Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts
Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்

எப்போதும் போல் அல்லாமல் எனக்கு இந்த வருடம் பொங்கல் மிக்க மகிழ்ச்சியானதாகவே இருந்தது. அதற்குக் காரணம் காங்கயம் தமிழ்ச்சங்கம் மூலம் காங்கயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிதான். இன்னும் கூடுதல் சிறப்பாக நேற்று (15.01.14) மாலை நேர நிகழ்ச்சியில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புப் பேருரை இடம் பெற்றிருந்தது என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஆவணப்பட இயக்குநர் என்னும் ஒற்றை வரியில் மட்டும் கூறிவிட முடியாது. தமிழகத்தில் ஆகச்சிறந்த பேச்சாளர்களில், நான் மிகவும் மனதில் பதிவு செய்து வைத்துள்ள என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்றினால் சமூகத்தில் நடக்கும் அவல நிலைகளை தன் ஆவணப்படம் மூலம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பவர். இவரின் இராமையாவின் குடிசை, என்று தணியும், எனக்கு இல்லையா கல்வி இந்த மூன்று ஆவணப்படங்களும் சமூக நிலைகளை அப்படியே பிரதிபலித்த படங்கள்.

நான் இவரைப் பற்றி அறிந்து கொண்டது திரு.ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் வலைப்பூவில் தான். கடந்த ஆண்டு (2013) ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது பேச்சைக் கேட்டே ஆக வேண்டும் என்ற கூடுதல் ஆர்வம் என்னுள் கலந்துவிட்டது. அந்த விழாவில் அவர் நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரோட்டில் ஆகஸ்டு-2013 ல் உரை ஆற்றிய போது


காங்கயத்தில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை:

நேற்று காங்கயம் கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போது தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட எதையும் சொல்லாமல் நேரடியாக பாவேந்தரின் வரிகளும், சிறப்புரையின் தலைப்புமான தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தலைப்பைப் பெறுமைப்படுத்த பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றி பாரதி எழுதிய பாடல் ஒன்றினைச் சொல்லி தன் உரையைத் தொடங்கினார். இவர் பேச ஆரம்பித்தது முதலே பேச்சில் கருத்தாழம் மட்டுமல்ல நகைச்சுவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதை எளிதில் உணர முடிந்தது.

உலகில் 6000 பேச்சு மொழிகள் உள்ளன. அதில் 130 முதல் 140 மொழிகளே எழுத்து வடிவம் பெற்றுள்ளன. அதிலும் மிகவும் பழமையான மொழிகள் சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே. ஆங்கில மொழி தோன்றி வெறும் 400 வருடங்களே ஆகின்றன. ஆங்கிலம் படிப்பதைத் தவறென்று கூறவில்லை. மாறாக தமிழையும் சரியாக எழுதாமல் ஆங்கிலத்தையும் சரியாக எழுதாமல் இரண்டும் கெட்ட அவல நிலையில் எழுதுவதையும், பேசுவதையும்தான் சொல்ல மனம் கூசுகிறது. தகராறு என்ற வார்த்தையை எழுவதிலேயே இங்கு எத்தனை பேருக்குத் தகராறு இருக்கிறது. சிறிய , பெரிய என்று சொல்லிக் கொள்வதில் வல்லினமும் மெல்லினமும் மறந்து பலவீனம் ஆகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கும் மேல் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கூட இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுவதில்லை.

யாமறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி எழுதி இருக்கிறார் என்றால் வெறும் தமிழை மட்டும் கற்றுக் கொண்டு அவர் இதை சொல்லிவிட முடியாது. எழுத, படிக்க, பேச என மூன்று நிலைகளையும் கற்றுத் தேர்ந்தால் தான் எந்தவொரு மொழியையும் முழுமையாய்க் கற்றுத்தேர்ந்தவன் என்ற நிலையில் உணர முடியும். பாரதி அது போல 9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதனால்தான் அந்த வரிகளை அவரால் சொல்ல முடிந்தது, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவுநத்தைக்கும் சங்கிற்கும் ஈரறிவு, கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்றறிவு. நண்டுக்கும் வண்டுக்கும் நான்கறிவு, விலங்களுக்கு ஐந்தறிவு, ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு என்று மனிதனே வகுத்துக் கொண்டான் என்று அவர் பேசியதும் அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். தன் சிரிப்பான பேச்சின் மூலமும் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் தான் வினைச்சொல்லே தினையையும், பாலையும் கூறுகின்ற அற்புத மொழி. ஒன்றே முக்கால் அடிகளிலே அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ள திருக்குறள் பிறந்தது தமிழ் மொழியில். ஆனால் இன்றைய நிலையில் வழக்காடு மன்றம், வழிபாட்டுக்கூடம் மட்டுமல்ல வகுப்பறையிலும் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். காலம் காலமாய் இருந்து வந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் உள்ள கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதின் மூலம்தான் தமிழன் என்ற அடையாளத்தையும் நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் காக்க முடியும்.

 நேற்று (15.01.14) காங்கயத்தில் உரை ஆற்றிய போது


அம்மா. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர் மெய் எழுத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு அற்புத உணர்வு. இப்படி ஒரு சிறப்பு வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. நாம் கொண்டாடும் பொங்கல் வெறும் பண்டிகையோடு நின்று விடக்கூடாது. அது நம் பண்பாட்டின் அடையாளம். இயன்ற வரை பிறமொழி கலக்காமல் தமிழ் மொழியிலேயே பேசுவோம். தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பரந்த வாசிப்பும்தான் தமிழைக் காக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. பாவேந்தர் போல் தமிழை உயிருடன் ஒப்பிடுவதை விட வேறெந்த கௌரவமும் தமிழுக்கு செய்து விட முடியாது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர். அரங்கிற்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்த பணியினை சிறப்பாக செய்த அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.

உலகம் அறிந்து உணர வேண்டிய படைப்பாளிகளில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வளர்க அவர் தமிழ் மற்றும் சமூகப் பணிகள்..


திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் வலைப்பூ: உண்மை புதிதன்று


நன்றிகளுடன்:

தினேஷ்...

ஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.13



ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா தொடர்ந்து 9-ஆம் ஆண்டாக நேற்று ஆகஸ்டு 3- ஆம் தேதி துவங்கியது.. இவ்விழா வரும் 14-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது..

புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஆகஸ்டு 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது என ஏற்கனவே அனைவருக்கும் அழைப்பிதழ் விடப்பட்டிருந்தது.. ஏற்கனவே மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலத்தில் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான ஒரு சிறிய சந்திப்பில் எனக்கு விழா அழைப்பிதழ் நேரிலேயே கிடைக்கப்பெற்றது..


திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான சந்திப்பில் நானும், தோழர்களும்

   மிகச்சரியாக நேற்று (03.08.13) மாலை 5.30 மணிக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்தார்கள்.

அரங்கின் முன்புறத் தோற்றம்




திரு.பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்து புத்தகங்களைப் பார்வையிட்ட பொழுது    நன்றி :தினமணி (புகைப்படம்)

இதை அருகினில் இருந்து பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்பது எனக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமிக்க முக்கிய நிகழ்வாகவே என் மனதில் பதிவானது...

விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.. வரவேற்பு மற்றும் விழா அறிமுக உரையை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தூய தமிழில் தன் கணீர் குரலில் மேற்கொண்டார்..
திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது


திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசியதில் சில முக்கியத் துளிகள்:


          -- இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் 25 அரங்குகள் கூடுதலாக மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

        -- மிகவும் தரமான புகழ்மிக்க அகில இந்திய மற்றும் மாநிலஅளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.

      -- 150 தமிழ்ப் புத்தக அரங்கங்களும் 68 ஆங்கிலப் புத்தக அரங்கங்களும் 17 கல்விக் குறுந்தகடுகளுக்கான அரங்கங்களும் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன.

       --புத்தகம் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கான உண்டியல் திட்டம், ரூ.250க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவர்கள் அனைவருக்கும் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம்..

     -- இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், படைப்பாளிகள் மேடை, அரிய புத்தகக் காட்சி ஆகியவை இவற்றுள் முக்கியமானவை..

அடுத்தபடியாக ஈரோடு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரான பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் விழாவின் சுருக்கமான வாழ்த்துரையையும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் அவர்கள் விழாவின் தலைமை உரையையும் தெள்ளத் தெளிவான தமிழ் மொழியிலேயே தங்களுக்கே உரித்தான பாணியில் உரையாற்றினார்கள்..

அடுத்ததாக மாண்புமிகு நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் உரை நிகழ்த்த வந்தார்..

நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் பேசியதில் சில முக்கியக் குறிப்புகள்:

         
            நான் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் பாடம் பயின்றேன்.

        அதன் பிறகு சட்டம் பயிலும் போது ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து கொண்டு ஆங்கில நாளிதழ் வாசிப்பதிலும், ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும் முழு கவனம் செலுத்தினேன்..

       அதன் பிறகு அவருடைய நீதிமன்ற பயணங்கள் வழக்கறிஞர் முதல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தது வரை அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கினார்...

       அறிஞர்கள் வருகைக்கும், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாகவும் இனி புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டார்..

        இன்னும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அனைவரும் பயனுறும்படி தெளிவாகப் பேசி, தன் உரையை முடித்தார்..


   விழாவில் பல அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பல ஊர்களைச் சார்ந்த பொது மக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்..


வழக்கம்போல் இத்திருவிழாவில் வாங்கப்படும் நூல்கள் அனைத்திற்கும் 10% சிறப்புக்கழிவு உண்டு.. நூலகங்களுக்கும் கல்வி நிறுவனங்ககளுக்கும் வாங்கப்படும் நூல்களுக்கு கூடுதல் கழிவு உண்டு..



நானும் கடந்த வருடம் போலவே எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகமாகவே புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அடுத்த வருடத்திற்குள்ளாகவே அனைத்து நூல்களின் புது மை வாசம் நீங்கி, என் கை பட்டுவிடுமென்றால் அதைவிட சிறந்த சாதனை வேறொன்றுமிருக்க வாய்ப்பில்லை... 


புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள் கூட்டம்



புத்தகத் திருவிழாவில் நான்