Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

மழை எங்கள் உயிருக்கு மேல்...

மழையைக் கண்ணில் பார்த்து பல நாள் ஆயிற்று.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஐயாவையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பல நாள் ஆயிற்று. வழக்கமா ஆவணி புரட்டாசி மாதங்களில் பெய்யும் பருவ மழையும் கடந்த வருடம் பெருமளவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டது. பெய்த ஒரு சில இடங்களிலும் கூட இன்றைய தேதியில் வறட்சியே நிலவுகிறது. கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் முன் கூட்டியே கோடையின் தாக்கம் மிகக் கடுமையாகவே உள்ளது. காலை பதினொரு மணிக்கு மேல் வெளியில் இந்த வெயிலில் செல்வது என்பது மிகக் கடினமான செயலே.

பச்சை பசேலென இருந்த புல்வெளிகளையெல்லாம் தற்போது பார்க்கும் போது கண்ணிற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மழை இந்த வருடமேனும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை ஓடிக்கொண்டுதான் உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் பல விவசாயிகள் பலர் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய பாசன அணையான மேட்டூர் அணையானது சென்ற வருடம் நிரம்பினாலும் தற்போது அதில் ஐம்பது அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருப்பதால் இந்த வருட விவசாயத்தின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நம் கண் முன்னே நிற்கிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக தண்ணீர் மட மடவென குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை குறைவாகப் பெய்யினும் கூட கர்நாடகத்தில் கனிசமான மழை இருப்பின் டெல்டா மாவட்டங்களுக்கு எப்படியோ நீர் கிடைத்து விடும்.

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பவானி சாகர் அணை. இந்த அணையிலும் தற்போது நீர் இருப்பு ஐம்பது அடிக்கும் குறைவாகவே உள்ளது. நீர் வரத்தும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதே போல் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும் முக்கிய அணையாக இருப்பது பொள்ளாச்சி ஆழியார் அணை. இதிலும் மற்றவைகளைப் போலவே தண்ணிர் மிகக் குறைவான இருப்பே உள்ளது. இந்த வருடம் மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ள தென்னை மரங்கள் வறலும் நிலை ஏற்படக் கூடும். ஏற்கனவே மழை குறைவின் காரணமாக சில பகுதிகளில் தென்னை வறண்டு காட்சியளிக்கிறது. தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும்.

வருண பகவானுக்கு இணையத்தில் ஒரு கணக்கிருந்தால் அதில் மழை வேண்டி விண்ணப்பங்களே குவிந்து கொண்டிருக்கும். மற்ற பொருள்களை இணையத்தில் வாங்குவது போல் இந்த மழையையும் வாங்கும் விஞ்ஞான நம் கையில் இருந்தால் அணைவரும் கணினியின் முன்னே அமர்ந்து கொண்டு ஆஃபர் விலையில் கிடைக்கிறதா என ஆராய்ச்சி செய்து கொண்டே வாங்க முயற்சித்துக் கொண்டிருப்போம். என்ன செய்ய? இந்த மழைக்காகவேனும் கடவுளை நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. அவரிடம் தான் முறையிட வேண்டியுள்ளது.



மரங்களையெல்லாம் நாம் தான் வெட்டுவோம். புதிதாக ஒரு மரங்கள் கூட நட்டு வளர்க்க மாட்டோம். அவ்வப்போது பெய்யும் மழையையும் கூட மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து சேமிக்க மாட்டோம். இருந்தாலும் அந்தக் கடவுள் மட்டும் மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும் என்று அதற்கே கட்டளையிடுவோம். மழை பொய்த்து விட்டது அதன் மீதே பழியை சுமத்துவோம். ஏனெனில் நாம் மனிதன். ஆறறிவு கொண்டவனாம்.

கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது மழை வந்து சென்றாலும் அது விவசாயம் செழிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரளவிற்காவது தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் என்று மற்றவர்களைப் போலவே நானும் நம்பிக்கொண்டே இருக்கின்றேன்..


பயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயனளிக்குமா பண்ணைக் குட்டை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாகக் கூட இந்தக் கட்டுரையை வைத்துக் கொள்ளலாம். மழை இவ்வளவு விரைவில் எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நாங்கள் அமைத்திருந்த பண்ணைக் குட்டை முழுவதும் தண்ணீர் நிறைந்தது எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு இயற்கை அளித்த இந்த மழை, கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த அந்த நாட்கள் நிறைவேறியது போல ஒரு மன மகிழ்ச்சி.

மழை நீர் சேகரிப்பு பற்றி பல ஊடகங்கள் வாயிலாக நமது அரசாங்கமும், பல சமூர்க ஆர்வலர்களும் அவர்களால் இயன்ற வரை மக்களிடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் மக்கள் இதை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நாட்களில் மக்கள் குடி நீருக்குக் கூட குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் செல்வதும், தண்ணிரை தொலைவிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நிலையும் உள்ளது. ஆனால் மக்கள் முழு மனது வைத்து மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும். அதனால் நீர் வளமும் உயரும். குடி நீர் பிரச்சினை என்பது நம்மை நெறுங்க முடியாத அளவிற்கு நம்மை நாமே காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அருகாமையில் நிரம்பிய ஏரி ஒன்றின் புகைப்படம்


மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர வைக்க அப்படியொரு அருமையான திட்டம் தான் இந்த பண்ணைக் குட்டை திட்டம். அதிகமாக மழை பெய்யும் நாட்களில் மழை நீர் வீணாக ஆறுகளில் சென்று கலப்பதன் மூலம் மழை பெய்யும் இடங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வது சந்தேகம் தான். மாறாக முடிந்த வரை மழை நீரை அந்தந்த இடத்திலேயே இது போன்று பண்ணைக் குட்டை அமைத்தும் நீரை முழுவதுமாக பூமிக்குள்ளேயே செலுத்தலாம். இதன் மூலம் கிணறுகளும், ஆழ் துளைக் கிணறுகளும் மிக விரைவிலேய பயன் பெறும்.


 நிரம்பிய பண்ணைக் குட்டை


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்கள் ஊரில் பெய்த கன மழையால் நாங்கள் ஏற்படுத்தியிருந்த இந்த பண்ணைக் குட்டை முழுவதும் நிரம்பியது. இதன் காரணமாக அருகாமையில் இருந்த கிணறும், ஆழ்துளைக் கிணறும் இரண்டு நாட்களிலேயே பயன் பெற்றது என்பது நெகிழ்ச்சியான தருணம் தான்.

நாம் நம்முடைய எதிர்கால வாழ்விற்கு பொன், பொருள் சேமித்து வைப்பது மட்டுமல்ல நீரையும் சேமித்து வைப்பது இன்றைய சூழலுக்கு மிக மிக தேவையான ஒன்றே..


--------------------------------

பயனளிக்குமா பண்ணைக் குட்டை???

தலைப்பிலிருந்தே உங்களுக்கு ஓரளவு யோசனை தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்.. இது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் தான். இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டம் பற்றி வீடு தேடி வந்து அரசாங்க அதிகாரிகள் எங்கள் தோட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவிலேயே ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள்.

முதலில் கொஞ்சம் யோசித்த பின், மழை நீரை சேகரிக்கும் திட்டம் தானே, இதனால் நிலத்தடி நீர் மட்டம் தானே பெருகப் போகின்றது என்று நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். திட்டத்தின் மதிப்பீடு ரூ.36000 என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்தே முழு பணியும் செய்து தருகின்றோம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கும் இரண்டு குச்சிகளை நட்டி கயிற்றைக் கட்டி பங்கு பிரித்துத்தான் வேலை செய்வார்களே என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.

திட்டமும் தொடங்கியது. இது குழி பறைக்கும் வேலை என்பதால் நல்ல வேளையாக அந்த அளவு குச்சிகளை நடாமல் அவர்கள் வேலை செய்தது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. இந்த வேலையை மேற்பார்வையிட்டு அவர்களிடம் சரியாக வேலை வாங்குவதற்கும், ஆட்கள் வருகை பதிவு கணக்கை எழுதுவதற்குமாக இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியையும் சிறப்பாக செய்தனர்.


வேலை நடைபெறும்போது பார்வையிடும் என் தந்தை


திட்டமும் ஒரு வாரத்தில் நிறைவு பெற்றது. சராசரியாக 45x45x2 அடி என்ற விகிதத்தில் குட்டையும் அமைக்கப்பட்டது. எப்படி கணக்கு போட்டாலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம் என்று மன நிறைவைப் பெற்றுக் கொண்டோம்.

திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறியது. எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது தான் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் வானம் பார்த்த பூமியாகவே உள்ள எங்கள் தோட்டத்திற்கும் வருணன் வழி விடுவான் என்று நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.

கலைஞர் ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்பட்டது, அம்மா ஆட்சியில் எங்களுக்காக ரூ.36000 செலவு செய்யப்பட்டுள்ளது. (JCB விட்டு வேலை செய்திருந்தால் 5000 தானே ஆகியிருக்குமென்று யாரும் கேட்டு விடாதீர்கள்.)

ஏழு கோடிக்கும் மேல் வாழும் இந்த தமிழகத்தில், எங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இவ்வளவு செலவு செய்திருப்பது அதிசயம் கலந்த ஆச்சர்யமும் தான். ஆகையால் முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் முதலமைச்சருக்கும் லட்சோப லட்ச நன்றிகள்..