ணின் இந்த விழா தொடர்பான தகவல்களை அவர் வலைப்பூவில் படித்துக் கொண்டே இருந்ததால் கொஞ்சம் அதிகமே கவரப்பட்டு இன்று முழு மனதாக விழாவிற்கு செல்வதென்று முடிவும் செய்தேன். சென்னைக்கு சென்றாதாகவும் இருக்கட்டும், விழாவில் கலந்து கொண்டதாகவும் இருக்கட்டுமென்று அண்ணன் சதிஸ் சங்கவி அவர்களிடம் என் வருகையை உறுதி செய்தேன்.

நாளை மனது மாறினானும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று இன்றே இரயில் பயணத்திற்கான முன் பதிவையும் செய்து, மின்னணு பயணச்சீட்டையும் பெற்றுக் கொண்டேன். நான் சென்னை சென்றது இதுவரை இரண்டு முறை. முதல் முறை நான் கல்லூரி படிக்கும் பொழுது (2008), இரண்டாவது முறை அலுவலக வேலையாக (2010). அதற்கும் மேல் இதுவரை எனக்கும் சென்னைக்கு வேலை இல்லை, என்னாலும் சென்னைக்கும் ஒரு வேலையும் இல்லை.

இந்த விழாவில் சேட்டைக்காரன் அவர்கள் எழுதிய மொட்டைத் தலையும் முழங்காலும் என்ற நூலும், சதீஸ் சங்கவி அவர்கள் எழுதிய இதழில் எழுதிய கவிதைகள் என்ற நூலும், மோகன்குமார் அவர்கள் எழுதிய வெற்றிக்கோடு என்ற நூலும் வெளியிடப்போவதாக விழா நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படுள்ளது.

இப்பொழுது தான் மூன்றாவது முறையாக சென்னைக்கு அதுவும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்காக (01.09.13) செல்ல இருக்கின்றேன். நான் மூனாவது வாட்டியா மெட்ராஸ் போறேனே என்று மதியம் முதல் நிறைய பேரிடம் என் வாய் உளரிக்கொண்டே இருக்கின்றது...

பயனளிக்குமா பண்ணைக் குட்டை???

தலைப்பிலிருந்தே உங்களுக்கு ஓரளவு யோசனை தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்.. இது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் தான். இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டம் பற்றி வீடு தேடி வந்து அரசாங்க அதிகாரிகள் எங்கள் தோட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவிலேயே ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள்.

முதலில் கொஞ்சம் யோசித்த பின், மழை நீரை சேகரிக்கும் திட்டம் தானே, இதனால் நிலத்தடி நீர் மட்டம் தானே பெருகப் போகின்றது என்று நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். திட்டத்தின் மதிப்பீடு ரூ.36000 என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்தே முழு பணியும் செய்து தருகின்றோம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கும் இரண்டு குச்சிகளை நட்டி கயிற்றைக் கட்டி பங்கு பிரித்துத்தான் வேலை செய்வார்களே என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.

திட்டமும் தொடங்கியது. இது குழி பறைக்கும் வேலை என்பதால் நல்ல வேளையாக அந்த அளவு குச்சிகளை நடாமல் அவர்கள் வேலை செய்தது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. இந்த வேலையை மேற்பார்வையிட்டு அவர்களிடம் சரியாக வேலை வாங்குவதற்கும், ஆட்கள் வருகை பதிவு கணக்கை எழுதுவதற்குமாக இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியையும் சிறப்பாக செய்தனர்.


வேலை நடைபெறும்போது பார்வையிடும் என் தந்தை


திட்டமும் ஒரு வாரத்தில் நிறைவு பெற்றது. சராசரியாக 45x45x2 அடி என்ற விகிதத்தில் குட்டையும் அமைக்கப்பட்டது. எப்படி கணக்கு போட்டாலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம் என்று மன நிறைவைப் பெற்றுக் கொண்டோம்.

திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறியது. எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது தான் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் வானம் பார்த்த பூமியாகவே உள்ள எங்கள் தோட்டத்திற்கும் வருணன் வழி விடுவான் என்று நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.

கலைஞர் ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்பட்டது, அம்மா ஆட்சியில் எங்களுக்காக ரூ.36000 செலவு செய்யப்பட்டுள்ளது. (JCB விட்டு வேலை செய்திருந்தால் 5000 தானே ஆகியிருக்குமென்று யாரும் கேட்டு விடாதீர்கள்.)

ஏழு கோடிக்கும் மேல் வாழும் இந்த தமிழகத்தில், எங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இவ்வளவு செலவு செய்திருப்பது அதிசயம் கலந்த ஆச்சர்யமும் தான். ஆகையால் முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் முதலமைச்சருக்கும் லட்சோப லட்ச நன்றிகள்.. 

சிறுமியின் ஆசை ஆசை


தினசரி காலையில் பள்ளிப் பேருந்தை
      தவறாமல் பிடித்திட ஆசை

எட்டு பாடவேளையும் திட்டு வாங்காமல்
      நன்றாகப் படித்திட ஆசை

இடைவேளையிலே கடைக்குச் சென்று இனிதான
     மிட்டாய் கடித்திட ஆசை

விளையாடும் போது தோழியைக் கொஞ்சம்
     செல்லமாய் இடித்திட ஆசை

ஆண்டு விழாவில் சிவாஜி போல
     சிறப்பாய் நடித்திட ஆசை

காகிதக் கப்பல் செய்வதற்காக புதிய
     தாளை மடித்திட ஆசை

தீபாவளியில் திரியைக் கொளுத்தி குண்டு
     வெடியை வெடித்திட ஆசை

சீனியையும் தூளையையும் சமமாய்ப் போட்டு
     தேநீர் குடித்திட ஆசை

விரும்பிய அனைத்தையும் தமிழ் வார்த்தையில்
     மட்டும் வடித்திட ஆசை

வீட்டுக் கணக்கை நானே தீர்த்து விடையைப்
     பார்க்காமல் முடித்திட ஆசை

இத்தனை ஆசையும் பட்டெனப் பறந்தது
     மேசையின் சத்தம் சட்டெனக் கேட்டதும்...

பாலைவன பூமி இங்கே..


ஆடி மாசம் முடிஞ்சுருச்சு
ஆவணியும் பொறந்திருச்சு

காவிரியும் பெருகிருச்சு
கபினியும் தான் நெறஞ்சுருச்சு

வாய்க்கால்லயும் தண்ணி வந்துருச்சு
நாற்றங்கால்லயும் நெல்லு தூவியாச்சு


ஆனா.... இங்க...


தென்னையெல்லாம் வறண்டுருச்சு
பனையும் பாதி கருகிருச்சு

கிணறும் கீழே போயிருச்சு
மனசும் ஓடா ஒடஞ்சுருச்சு

கடவுளுக்கு கண்ணும் போச்சு
எங்களுக்கு மண்ணும் போச்சு

பலருக்கு பேச்சு போச்சு
சிலருக்கு மூச்சே போச்சு

சோலைவன கனவு போச்சு
பாலைவன பூமி ஆச்சு...

என்னவளே நீ எங்கிருக்கிறாய்?....புவியில் உள்ள காற்றாக
மண்ணில் ஊறும் ஊற்றாக

பகலில் ஒளிரும் சூரியனாக
இரவில் மிளிரும் சந்திரனாக

செடியில் பூக்கும் பூவாக
பூவில் கலந்த மணமாக

குயிலிடும் கேட்கும் குரலாக
மயிலிடம் தெரியும் அழகாக

வானில் மின்னும் தாரகையாக
ஓவியம் வரையும் தூரிகையாக

விழியில் உள்ள ஒளியாக
உடலில் கலந்த உயிராக

என்னவளே இதில் நீ எங்கிருக்கிறாய்
வந்துவிடு நான் காத்திருக்கிறேன்...

ஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....

கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி (19.06.13) காலை 6 மணிக்கு ஊட்டி நண்பர் கணேஷ் அவர்களின் தம்பியின் திருமணத்திற்குச் செல்ல ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் நிறைய பேர் ஒரு டிராவல்ஸ் வண்டிக்கு அளவாகப் புறப்பட்டுக் கிளம்பினோம். கொஞ்சம் தைரியமாகவே எந்தவித பாதுகாப்புக் கருவிகளையும் (போர்வை, சால்வை போன்ற) எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

ஆனால் அதற்கு முதல் நாள் இரவே ஊட்டியில் பலத்த காற்று, மழை என்ற செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தாலும் மனதை ஒருவித தைரியமாக ஆக்கிக் கொண்டு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

மேட்டுப்பாளையம் செல்லும் வரை எந்தவித மேடு, பள்ளம் இல்லாத சாலை என்பதாலோ, புறப்பட்ட பிரியம் என்பதாலோ எங்கள் வண்டியின் ஓட்டுநர் மிக விரைவாகவே மேட்டுப்பாளையம் ஓட்டி வந்துவிட்டார்.. அங்கு தேநீர் பருகிவிட்டு அப்படியே எங்கள் பயணம் மலை மேலே செல்ல ஆரம்பித்தது.

என் மனது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. அதுவும் வளைவுகளில் கொஞ்சம் அதிகமாகவே படபடத்தது. இருந்தாலும் மிகப் பெரிய தைரியசாலியவே முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு, இருக்கையில் அசையாமலேயே அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக நீண்ட நேரத்திற்குப் பின் 9 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தோம். அங்கு வண்டியை நிறுத்தாமல் ஊட்டி நோக்கி பயணம் தொடர்ந்தது. 10 மணிக்குள் சென்று திருமண முகூர்த்தத்தைப் பார்த்து விடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தோம்..

ஆனால் வழிகளில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அதனால் மேலும் தாமதம் ஆனது. அப்பொழுது என்னுடைய 6-ஆம் வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து அடிக்கடி சொன்ன உனக்குத் தான் கணக்கு நல்லா வராதே என்ற வாக்கியம் என் மனதில் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது.

எப்படியோ அந்த நண்பரின் ஊரான ஊட்டி-சோலூர் என்ற இடத்திற்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.. திருமண வீட்டிற்கு வந்ததும் நாங்கள் எப்பொழுது திருமணத்திற்குச் சென்றாலும் தவறாமல் செய்யும் அந்த கும்பிடும் பழக்கத்தைச் செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு ரொம்பவும் புதிய முறைபோல் உணர்ந்ததை எங்கள் மனது புரிந்து கொண்டது. அதனால் மேற்கொண்டு அது போல் செய்வதை நிறுத்திக் கொண்டோம்..
திருமண வீட்டின் முன்பு


அங்கு என்னையும், தோழர்களையும் நண்பர் கணேஷ் நன்றாக வரவேற்று, ஊட்டிக்குப் பெயர் போன வருக்கியையையும், மற்ற சில பலகாரங்களையும் கொடுத்து நன்றாக தமிழர் முறைப்படி உபசரித்தார்.. 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் முகூர்த்தம் முடிந்தது என்றும் தெரிவித்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் அவர் இல்லத்திலேயே நடைபெற்றது என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது.
மணமகனுடன் நான்


அதன் பிறகு நடந்த சம்பர்தாயங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அங்கு அவர்கள் ஊர் சமுதாயக் கூடத்தில் பரிமாறிய உணவினையும் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளைக்கும், மனப்பெண்ணுக்கும் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அங்கு இருந்து விடை பெற்றோம்.

ஊட்டி வந்தது வந்து விட்டோம், அப்படியே சிறிய சுற்றுலாவாக தாவரவியல் பூங்காவிற்கு சென்று வருவோம் என்று ஒரு சில பேர் சொல்ல, போலாமே என்று புன்னகையான பதிலும் வர அப்படியே அங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வீடு நோக்கி எங்கள் வண்டியைக் கிளப்ப, இந்த இனிதான பயணம் இனிதே நிறைவு பெற்றது.. கடைசி வரை கடும் குளிரும், மழையும் வராமல் இருந்தது இதில் மிகப் பெரிய சிறப்பம்சம்.


இது வரை சுற்றுலாவகவே ஊட்டி சென்று கொண்டிருந்த எனக்கு இந்தப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது..

ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது??!!?


பெரிய மழை பெய்வதற்கு முன் ஆகாயமே அதிர இடி வருகின்றதோ இல்லையோ, டீ குடி, டீ குடி என்று காலை 11 மணி ஆகி விட்டால் போதும் உடலில் எங்கிருந்துதான் சுற்றறிக்கை வருகின்றதென்றே தெரியவில்லை. அதைக் குடித்த பிறகுதான் வேறு வேலையையே பார்க்க மனம் ஒத்துழைக்கிறது..

நேற்றும் வழக்கம்போல் டீ குடிக்க வழக்கமாகச் செல்லும் கடைக்கே சென்றேன். பூக்களை உதிரி விட்டால் போல் ஈக்களும், FM-ல் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற விஜய் நடித்து வெளிவர இருக்கும் தலைவா படத்தின் பாடலும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு என்னை இனிதாய் (!) வரவேற்றன.

டீக்கடைக்கே உரித்தான வடைக்கு ஜோடியாய் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் அந்த வெட்டிய செய்தித்தாளை வடையோடு ஒட்டி எடுத்துக் கொண்டு அக்கா... ஒரு டீ.... என்று ஒரு டீயையும் ஆர்டர் செய்துவிட்டு, பல அரசியல் வாதிகள் ஆக வேண்டிய ஆட்கள் அமருகின்ற அந்தப் பெஞ்சில் நானும் அமர்ந்தேன்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக உலக செய்திகள் வரை மக்கள் அறித்துகொள்ள வேண்டுமென்றோ, இதைப் படிக்கின்ற சாக்கிலாவது இரண்டு டீ, வடை வியாபாரம் ஆகுமென்றோ டீக்கடைக்காரர்கள் தங்கள் கடையில் வைக்கப்பட்டிருக்கும் தினசரி நாளிதழை நான் இறுதி பக்கத்திலிருந்து முதல் பக்கம் வரை புரட்ட ஆரம்பித்தேன்.

அங்கு அந்த டீக்கடைக்காரர் (நான் டீ ஆர்டர் செய்த அக்காவின் கணவர்) அருகினில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவரை நாற்காலியில் அமர்த்திக் கொண்டு எதையோ பேசுவது போல் எனக்குத் தெரிந்தது. இவர் உசிலைமணி போல் இருந்ததால் அவர் அருகில் இருந்தவரை நன்றாகப் பார்க்கவே முடியவில்லை. ஏதோ உறவினர் வந்து உள்ளார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பது போல் தெரிந்தாலும் அந்தக் கடைக்காரர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவினர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து ஒரு சத்தத்தையும் காணவில்லை.. ஆனால் மாறாக அவர் கேட்பவைகளுக்கு அவரின் மனைவியிடம் இருந்து கொஞ்சம் உரக்கமாவே பதில் வந்தது. அரசல் புரசலாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என் கையில் இருந்த வடையும் தீர, அந்த அக்கா என் அருகில் உள்ள பெஞ்சில் டீயை வைத்து விட்டு ஏப்பா.... இந்தா.... டீ... எடுத்துக்கோ... என்று சொன்ன பாணியிலேயே, அந்த கணவன் மனைவிக்குள் கொஞ்சம் சண்டை என்று சுதாரித்துக் கொண்டேன்..

ஆனால் இறுதி வரை அந்த மூன்றாவது ஆள் எதற்கு அங்கு வந்திருக்கின்றார், ஏன் பேசவே இல்லை என்ற கேள்வி ஒரு பக்கமாக என் மூளையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவருடைய திருமுகத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், என் கையில் இருந்த டீயும் முடிய, என் ஆறடி உடலை அப்படியே எழுப்பி, இன்னும் கொஞ்சம் காலால் உந்தி அரை அடி சேர்த்து கொஞ்சம் கழுத்தை உயர்த்தி எட்டிப் பார்த்தேன்.. அந்தக் கணப் பொழுதில்

லொல்....... லொல்....... லொல்...... லொல்......

என்று சத்தம் காதைக் கிழித்தது. கொஞ்சம் கண்ணைத் தேய்த்து நன்றாக உத்துப் பார்த்தால்தான் தெரிந்தது, அது  வெள்ளை நிறத்தில் பொசு பொசுவென்றிருந்த பொமரேனியன் நாய்.. அந்த நாயைப் பார்த்து என் மனதில் கேட்டுக் கொண்டேன் ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது, என்னைப் பார்த்ததற்கு அப்புறம் தான் பேசனுமா (!)??? .பிறகு அந்த டீ, வடை இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டு கடையை விட்டு நடையைக் கட்டினேன். நிறைய கணவன் மனைவி சண்டை பார்த்த எனக்கு இந்தச் சண்டை கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது..

இந்த நிகழ்வில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அந்தக் கடைக்காரர் அந்த நாயை நன்றாக சலவை செய்ததோடு (!), கடைக்குள்ளேயே ஒரு நாற்காலியில் அமர வைத்தது, அதோடு உரையாடியதும்தான்...

மழை விருந்தாளி


வீடு வந்த விருந்தாளிக்கு
வாசல் தாண்ட விருப்பமில்லை

            -இன்றைய மழைஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.13ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா தொடர்ந்து 9-ஆம் ஆண்டாக நேற்று ஆகஸ்டு 3- ஆம் தேதி துவங்கியது.. இவ்விழா வரும் 14-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது..

புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஆகஸ்டு 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது என ஏற்கனவே அனைவருக்கும் அழைப்பிதழ் விடப்பட்டிருந்தது.. ஏற்கனவே மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலத்தில் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான ஒரு சிறிய சந்திப்பில் எனக்கு விழா அழைப்பிதழ் நேரிலேயே கிடைக்கப்பெற்றது..


திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான சந்திப்பில் நானும், தோழர்களும்

   மிகச்சரியாக நேற்று (03.08.13) மாலை 5.30 மணிக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்தார்கள்.

அரங்கின் முன்புறத் தோற்றம்
திரு.பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்து புத்தகங்களைப் பார்வையிட்ட பொழுது    நன்றி :தினமணி (புகைப்படம்)

இதை அருகினில் இருந்து பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்பது எனக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமிக்க முக்கிய நிகழ்வாகவே என் மனதில் பதிவானது...

விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.. வரவேற்பு மற்றும் விழா அறிமுக உரையை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தூய தமிழில் தன் கணீர் குரலில் மேற்கொண்டார்..
திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது


திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசியதில் சில முக்கியத் துளிகள்:


          -- இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் 25 அரங்குகள் கூடுதலாக மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

        -- மிகவும் தரமான புகழ்மிக்க அகில இந்திய மற்றும் மாநிலஅளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.

      -- 150 தமிழ்ப் புத்தக அரங்கங்களும் 68 ஆங்கிலப் புத்தக அரங்கங்களும் 17 கல்விக் குறுந்தகடுகளுக்கான அரங்கங்களும் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன.

       --புத்தகம் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கான உண்டியல் திட்டம், ரூ.250க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவர்கள் அனைவருக்கும் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம்..

     -- இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், படைப்பாளிகள் மேடை, அரிய புத்தகக் காட்சி ஆகியவை இவற்றுள் முக்கியமானவை..

அடுத்தபடியாக ஈரோடு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரான பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் விழாவின் சுருக்கமான வாழ்த்துரையையும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் அவர்கள் விழாவின் தலைமை உரையையும் தெள்ளத் தெளிவான தமிழ் மொழியிலேயே தங்களுக்கே உரித்தான பாணியில் உரையாற்றினார்கள்..

அடுத்ததாக மாண்புமிகு நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் உரை நிகழ்த்த வந்தார்..

நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் பேசியதில் சில முக்கியக் குறிப்புகள்:

         
            நான் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் பாடம் பயின்றேன்.

        அதன் பிறகு சட்டம் பயிலும் போது ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து கொண்டு ஆங்கில நாளிதழ் வாசிப்பதிலும், ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும் முழு கவனம் செலுத்தினேன்..

       அதன் பிறகு அவருடைய நீதிமன்ற பயணங்கள் வழக்கறிஞர் முதல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தது வரை அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கினார்...

       அறிஞர்கள் வருகைக்கும், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாகவும் இனி புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டார்..

        இன்னும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அனைவரும் பயனுறும்படி தெளிவாகப் பேசி, தன் உரையை முடித்தார்..


   விழாவில் பல அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பல ஊர்களைச் சார்ந்த பொது மக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்..


வழக்கம்போல் இத்திருவிழாவில் வாங்கப்படும் நூல்கள் அனைத்திற்கும் 10% சிறப்புக்கழிவு உண்டு.. நூலகங்களுக்கும் கல்வி நிறுவனங்ககளுக்கும் வாங்கப்படும் நூல்களுக்கு கூடுதல் கழிவு உண்டு..நானும் கடந்த வருடம் போலவே எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகமாகவே புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அடுத்த வருடத்திற்குள்ளாகவே அனைத்து நூல்களின் புது மை வாசம் நீங்கி, என் கை பட்டுவிடுமென்றால் அதைவிட சிறந்த சாதனை வேறொன்றுமிருக்க வாய்ப்பில்லை... 


புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள் கூட்டம்புத்தகத் திருவிழாவில் நான்


கீச்சுகள் 8


*
கதைகளை ஆழ்ந்து படிக்கும் பொழுது, கதா பாத்திரங்களும், காட்சிகளும் அவரவர் என்னம் போல் கண் முன்னே ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.....

*

ஒருவர் மேல் உள்ள விருப்பு, வெறுப்பு.. இந்த இரண்டுமே அவர்களைப் பற்றி நம்மை அதிகம் பேச வைக்கிறது..


*

நாகரீகம் என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணியில் இப்பொழுது பெரும் பங்கு வகிக்கிறது..

-300
மி.லி மினரல் வாட்டர்..

*

முடியவில்லை என்று சொல்வதை விட முடிக்கவில்லை என்று சொன்னால், இன்னும் அந்த செயலுக்கு உயிர் உள்ளது என்று அர்த்தம்.. ஆகையால் முடியவில்லை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..

*


எவ்வளவு அறுசுவை உணவு சாப்பிட்டாலும், ஒரு நகைச்சுவையை சுவைத்தால் மட்டுமே எனக்கு வயிறு நிறைகிறது....

#
சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்போம்..

*******************************************************

கீச்சுகள் 7


*
முன்பு பார்த்தது போல் எங்கள் ஊர் தியேட்டர் போஸ்டர்களின் மேல் ஒட்டப்படும் இன்றே கடைசிபோஸ்டர்களை இப்பொழுதெல்லாம் காண முடிவதே இல்லை..

*

ஒத்திகை பார்த்து அரங்கேற்றம் செய்வதற்கு இது ஒன்றும் நாடகம் அல்ல... வாழ்க்கை... அவரவர் வழியில் தான் வாழ்ந்து காட்ட வேண்டும்.. 
#
நம்பிக்கையுடன்


 *

கிரிக்கெட்டிற்கு ஊடகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா? அல்லது ஊடகத்தினால்தான் கிரிக்கெட் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றதா?

*
இப்பொழுதெல்லாம் சமாதானம் மற்றவர்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ, நமக்கு நாமே அதிகம் சொல்ல வேண்டி இருக்கிறது. அதிக பேருக்கு அனுபவம் இருக்கும்..

* 

அது என்னமோ தெரியவில்லை.... நம்மில் பலருக்கும் பேருந்து நடத்துநரிடம் மட்டும் ஒரு ரூபாயைக்கூட விட்டுவிட மனம் இடம் கொடுப்பதில்லை

*********************************

கீச்சுகள் 6*
யாரை வேண்டுமானாலும் உதாரணப்படுத்திப் பேசுங்கள்.. ஆனால் ஒருபோதும் உதாசீனப்படுத்திப் பேசாதீர்கள்


*
ஒவ்வொரு சாதனை படைக்கும் பொழுதும் அதற்கு முன் இருந்த சாதனை முறியடிக்கப்பட்டு விடுகிறது..*
ஒருபோதும் நாம் 'சிக்கி' விடக்கூடாது என்றுதான் தினமும் மற்றவர்களை விமர்'சிக்கி'றோம்..

*

ஒளியும், ஒலியும் கூட ஒரே வேகத்தில் செல்ல முடிவதில்லை.. ஆனாலும் இரண்டும் சேர்ந்தால்தான் இனிமை.. மனிதர்களுக்குள் மட்டும் ஏன் இவ்வளவு பொறாமை?

* 

சுய நலத்தில் பொது நலம், சாலையோர மரங்களில் ஒட்டப்பட்ட பிரதிபலிப்பான்கள்... பாதுகாப்பு மனிதனுக்கும், மரங்களுக்கும்...

*

பிரபலம் என்றால் பிறருடைய பலத்தையும், பலவீனத்தையும் தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்பவர்தானா?

*******************************************************************

கீச்சுகள் 5


*
முற்றுப்புள்ளி வைத்து விட்டதால் மட்டும் அந்த வாக்கு (வாக்கியம்) முற்றுப்பெற்றதாய் ஆகிவிட முடியாது...


*

சில கேள்விகளுக்கு , சில கேள்விகளே பதிலாக அமைகின்றன.

*

நல்ல புத்தகங்களை 'விற்பதில்' உள்ள பெருமையை விட, அதில் உள்ளதைக் 'கற்பதில்' தான் மிகவும் பெருமை..


*
என்ன ஒரு உடன்பாடுடன் முரண்பாடு?
சில்லறை- நாணயம்.., இரண்டுமே கிட்டத்தட்ட ஒரு பொருள் தந்தாலும், அதனுடன் மனிதனைச் சேர்த்தால்?

சில்லறை மனிதன்??

நாணயமான மனிதன்??


*

கற்பனை என்பதும் இப்பொழுது விற்பனைப் பொருள் ஆகிவிட்டது... சினிமாக்களில், மேடைகளில், காவியங்களாய், ஓவியங்களாய், இன்னும்.....


*


வலைகளில் மாட்டிக் கொண்டால் மீள்வது சிரமம்தான்... எலியானாலும் , மனிதனானாலும் (இணையம்)
**********************************************

கீச்சுகள் 4


*
நல்ல வளர்ச்சிக்கு நிறுவனங்களில்/ அலுவலகங்களில் மாற்றங்களை புகுத்த முயற்சிக்கும் சிலர்.. அவரையே மாற்ற முயற்சிக்கும் பலர்..


*

கதவு என்பது பூட்டி வைக்கதான்.. ஆனாலும் பூட்டியே வைக்க இல்லை.. 
-நகரங்களில்..* 
இனி 'யோகம்' மட்டும் இல்லையென்றால் இந்த 'லோகத்தில்', 'தாகமும்', 'சோகமும்' ஆட்டிப்படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

*

வாயின் உதவியால் பல நூறு மொழிகள் பேசமுடியும் என்றால், கையின் உதவியால் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் பேச முடியும் "சை'கை'" யின் துணையோடு.


*


நாம் சிலவற்றைக் கற்றுக்கொடுக்கிறோம்.. சிலவற்றைக் கற்றும் கெடுகிறோம்.. - நல்லவையே கற்போம், நல்லவை மட்டுமே கற்பிப்போம்..

* 

அக்கம் பக்கத்து வீட்டரைக் கூட அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்ற எண்ணத்தை நகரம்தான் முதலில் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது...

 ******************************************************