மழை எங்கள் உயிருக்கு மேல்...

மழையைக் கண்ணில் பார்த்து பல நாள் ஆயிற்று.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஐயாவையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பல நாள் ஆயிற்று. வழக்கமா ஆவணி புரட்டாசி மாதங்களில் பெய்யும் பருவ மழையும் கடந்த வருடம் பெருமளவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டது. பெய்த ஒரு சில இடங்களிலும் கூட இன்றைய தேதியில் வறட்சியே நிலவுகிறது. கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் முன் கூட்டியே கோடையின் தாக்கம் மிகக் கடுமையாகவே உள்ளது. காலை பதினொரு மணிக்கு மேல் வெளியில் இந்த வெயிலில் செல்வது என்பது மிகக் கடினமான செயலே.

பச்சை பசேலென இருந்த புல்வெளிகளையெல்லாம் தற்போது பார்க்கும் போது கண்ணிற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மழை இந்த வருடமேனும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை ஓடிக்கொண்டுதான் உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் பல விவசாயிகள் பலர் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய பாசன அணையான மேட்டூர் அணையானது சென்ற வருடம் நிரம்பினாலும் தற்போது அதில் ஐம்பது அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருப்பதால் இந்த வருட விவசாயத்தின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நம் கண் முன்னே நிற்கிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக தண்ணீர் மட மடவென குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை குறைவாகப் பெய்யினும் கூட கர்நாடகத்தில் கனிசமான மழை இருப்பின் டெல்டா மாவட்டங்களுக்கு எப்படியோ நீர் கிடைத்து விடும்.

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பவானி சாகர் அணை. இந்த அணையிலும் தற்போது நீர் இருப்பு ஐம்பது அடிக்கும் குறைவாகவே உள்ளது. நீர் வரத்தும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதே போல் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும் முக்கிய அணையாக இருப்பது பொள்ளாச்சி ஆழியார் அணை. இதிலும் மற்றவைகளைப் போலவே தண்ணிர் மிகக் குறைவான இருப்பே உள்ளது. இந்த வருடம் மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ள தென்னை மரங்கள் வறலும் நிலை ஏற்படக் கூடும். ஏற்கனவே மழை குறைவின் காரணமாக சில பகுதிகளில் தென்னை வறண்டு காட்சியளிக்கிறது. தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும்.

வருண பகவானுக்கு இணையத்தில் ஒரு கணக்கிருந்தால் அதில் மழை வேண்டி விண்ணப்பங்களே குவிந்து கொண்டிருக்கும். மற்ற பொருள்களை இணையத்தில் வாங்குவது போல் இந்த மழையையும் வாங்கும் விஞ்ஞான நம் கையில் இருந்தால் அணைவரும் கணினியின் முன்னே அமர்ந்து கொண்டு ஆஃபர் விலையில் கிடைக்கிறதா என ஆராய்ச்சி செய்து கொண்டே வாங்க முயற்சித்துக் கொண்டிருப்போம். என்ன செய்ய? இந்த மழைக்காகவேனும் கடவுளை நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. அவரிடம் தான் முறையிட வேண்டியுள்ளது.



மரங்களையெல்லாம் நாம் தான் வெட்டுவோம். புதிதாக ஒரு மரங்கள் கூட நட்டு வளர்க்க மாட்டோம். அவ்வப்போது பெய்யும் மழையையும் கூட மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து சேமிக்க மாட்டோம். இருந்தாலும் அந்தக் கடவுள் மட்டும் மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும் என்று அதற்கே கட்டளையிடுவோம். மழை பொய்த்து விட்டது அதன் மீதே பழியை சுமத்துவோம். ஏனெனில் நாம் மனிதன். ஆறறிவு கொண்டவனாம்.

கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது மழை வந்து சென்றாலும் அது விவசாயம் செழிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரளவிற்காவது தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் என்று மற்றவர்களைப் போலவே நானும் நம்பிக்கொண்டே இருக்கின்றேன்..


கீச்சுகள் 15

*
பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் தாயின் கையில் கைகளை அசைத்தபடியே அழும் பச்சிளம் குழந்தை. பின் இருக்கையில் கொஞ்சம் படபடப்புடனேயே நான்.
*
மன நலம் பாதிக்கப்படுவது மரணத்திலும் கொடுமை. அவர்களை அனாதையாய் விடுவது அதனினும் கொடுமை..
*
சில நெகிழ்வான தருணங்களில் திடமாக உள்ள நெஞ்சமும் திரவமாக மாறுவதின் அடையாளம் தான் கண்ணீர்..


*
மிரண்டு போகும் பயம், மிரள வைக்கும் துணிச்சல் இவை இரண்டுமே இரவில் எளிதில் சாத்தியம்...
*
வென்றே ஆகவேண்டுமெனத்தானே இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்...
*
தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமல்ல, அந்தக் காரியத்திலே மிகத் தீர்மானமாக இருப்பதும் மிகவும் சிறப்பு..
*
எறும்பின் தாகத்தை எண்ணெய்தான் நன்கு அறியும்..
*
ஒன்றின் கெடுதலிலிருந்து காத்துக்கொள்ள மற்றொன்றைக் கொண்டு வருகிறோம். அதன் கெடுதலை உணர்ந்தும், உணராமலும்...
*
தான் நோய் நொடி இல்லாமல் வாழணும், தன் வியாபாரம் சிறக்கணும் என கடவுளை வேண்டி கடையைத் திறக்கிறான் மருந்து வியாபாரி.
*
சரக்கு என்ற சொல்லை மதுவிற்காகப் பயன்படுத்தும் போதுதான் அந்த வார்த்தை முழுமையடைந்ததாய் உணரும் பல குடிமகன்கள்!
*
பக்கத்து வீட்டுப்பையன் பத்தாம் வகுப்பென்பதால் பலத்த குரலில் படித்துக்கொண்டே இருக்கிறான், கணிதப் பாடத்தையும் சேர்த்து.. #இன்றைய_கல்வி.
*
எந்தக் கடையிலும் கிடைக்கப்பெறாத உத்வேக மருந்து..
-♥ அவள் கடைக்கண் பார்வை
*
பல நிகழ்வுகளைக் கடந்தாலும் நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்க்கை ரதத்தில் பயணிக்கிறோம்..
*
விருப்பமில்லா பொறுப்புகளைத் திணிப்பதன் மூலம் வெறுப்புகள்தான் வேரூன்றி வளரத் தொடங்குகிறது...
*
மனதிற்கு மருந்தாக சிறிதளவேனும் சமாதானம் நித்தம் தேவைப்படுகிறது.
*
பனித்துளிக்குள் பகலவன் பளபளப்பாய்ச் சிரிக்கிறான்., எமன் தானென்று அறியாமல்.
*
குறைந்தபட்ச தண்டனையாக மரண தண்டனையே விதிக்கப்படுகிறது கொசுவிற்கு..
*
நிழல் கூட எப்போதும் உன்னுடனேயே வர வேண்டுமென்றால் அது வெளிச்சத்தின் ஒத்துழைப்பால்தான் சாத்தியம்...
*
இங்கிலிஷ் மட்டுமல்ல இங்கிதமும் தெரிஞ்சுக்கணும்...
*
அநாயாசமாக செய்து முடிப்பவனுக்கு அனுபவம் மட்டுமல்ல அவன் வித்தியாசமான அணுகுமுறை கூட காரணமாக இருக்கலாம்.
*
ஔவியம் அழித்தலும் ஆகச்சிறந்த சாதனையே..
*
வாய்ப்பு வாசல் வர வேண்டுமென நினைப்பது ஆசை என வைத்தால், வாயிற்கதவு வரை வர வேண்டுமென நினைப்பது பேராசையே...
*
பண்டிகைகளை அழித்து வெறும் விடுமுறையாய் (மட்டும்) எண்ணி தொலைக்காட்சியில் தொலைக்கிறோம்.
*
அலைபேசியில் ஐந்தாறு மொழிகளில் அநாயாசமாக பேசிக்கொண்டு வருபவரின் அருகில் அவ்வளவு ஒரு அடக்க ஒடுக்கமாக அசைவில்லாமல் நான்.. #பேருந்துப்பயணத்தில்
*

கீச்சுகள் 14

*
வள்ளுவன் போல் நிலைத் தகவல்
வாய்த்தவர்கள் எவரும் இலர்..

*
தற்காலிகப் பதவி, நிரந்தரப் பதவி, பதவி உயர்வு என படிப்படியாக பதவி ஆசைகளும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்...
*
நிதானம்:
சாலை, வேலை இரண்டிலும் தேவை...
*
இந்த சுதந்திர இந்தியாவில் எந்திரங்கள் இல்லாமல் மந்திரங்கள் கற்காமல் பல தந்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் இந்த (அரசு) அதிகாரிகள்...
*
பூட்டு
இது வாயை மூடிக் கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
தன் வேலையச் செய்து கொண்டிருப்பதாகவும் நினைக்கலாம்.
*
இது ஒன்றும் புதிதல்ல,
வழக்கமான தவறுகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்..
*
திறமையான (அரசு) அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் ஃபேண்ட்-ல் எங்கெங்கு பாக்கெட் வைத்து தைக்க வேண்டும் என்று..
*
சத்தமே இல்லாமல் வந்து விடுவதாகவும், மகா யுத்தம் நடத்தியே சிதைக்க வேண்டியதாகவும் உள்ளது நம் தொப்பை..
*
ஏற்றி விட ஏணிகள் தேவையில்லை, எண்ணங்கள் சரியாக இருந்தால் போதும்.
*
மற்றவர்களை வீழ்த்துவது மட்டுமே வெற்றி என்ற இலக்கை எட்டி விட்டதாக ஆகிவிடாது.
*
அளகின் அலகும் அழகோ அழகு
-ரசிப்பவர்களுக்கு
*
தேடல் தொடங்கினாலும் தொலைவது குறைவதில்லை.
*
எதிர்பார்த்த பாதையில் தடைகள் உள்ளது என்பதற்காக பயணத்தையே நிறுத்துவது எவ்வகையில் நியாயம் ஆகும்?
*
ஐயமின்றி விளையாடும் அணில்களின் அழகை ரசிக்கவாவது மரங்கள் சூழ்ந்த கோயிலுக்கு மாதம் ஒரு முறையேனும் செல்ல வேண்டும்
*
பயின்றேதான் அனைத்தையும் சாதிக்க வேண்டுமென்பதில்லை. கொஞ்சம் முயன்றாலும் நிறைய சாதிக்கலாம்.
*
கடந்து வந்துவிட்டால் அனைத்தையும் வென்று வந்ததாக அர்த்தம் இல்லை
*
கைகளிலேயே எட்டிப் பிடித்துவிடும் இலக்கென்று நினைத்தால் அது வானமே என்றாலும் ஏணி எதற்கு?
*
எட்டிப்பிடித்து ஒரு முத்தம்
கொடுத்து விடுவேன்.
அந்த நிலவு மட்டும் என்
கைகளில் சிக்கிவிட்டால்..
*
நடிப்பது, இரட்டை வேடமாய் நடிப்பது என இரண்டுமே சுலபமாய் நடந்து விடுகிறது சினிமாவை விட வாழ்க்கையில்.
*
உணவும் இல்லாமல் ஊட்டச்சத்தும் இல்லாமல் ஆரோக்கியமாய் வளர்வதில் சோம்பேறித்தனம் தான் முதலிடமாக இருக்க முடியும்.
*
தொலைத்ததையே தேடிக்கொண்டிருந்தால் கொலம்பஸ் போல் எப்படி ஆவது?
*
உயிர் பிரிந்தவனின் கண்ணில் (இறுதியாக) வடிந்திருக்கும் கண்ணீர் அவனுடைய நிறைவேறாத ஆசைகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடகக் கூட இருக்கலாம்
*
அநியாயங்களைத் தட்டிக் கேட்கா விட்டாலும் பரவாயில்லை. தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தாமலிருங்கள். அது போதும்.
*
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஓரிரு மணித்துளிகளில் ஓராயிரம் உண்மை, பொய்களை உணர்த்தி விடுகிறது.
*