Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

சுற்றுச்சூழலில் நாமும் ஒருவராய்....

டாலருக்கு நிகரான ரூபாயின்  மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி கடும் உயர்வு. அடுத்த பிரதமருக்கு தகுதியானவர் யார். நாட்டில் கொலை, கொள்ளை பெருகி விட்டது. இது போன்ற பல பேச்சுகளை சாதாரண மக்களும் பேசும் வகையில் விஞ்ஞானம் மக்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிகின்றது. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் ஒரு துளி கூட மழை இல்லாமல் பல வகையான மரங்கள் எல்லாம் காய்ந்து விழுகின்றது. குடிநீர் விநியோகம் முறையாகச் செய்ய வேண்டி மக்கள் சாலை மறியல். தொழிற்சாலையில் இருந்து வரும் புகையால் அதன் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வருகின்றதாகவும், உடனே அதற்கு சீல் வைக்கக் கூறியும் மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போன்ற பல செய்திகளும் பலதரப்பட்ட மக்களும் எளிதில் வாசிக்கும் விதமாக எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது பக்கங்களில் அன்றாடம் வந்து விடுகின்றது.

காங்கயத்திலிருந்து திருப்பூர் நோக்கி காலை வேளையில் இரு சக்கர வாகனத்திலே பயணம் செய்கின்றேன். பல கனவுகளைச் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் ஒரு பக்கமும், பல ஆசைகளை மனதிலும், கனமான அந்த புத்தக மூட்டையை முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிப் பேருந்திற்காக நிற்கும் மாணவ மாணவிகள் கூட்டம் மறு பக்கமும் கண்ணில் தென்படுகிறார்கள்.

காலை பத்து மணிக்கு திறக்கும் கடைக்காக எட்டு மணிக்கே கடைக்கு அருகாமையில் வந்து, கடைக்காரரின் (டாஸ்மாக்) வருகைக்காக காத்துக் கொண்டிருப்போர் கூட்டமும் எப்பொழுதும் குறைவதே இல்லை. பல விளை நிலங்கள், விலை நிலங்களாக பல வித்தியாசமான பெயர்களில் நகரங்களாகவும் மாறிக்கொண்டு வருவதும் வழக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

தங்கள் வீட்டுக் குப்பைகளை ரோட்டோரத்திலும், நொய்யல் ஆற்றின் அருகாமையிலும் கொட்டும் பழக்கத்தையும் மக்கள் எப்பொழுதும் போலவே நமக்கென்ன என்ற மனநிலையோடவே செய்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


அந்தக் குப்பைகள் எல்லாம் அடிக்கின்ற காற்றிற்கு அருகில் உள்ள வீடு, காடு என அனைத்தையும் விட்டு வைக்காமல் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் 80% மக்காத பாலித்தீன் பைகளே அதிகம் உள்ளது. அந்த பாலித்தீன் பைகளின் தன்மைகளைப் பற்றி அரசாங்கம் தன்னால் முடிந்த வரை முன்னர் குறிப்பிட்ட அதே ஊடகங்களில் தான் விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அந்தக் குப்பைகள் எல்லாம் எப்பொழுது அழியும்? எப்பொழுது நம் மக்கள் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள்? சமூகம் என்பதில் தான் நாமும் இருக்கிறோம் என்பதை எப்பொழுது உணர்வார்கள்? என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளப்பட்டன.

உள்ளூர் செய்திகள் முதல் உலக நிகழ்வுகள் வரை ஆராய்ந்து அலசும் நாம் வீணாக எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே குற்றம் சாட்டாமல், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பது பற்றி நாமே உணர்ந்து செயல்படுதல் தான் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாக இருக்க முடியும்...
.
.

ஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....

கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி (19.06.13) காலை 6 மணிக்கு ஊட்டி நண்பர் கணேஷ் அவர்களின் தம்பியின் திருமணத்திற்குச் செல்ல ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் நிறைய பேர் ஒரு டிராவல்ஸ் வண்டிக்கு அளவாகப் புறப்பட்டுக் கிளம்பினோம். கொஞ்சம் தைரியமாகவே எந்தவித பாதுகாப்புக் கருவிகளையும் (போர்வை, சால்வை போன்ற) எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

ஆனால் அதற்கு முதல் நாள் இரவே ஊட்டியில் பலத்த காற்று, மழை என்ற செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தாலும் மனதை ஒருவித தைரியமாக ஆக்கிக் கொண்டு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

மேட்டுப்பாளையம் செல்லும் வரை எந்தவித மேடு, பள்ளம் இல்லாத சாலை என்பதாலோ, புறப்பட்ட பிரியம் என்பதாலோ எங்கள் வண்டியின் ஓட்டுநர் மிக விரைவாகவே மேட்டுப்பாளையம் ஓட்டி வந்துவிட்டார்.. அங்கு தேநீர் பருகிவிட்டு அப்படியே எங்கள் பயணம் மலை மேலே செல்ல ஆரம்பித்தது.

என் மனது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. அதுவும் வளைவுகளில் கொஞ்சம் அதிகமாகவே படபடத்தது. இருந்தாலும் மிகப் பெரிய தைரியசாலியவே முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு, இருக்கையில் அசையாமலேயே அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக நீண்ட நேரத்திற்குப் பின் 9 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தோம். அங்கு வண்டியை நிறுத்தாமல் ஊட்டி நோக்கி பயணம் தொடர்ந்தது. 10 மணிக்குள் சென்று திருமண முகூர்த்தத்தைப் பார்த்து விடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தோம்..

ஆனால் வழிகளில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அதனால் மேலும் தாமதம் ஆனது. அப்பொழுது என்னுடைய 6-ஆம் வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து அடிக்கடி சொன்ன உனக்குத் தான் கணக்கு நல்லா வராதே என்ற வாக்கியம் என் மனதில் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது.

எப்படியோ அந்த நண்பரின் ஊரான ஊட்டி-சோலூர் என்ற இடத்திற்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.. திருமண வீட்டிற்கு வந்ததும் நாங்கள் எப்பொழுது திருமணத்திற்குச் சென்றாலும் தவறாமல் செய்யும் அந்த கும்பிடும் பழக்கத்தைச் செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு ரொம்பவும் புதிய முறைபோல் உணர்ந்ததை எங்கள் மனது புரிந்து கொண்டது. அதனால் மேற்கொண்டு அது போல் செய்வதை நிறுத்திக் கொண்டோம்..
திருமண வீட்டின் முன்பு


அங்கு என்னையும், தோழர்களையும் நண்பர் கணேஷ் நன்றாக வரவேற்று, ஊட்டிக்குப் பெயர் போன வருக்கியையையும், மற்ற சில பலகாரங்களையும் கொடுத்து நன்றாக தமிழர் முறைப்படி உபசரித்தார்.. 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் முகூர்த்தம் முடிந்தது என்றும் தெரிவித்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் அவர் இல்லத்திலேயே நடைபெற்றது என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது.
மணமகனுடன் நான்


அதன் பிறகு நடந்த சம்பர்தாயங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அங்கு அவர்கள் ஊர் சமுதாயக் கூடத்தில் பரிமாறிய உணவினையும் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளைக்கும், மனப்பெண்ணுக்கும் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அங்கு இருந்து விடை பெற்றோம்.

ஊட்டி வந்தது வந்து விட்டோம், அப்படியே சிறிய சுற்றுலாவாக தாவரவியல் பூங்காவிற்கு சென்று வருவோம் என்று ஒரு சில பேர் சொல்ல, போலாமே என்று புன்னகையான பதிலும் வர அப்படியே அங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வீடு நோக்கி எங்கள் வண்டியைக் கிளப்ப, இந்த இனிதான பயணம் இனிதே நிறைவு பெற்றது.. கடைசி வரை கடும் குளிரும், மழையும் வராமல் இருந்தது இதில் மிகப் பெரிய சிறப்பம்சம்.


இது வரை சுற்றுலாவகவே ஊட்டி சென்று கொண்டிருந்த எனக்கு இந்தப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது..

ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது??!!?


பெரிய மழை பெய்வதற்கு முன் ஆகாயமே அதிர இடி வருகின்றதோ இல்லையோ, டீ குடி, டீ குடி என்று காலை 11 மணி ஆகி விட்டால் போதும் உடலில் எங்கிருந்துதான் சுற்றறிக்கை வருகின்றதென்றே தெரியவில்லை. அதைக் குடித்த பிறகுதான் வேறு வேலையையே பார்க்க மனம் ஒத்துழைக்கிறது..

நேற்றும் வழக்கம்போல் டீ குடிக்க வழக்கமாகச் செல்லும் கடைக்கே சென்றேன். பூக்களை உதிரி விட்டால் போல் ஈக்களும், FM-ல் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற விஜய் நடித்து வெளிவர இருக்கும் தலைவா படத்தின் பாடலும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு என்னை இனிதாய் (!) வரவேற்றன.

டீக்கடைக்கே உரித்தான வடைக்கு ஜோடியாய் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் அந்த வெட்டிய செய்தித்தாளை வடையோடு ஒட்டி எடுத்துக் கொண்டு அக்கா... ஒரு டீ.... என்று ஒரு டீயையும் ஆர்டர் செய்துவிட்டு, பல அரசியல் வாதிகள் ஆக வேண்டிய ஆட்கள் அமருகின்ற அந்தப் பெஞ்சில் நானும் அமர்ந்தேன்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக உலக செய்திகள் வரை மக்கள் அறித்துகொள்ள வேண்டுமென்றோ, இதைப் படிக்கின்ற சாக்கிலாவது இரண்டு டீ, வடை வியாபாரம் ஆகுமென்றோ டீக்கடைக்காரர்கள் தங்கள் கடையில் வைக்கப்பட்டிருக்கும் தினசரி நாளிதழை நான் இறுதி பக்கத்திலிருந்து முதல் பக்கம் வரை புரட்ட ஆரம்பித்தேன்.

அங்கு அந்த டீக்கடைக்காரர் (நான் டீ ஆர்டர் செய்த அக்காவின் கணவர்) அருகினில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவரை நாற்காலியில் அமர்த்திக் கொண்டு எதையோ பேசுவது போல் எனக்குத் தெரிந்தது. இவர் உசிலைமணி போல் இருந்ததால் அவர் அருகில் இருந்தவரை நன்றாகப் பார்க்கவே முடியவில்லை. ஏதோ உறவினர் வந்து உள்ளார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பது போல் தெரிந்தாலும் அந்தக் கடைக்காரர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவினர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து ஒரு சத்தத்தையும் காணவில்லை.. ஆனால் மாறாக அவர் கேட்பவைகளுக்கு அவரின் மனைவியிடம் இருந்து கொஞ்சம் உரக்கமாவே பதில் வந்தது. அரசல் புரசலாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என் கையில் இருந்த வடையும் தீர, அந்த அக்கா என் அருகில் உள்ள பெஞ்சில் டீயை வைத்து விட்டு ஏப்பா.... இந்தா.... டீ... எடுத்துக்கோ... என்று சொன்ன பாணியிலேயே, அந்த கணவன் மனைவிக்குள் கொஞ்சம் சண்டை என்று சுதாரித்துக் கொண்டேன்..

ஆனால் இறுதி வரை அந்த மூன்றாவது ஆள் எதற்கு அங்கு வந்திருக்கின்றார், ஏன் பேசவே இல்லை என்ற கேள்வி ஒரு பக்கமாக என் மூளையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவருடைய திருமுகத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், என் கையில் இருந்த டீயும் முடிய, என் ஆறடி உடலை அப்படியே எழுப்பி, இன்னும் கொஞ்சம் காலால் உந்தி அரை அடி சேர்த்து கொஞ்சம் கழுத்தை உயர்த்தி எட்டிப் பார்த்தேன்.. அந்தக் கணப் பொழுதில்

லொல்....... லொல்....... லொல்...... லொல்......

என்று சத்தம் காதைக் கிழித்தது. கொஞ்சம் கண்ணைத் தேய்த்து நன்றாக உத்துப் பார்த்தால்தான் தெரிந்தது, அது  வெள்ளை நிறத்தில் பொசு பொசுவென்றிருந்த பொமரேனியன் நாய்.. அந்த நாயைப் பார்த்து என் மனதில் கேட்டுக் கொண்டேன் ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது, என்னைப் பார்த்ததற்கு அப்புறம் தான் பேசனுமா (!)??? .



பிறகு அந்த டீ, வடை இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டு கடையை விட்டு நடையைக் கட்டினேன். நிறைய கணவன் மனைவி சண்டை பார்த்த எனக்கு இந்தச் சண்டை கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது..

இந்த நிகழ்வில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அந்தக் கடைக்காரர் அந்த நாயை நன்றாக சலவை செய்ததோடு (!), கடைக்குள்ளேயே ஒரு நாற்காலியில் அமர வைத்தது, அதோடு உரையாடியதும்தான்...

ஈரோடு புத்தகத் திருவிழா 2013 - துவக்க நாள் 03.08.13



ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா தொடர்ந்து 9-ஆம் ஆண்டாக நேற்று ஆகஸ்டு 3- ஆம் தேதி துவங்கியது.. இவ்விழா வரும் 14-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது..

புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ஆகஸ்டு 3-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது என ஏற்கனவே அனைவருக்கும் அழைப்பிதழ் விடப்பட்டிருந்தது.. ஏற்கனவே மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலத்தில் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான ஒரு சிறிய சந்திப்பில் எனக்கு விழா அழைப்பிதழ் நேரிலேயே கிடைக்கப்பெற்றது..


திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடனான சந்திப்பில் நானும், தோழர்களும்

   மிகச்சரியாக நேற்று (03.08.13) மாலை 5.30 மணிக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்தார்கள்.

அரங்கின் முன்புறத் தோற்றம்




திரு.பி.சதாசிவம் அவர்கள் அரங்கினைத் திறந்து வைத்து புத்தகங்களைப் பார்வையிட்ட பொழுது    நன்றி :தினமணி (புகைப்படம்)

இதை அருகினில் இருந்து பார்த்த பாக்கியம் எனக்குக் கிடைத்தது என்பது எனக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பம்சமிக்க முக்கிய நிகழ்வாகவே என் மனதில் பதிவானது...

விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.. வரவேற்பு மற்றும் விழா அறிமுக உரையை ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தூய தமிழில் தன் கணீர் குரலில் மேற்கொண்டார்..
திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் உரை நிகழ்த்திய பொழுது


திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசியதில் சில முக்கியத் துளிகள்:


          -- இந்த ஆண்டு சென்ற ஆண்டைக் காட்டிலும் 25 அரங்குகள் கூடுதலாக மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

        -- மிகவும் தரமான புகழ்மிக்க அகில இந்திய மற்றும் மாநிலஅளவிலான தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர்.

      -- 150 தமிழ்ப் புத்தக அரங்கங்களும் 68 ஆங்கிலப் புத்தக அரங்கங்களும் 17 கல்விக் குறுந்தகடுகளுக்கான அரங்கங்களும் இந்த ஆண்டு இடம் பெறுகின்றன.

       --புத்தகம் வாங்குவதற்கு பள்ளி மாணவர்களுக்கான உண்டியல் திட்டம், ரூ.250க்கும் மேல் புத்தகம் வாங்கும் மாணவர்கள் அனைவருக்கும் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழ் வழங்கும் திட்டம்..

     -- இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. வாசகர் வட்டம், படைப்பாளிகள் மேடை, அரிய புத்தகக் காட்சி ஆகியவை இவற்றுள் முக்கியமானவை..

அடுத்தபடியாக ஈரோடு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவரான பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் விழாவின் சுருக்கமான வாழ்த்துரையையும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வே.க.சண்முகம் அவர்கள் விழாவின் தலைமை உரையையும் தெள்ளத் தெளிவான தமிழ் மொழியிலேயே தங்களுக்கே உரித்தான பாணியில் உரையாற்றினார்கள்..

அடுத்ததாக மாண்புமிகு நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் உரை நிகழ்த்த வந்தார்..

நீதியரசர் பி.சதாசிவம் அவர்கள் பேசியதில் சில முக்கியக் குறிப்புகள்:

         
            நான் மேல்நிலை வகுப்பு வரை தமிழ் மொழியில்தான் பாடம் பயின்றேன்.

        அதன் பிறகு சட்டம் பயிலும் போது ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து கொண்டு ஆங்கில நாளிதழ் வாசிப்பதிலும், ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும் முழு கவனம் செலுத்தினேன்..

       அதன் பிறகு அவருடைய நீதிமன்ற பயணங்கள் வழக்கறிஞர் முதல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உயர்ந்தது வரை அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கினார்...

       அறிஞர்கள் வருகைக்கும், தங்களின் குழந்தைகளின் பிறந்த நாள் பரிசாகவும் இனி புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டார்..

        இன்னும் பல்வேறு பயனுள்ள தகவல்களை அனைவரும் பயனுறும்படி தெளிவாகப் பேசி, தன் உரையை முடித்தார்..


   விழாவில் பல அறிஞர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பல ஊர்களைச் சார்ந்த பொது மக்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்..


வழக்கம்போல் இத்திருவிழாவில் வாங்கப்படும் நூல்கள் அனைத்திற்கும் 10% சிறப்புக்கழிவு உண்டு.. நூலகங்களுக்கும் கல்வி நிறுவனங்ககளுக்கும் வாங்கப்படும் நூல்களுக்கு கூடுதல் கழிவு உண்டு..



நானும் கடந்த வருடம் போலவே எண்ணிக்கையில் கொஞ்சம் அதிகமாகவே புத்தகங்களை வாங்கி வந்தேன்.. அடுத்த வருடத்திற்குள்ளாகவே அனைத்து நூல்களின் புது மை வாசம் நீங்கி, என் கை பட்டுவிடுமென்றால் அதைவிட சிறந்த சாதனை வேறொன்றுமிருக்க வாய்ப்பில்லை... 


புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த மக்கள் கூட்டம்



புத்தகத் திருவிழாவில் நான்