நான் யமனானேன்..


எவன் செய்த கொடுமையாலோ
குடிபெயர்ந்த குருவியொன்று
என் வீட்டுக் கூரையிலே
தன் கூட்டினைத்தான் பின்னி வைத்து

தன் நெஞ்சம் நெகிழ்ந்திடவும்
தன்னினமும் வளர்ந்திடவும்
கருமுட்டையொன்றை அதிலிட்டு
அடைகாத்து வாழ்ந்துவர

அதை நானறியாது குப்பையென்று
குச்சி வைத்து தள்ளிவிட
குப்பென்று விழுந்த முட்டை
பட்டென்று சிதறிவிட

சட்டென்று பறந்த பட்சி
இமைப்பொழுதில் கண் மறைய.,
இப்படியும் நான் யமனானேன்
எருமை வண்டி யேறாமல்.

வைராக்கியமான 'வைக்கம் விஜயலட்சுமி'

வசை பாடும் மனிதர்கள் கூட இதமான இசைக்கு மயங்கியே ஆவார்கள். இசையை ரசிக்காத உயிரினமே இருக்க முடியாதெனலாம். அதிலும் நாம் மனித இனமாயிற்றே. நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா, என்ன? ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் என்று பலவற்றைக் கூற முடியும். அந்தப் பாடலின் இசை, வரிகள், பாடிய விதம், பாடலில் இடம் பெற்ற காட்சிகள் என ஏதாவது ஒன்று நம் மனதை வருடியதாகவோ நமக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ இருக்கும். பல நேரங்களில் நம்மை அறியாமலேயே பயணங்களில், தனிமையில் நமக்கு பிடித்தமான பாடல்களை நம் வாய் முனக ஆரம்பித்து விடுகிறது.

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் படங்கள் மற்றும் பாடல்கள் வெளிவரும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் வெளிவரும் அனைத்துப் பாடல்களையும் சினிமா துறையில் இருப்பவர்களே கேட்பது அபூர்வம் தான். அதனால் சராசரி மக்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்க வாய்ப்புள்ளது என்பதும் தவறே. மிகச்சிறப்பாக வந்த பாடல்கள் கூட சில நேரங்களில் மக்களிடையே வெற்றி பெறாமல் போவதுமுண்டு. இதற்குக் காரணம் மக்களை முழுமையாய் அந்தப் பாடல் வந்து சேராததாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் புதுமுகங்கள் பலரது நடிப்பால் வெளிவரும்/வெளிவந்த படங்களாக இருக்கலாம்.

மிகப்பெரிய போட்டிகள் கொண்ட சினிமா உலகில் மிகச்சாதாரணமாக எந்த ஒரு நபராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். திறமையும் விடா முயற்சியும் தொடர்ந்து போராடும் குணமும் கொண்டுள்ளவர் தான் மிகப் பெரிய சிம்மாசனத்தைத் தொட முடியும்.

அதிலும் முகம் அதிக அளவில் தெரியாத இசைத்துறையில் மிகப் பெரிய இலக்கை எட்டுவது எளிதான செயல் அல்ல. இன்னும் குறிப்பாக பாடகர் முகம் பிரபலமடைவது குறைந்தபட்சம் பத்து வெற்றிப் பாடல்களுக்குப் பிறகுதான். தற்போது வெளிவரும் பெரும்பாலான பாடல்களில் குரலின் ஆதிக்கம் குறைந்து இசையின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பாடலைப் பாடியவர் யாராக இருக்கும் எனக் கணிப்பதும் பெரும் சிரமமே.

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான செல்லுலோய்டு என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்டே காட்டே என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலரது கவனத்திற்கும் வந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறவியிலேயே கண் பார்வையற்றுப் பிறந்தவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிகம் பதிய அவசியப்படாது. அவரது குரலில் இதுவரை வெளிவந்த தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது நம் மனதை பிசக வைக்கிறதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்மூடி ரசித்தால் கண்ணீரையும் வர வைக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.


இவரது குரலில் ஏற்கனவே வெளிவந்த செல்லுலோய்டு மலையாளப் படத்தின் காட்டே காட்டே என்ற பாடல் தமிழில் காற்றே காற்றே என்ற பழனிபாரதியின் வரிகளோடு இவரது குரலால் பாடலாக்கப்பட்டது. அந்தப் பாடல் பலரது மனதையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.


இவரது குரலில் தமிழில் மற்றுமொரு பாடலாக டி.இமான் அவர்கள் இசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் புதிய உலகை புதிய உலகை என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட பின்பு ஏற்பட்ட என் மனதின் நிலையை எந்த வார்த்தைகளாலும் அலங்கரிக்க முடியவில்லை. இதயத்தில் இன்னும் ஒரு ஈரம் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. பலமுறை கேட்ட பின்பும் மீண்டும் மீண்டும் கேட்கவே மனம் நாடுகிறது. உடலும் உடனமர்ந்து கேட்க இசைகிறது. இதற்கும் மேலாக இந்தப் பாடலில் இசையின் தாக்கம் அதிகம் இல்லாமல் இவரது இதமான குரலே மேலோங்கி நிற்கிறது. இந்தப் பாடல் பல தரப்பு மக்களையும் சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.

'புதிய உலகை' பாடலைக் கேட்க மற்றும் தரவிறக்க


இது போன்ற தருணங்களில் விஜயலட்சுமியின் பெற்றோர் தன் மகளுக்காக செய்த ஊக்கம் மிகவும் போற்றுதல் மற்றும் பாராட்டுதலுக்குரியது. உடலில் குறை என்று ஒரு போதும் தன்னை நினைக்காமல் விடா முயற்சி என்னும் வைராக்கியத்தோடு போராடி கோட்டயம் முதல் கோடம்பாக்கம் வரை தன் காந்தக் குரலோடு தன் முகத்தையும் பலர் அறிய வைத்த வைக்கம் விஜயலட்சுமியின் திறமை மென்மேலும் வளர வேண்டும். இவருக்கு கேரள அரசின் விருதுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் விருதுகளும் தேசிய விருதுகளும் உறுதியாக கிடைக்குமென்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்குவிப்போம்..

வாழ்த்துக்களுடன்

தினேஷ்...

‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு

வாசிப்பு என்பது என் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாவல், நாளிதழ், கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, தன்னம்பிக்கை நூல் என எதாவது ஒரு புத்தகத்தை தினசரி குறைந்தது பத்துப் பக்கத்தையாவது வாசித்த பிறகு தான் தூக்கத்திற்கே அடிக்கல் நாட்டுவது என் வாடிக்கையாகிவிட்டது. தினசரி வாசிப்பு என்பதால் ஒரே மாதிரியான புத்தகங்கள் ஒரு வித சலிப்பைக் கொடுக்கலாம் என்பதாலும், தற்போது வெளிவரும் புத்தகங்களின் மலைக்க வைக்கும் விலையாலும் நூலகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் உறுப்பினராக சேர்ந்துள்ள அரசு நூலகங்கத்தில் துறை வாரியாக புத்தகத்தைத் தேடிப் பிடிப்பது என்பதும் ஒரு ஆகச்சிறந்த சாதனையே. நேற்று சில புத்தகங்களை எடுக்கலாம் என்று நூலகத்திற்கு சென்று சிறிது நேரம் தேடிய போது என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் “ஒன்பதாம் திசை. இதற்கு முன்னர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய “ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம் என்ற கிரைம் நாவலை வாசித்தவன் என்பதால் இதுவும் கிரைம் நாவல் வகையைச் சார்ந்திருக்குமோ என்று எண்ணி உள் பக்கத்தைப் புரட்டிய போதுதான் தெரிந்தது இது ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று.

இல்லம் திரும்பிய பிறகு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் ஆசிரியர் ‘மல்லை தமிழச்சி என்று இருந்தது. நான் இது வரை அறிந்திடாத பெயர்தான் அது. ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை என்ற எதையும் வாசிக்காமல் நேரடியாக சிறுகதைக்குள் சென்றேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருப்பது பட்டியலைப் பார்த்ததுமே தெரிந்தது. புத்தகத்தை திருப்பிக் கொடுக்க 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் அனைத்தையும் படித்து விடலாம் என்று எண்ணித்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சிறுகதையே என்னைப் புத்தகத்தில் தன்வசப்படுத்தியது.

தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்து சிறுகதைகளையும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இடைவிடாது வாசித்து முடித்து விட்டேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருந்தாலும் ஒன்றோடொன்று ஒரு துளி கூட தொடர்பில்லாததால் சிறு சலிப்பு கூட ஏற்படாமல் வாசிப்பில் கட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அனைத்து சிறு கதைகளும் நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி, நாம் நேரில் கண்ட என ஏதாவது ஒரு வகையில் நம்மோடு தொடர்புடைய அல்லது நம் சொந்த வாழ்வின் எண்ணங்களின் பிரதிபலிப்பு போலவேதான் அனைத்துக் கதைகளும் இருந்தன. சமூகத்தைப் பற்றி முகத்திலறைந்து சொல்லப்பட்ட உண்மைகள் பல.


பிறகு இறுதியாகவே இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியது எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் என்பதைப் பார்த்தேன். படைப்புத்திறனும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையும் உடையது இவரது சிறுகதைகள். மனிதாபிமானமும் முற்போக்குக் கருத்துகளும் கொண்ட இவரது எழுத்துத்திறமை மேலும் மேலும் வளர்ந்து தமிழிலக்கிய உலகில் இவருக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென வாழ்த்துகிறேனென்றும் எழுதியுள்ளார்.

திரு ஜெயகாந்தன் சொல்வது போல் மல்லை தமிழச்சியின் கதைகளிலிருந்து அவருக்கு சமூகத்தின் மீது தெளிவான பார்வையும், முற்போக்கு சிந்தனையும் உள்ளதென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது நேர்த்தியான எழுத்துக் கோர்வை பாமர மக்களும் எளிதில் படித்து பொருளுணரும் படியான நடையில் உள்ளது. ஒவ்வொரு கதைக்கும் அவர் வாத்தைகளையும், சொற்றொடர்களை உருவாக்கக் கையாண்டுள்ள விதம் அவரது எழுத்தாளுமைக்கு அடையாளம். அனைத்து சிறுகதைகளிலும் யாதார்த்தமே மிகுதி.

வாசித்தபின்பு சமூகத்தின் மீதான அகன்ற பார்வையும் கூரிய தெளிவும் நமக்கும் வருமென்பதில் சந்தேகமில்லை. இந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்ள அட்டைப் படத்திற்காக வெகு நேரம் தேடினேன். எங்கும் கிடைத்த பாடில்லை. இறுதியாக அவரது முகநூல் முகநூல் பக்கதைக் கண்டுபிடித்து அந்தப் பக்கதிலேதான் ஒன்பதாம் திசை அட்டைப் படத்தையும் எடுக்க முடிந்தது.

இப்படியும் ஒரு அமைதியா!!

அவரது முகநூல் பக்கதிற்கு சென்றபோது எனக்கு ஆச்சர்யமும் அதே சமயம் அதிசயமாகவும் இருந்தது. வெறும் இரு வரிகளிலோ அல்லது துளி கூட சுவாரஸ்யம் இல்லாத பதிவுகளை இடுபவர்கள் கூட 5000 நண்பர்கள், 10000-க்கும் மேல் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் வெறும் ‘முன்னூத்தி சொச்ச நண்பர்களையும், நூறுக்கும் குறைவான பின் தொடர்பாளர்களையும் வைந்திருந்தது என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இவரது படைப்புகளான “விடியலே! விழித்தெழு!! (-வாழ்வியல் வழிகாட்டி நூல்), விழியில் நனையும் உயிர் (-கவிதை) , ஒன்பதாம் திசை (-சிறுகதைத் தொகுப்பு ) இந்த மூன்று புத்தகங்களும் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்மா பதிப்பகம் அரங்கு எண் 63 இல் கிடைக்கும் என்று அவர் முகநூலில் எழுதியிருந்த ஒற்றை நிலைத்தகவலை (அதுவும் ஜனவரி 17 அன்று) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அத்தோடு மட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் டிசம்பர் 19, 2013 காலை மலர் சிறப்பு விருந்தினர் பகுதியில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் சில நிலைத்தகவல் எழுதி இருந்தார். இதையும் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது வரை அந்தக் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றியதாகத் தெரியவில்லை.

இவர் “மல்லை தமிழச்சியின்கவிதைகள் என்ற வலைப்பூ ஒன்றையும் வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே வலைப்பூ உலகில் கால் வைத்த இவர் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் பதிவையும் அங்கு எழுதவில்லை. அவரின் வலைப்பூவிற்கு இன்றுவரை ஒரு பின் தொடர்பாளர்கள் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியே. தன்னைப் பற்றி சுயபுராணம் பாடும் மனோ நிலையில் அதிக பேர் உள்ள இந்த உலகில் இப்படியும் ஒரு பெண் எழுத்தாளரா என என்னை மலைக்க வைக்கிறது.

இவரைப் போன்ற எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்துலகிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியதுள்ளது. இப்போது அவருக்குத் தேவை நம்மைப் போன்றவர்களின் தொடந்த ஆதரவும், சிறந்த ஊக்கமுமே. இவரைப் போன்றவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்ற விருப்பம் எனக்குள் உள்ளது.

தொடர்க அவர் எழுத்துப் பணி, வளர்க அவர் தமிழ்த் தொண்டு.


வாழ்த்துக்களுடன்

தினேஷ்..

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்- பாரதி கிருஷ்ணகுமார்

எப்போதும் போல் அல்லாமல் எனக்கு இந்த வருடம் பொங்கல் மிக்க மகிழ்ச்சியானதாகவே இருந்தது. அதற்குக் காரணம் காங்கயம் தமிழ்ச்சங்கம் மூலம் காங்கயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சிதான். இன்னும் கூடுதல் சிறப்பாக நேற்று (15.01.14) மாலை நேர நிகழ்ச்சியில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் சிறப்புப் பேருரை இடம் பெற்றிருந்தது என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஆவணப்பட இயக்குநர் என்னும் ஒற்றை வரியில் மட்டும் கூறிவிட முடியாது. தமிழகத்தில் ஆகச்சிறந்த பேச்சாளர்களில், நான் மிகவும் மனதில் பதிவு செய்து வைத்துள்ள என்னைக் கவர்ந்த பேச்சாளர்களில் அவரும் ஒருவர். சமூகத்தின் மீது கொண்டுள்ள தீராத பற்றினால் சமூகத்தில் நடக்கும் அவல நிலைகளை தன் ஆவணப்படம் மூலம் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பவர். இவரின் இராமையாவின் குடிசை, என்று தணியும், எனக்கு இல்லையா கல்வி இந்த மூன்று ஆவணப்படங்களும் சமூக நிலைகளை அப்படியே பிரதிபலித்த படங்கள்.

நான் இவரைப் பற்றி அறிந்து கொண்டது திரு.ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் வலைப்பூவில் தான். கடந்த ஆண்டு (2013) ஈரோடு புத்தகத் திருவிழாவில் பேச இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது பேச்சைக் கேட்டே ஆக வேண்டும் என்ற கூடுதல் ஆர்வம் என்னுள் கலந்துவிட்டது. அந்த விழாவில் அவர் நன்றின் பால் உய்ப்பது அறிவு என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சுக்கள் என்னை மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரையும் கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஈரோட்டில் ஆகஸ்டு-2013 ல் உரை ஆற்றிய போது


காங்கயத்தில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் உரை:

நேற்று காங்கயம் கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போது தன்னைப்பற்றி ஒரு வார்த்தை கூட எதையும் சொல்லாமல் நேரடியாக பாவேந்தரின் வரிகளும், சிறப்புரையின் தலைப்புமான தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தலைப்பைப் பெறுமைப்படுத்த பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரான தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றி பாரதி எழுதிய பாடல் ஒன்றினைச் சொல்லி தன் உரையைத் தொடங்கினார். இவர் பேச ஆரம்பித்தது முதலே பேச்சில் கருத்தாழம் மட்டுமல்ல நகைச்சுவைகளும், உணர்ச்சிகளும் இருப்பதை எளிதில் உணர முடிந்தது.

உலகில் 6000 பேச்சு மொழிகள் உள்ளன. அதில் 130 முதல் 140 மொழிகளே எழுத்து வடிவம் பெற்றுள்ளன. அதிலும் மிகவும் பழமையான மொழிகள் சீனம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளே. ஆங்கில மொழி தோன்றி வெறும் 400 வருடங்களே ஆகின்றன. ஆங்கிலம் படிப்பதைத் தவறென்று கூறவில்லை. மாறாக தமிழையும் சரியாக எழுதாமல் ஆங்கிலத்தையும் சரியாக எழுதாமல் இரண்டும் கெட்ட அவல நிலையில் எழுதுவதையும், பேசுவதையும்தான் சொல்ல மனம் கூசுகிறது. தகராறு என்ற வார்த்தையை எழுவதிலேயே இங்கு எத்தனை பேருக்குத் தகராறு இருக்கிறது. சிறிய , பெரிய என்று சொல்லிக் கொள்வதில் வல்லினமும் மெல்லினமும் மறந்து பலவீனம் ஆகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பனிரெண்டாம் வகுப்பில் 1100க்கும் மேல் வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் கூட இன்று தமிழில் பிழையில்லாமல் எழுதுவதில்லை.

யாமறிந்த மொழிகளே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதி எழுதி இருக்கிறார் என்றால் வெறும் தமிழை மட்டும் கற்றுக் கொண்டு அவர் இதை சொல்லிவிட முடியாது. எழுத, படிக்க, பேச என மூன்று நிலைகளையும் கற்றுத் தேர்ந்தால் தான் எந்தவொரு மொழியையும் முழுமையாய்க் கற்றுத்தேர்ந்தவன் என்ற நிலையில் உணர முடியும். பாரதி அது போல 9 மொழிகளில் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதனால்தான் அந்த வரிகளை அவரால் சொல்ல முடிந்தது, மற்றவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது.

செடிக்கும் கொடிக்கும் ஓர் அறிவுநத்தைக்கும் சங்கிற்கும் ஈரறிவு, கரையானுக்கும் எறும்பிற்கும் மூன்றறிவு. நண்டுக்கும் வண்டுக்கும் நான்கறிவு, விலங்களுக்கு ஐந்தறிவு, ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு என்று மனிதனே வகுத்துக் கொண்டான் என்று அவர் பேசியதும் அரங்கத்தில் இருந்தோர் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். தன் சிரிப்பான பேச்சின் மூலமும் பலரது கவனத்தைக் கவர்ந்தார்.

தமிழ் மொழியில் மட்டும் தான் வினைச்சொல்லே தினையையும், பாலையும் கூறுகின்ற அற்புத மொழி. ஒன்றே முக்கால் அடிகளிலே அனைத்து கருத்துக்களையும் கொண்டுள்ள திருக்குறள் பிறந்தது தமிழ் மொழியில். ஆனால் இன்றைய நிலையில் வழக்காடு மன்றம், வழிபாட்டுக்கூடம் மட்டுமல்ல வகுப்பறையிலும் கூட தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். காலம் காலமாய் இருந்து வந்த பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய நிலையில் உள்ள கல்விமுறையில் மாற்றம் கொண்டு வருவதின் மூலம்தான் தமிழன் என்ற அடையாளத்தையும் நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் காக்க முடியும்.

 நேற்று (15.01.14) காங்கயத்தில் உரை ஆற்றிய போது


அம்மா. இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. உயிர் எழுத்தும், மெய் எழுத்தும், உயிர் மெய் எழுத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு அற்புத உணர்வு. இப்படி ஒரு சிறப்பு வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. நாம் கொண்டாடும் பொங்கல் வெறும் பண்டிகையோடு நின்று விடக்கூடாது. அது நம் பண்பாட்டின் அடையாளம். இயன்ற வரை பிறமொழி கலக்காமல் தமிழ் மொழியிலேயே பேசுவோம். தமிழ் மொழியின் மீது தீராத காதலும் பரந்த வாசிப்பும்தான் தமிழைக் காக்க நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை. பாவேந்தர் போல் தமிழை உயிருடன் ஒப்பிடுவதை விட வேறெந்த கௌரவமும் தமிழுக்கு செய்து விட முடியாது.

திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் உருவத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவர். அரங்கிற்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வந்த பணியினை சிறப்பாக செய்த அவருக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.

உலகம் அறிந்து உணர வேண்டிய படைப்பாளிகளில் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. வளர்க அவர் தமிழ் மற்றும் சமூகப் பணிகள்..


திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் வலைப்பூ: உண்மை புதிதன்று


நன்றிகளுடன்:

தினேஷ்...

2013- இது கடந்து போனாலும் இது போதும்


கடந்த ஆண்டு நினைவுகளை ஒரு வாரம் தாமதமாகவே பதிவிடுகிறேன். இதற்கு வேலைப்பளு, சோம்பேறித்தனம் எனக் காரணம் எது வேண்டுமானாலும் கூறலாம். நான் கடந்து வந்த 2013 ஆம் வருடத்தில் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், நான் சந்தித்த நிகழ்வுகள் பற்றியும் சுருக்கமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். இதில் விடுதலும் இருக்கலாம்.

2013 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு அதற்கு முன் நான் சந்தித்த புத்தாண்டுகளைப் போலவே வழக்கமான ஒன்றாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் பெரிதாய் இந்த வருடத்தில் (2013) நான் என்ன சந்தித்து விடப் போகிறேன்? பெரிதாய் எதைக் கற்றுவிடப் போகிறேன் என்ற எண்ணம்தான் என் மனதில் வடிந்து கொண்டிருந்தது. வழக்கமான நாட்களில் ஒன்றாகத்தான் ஒவ்வொரு நாளும் கழிந்து கொண்டே இருந்தது.

முகநூலில் முன்னர் இருந்தே கணக்கு வைத்திருந்தாலும் அதை படங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்வதற்கும் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தேன். நான்கு மாதத்திற்கு பிறகு தான் எதேச்சையாக திரு. ஈரோடு கதிர் அவர்களின் நட்பில் இணைந்(த்)தேன், பிறகு நான் எப்போதெல்லாம் என் முகநூலைத் திறக்கின்றேனோ அப்போதெல்லாம் அவருடைய பதிவுகள் என் கண்ணில் படாமல் போவதில்லை. அவருடைய பல பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக அவர் இரண்டு மூன்று வரிகளில் எழுதி பதிவிடுவது என்னுள் சிறு தாக்கத்தையாவது ஏற்படுத்தும்.

பிறகு மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் ஆமை போல் நானும் கொஞ்சம் கொஞ்சமாக என் சிறு சிறு பதிவுகளை முகநூல், Twitter, Google+ என அனைத்திலும் பதிய ஆரம்பித்தேன். அதிலிருந்து இன்று வரை தொடர்ந்து இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை மிகவும் பெருமையாகவே நினைக்கின்றேன். புதிதாய் பல நட்புகள், தொடர்பிலில்லாமல் இருந்த பழைய பல நட்புகள் முகநூல்,  Twitter மற்றும் Google Plus மூலமாகவும் கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சியையும் பட்டியலிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

மற்றொரு முக்கியமான நிகழ்வு என்னவென்றால் என்னுள் மிதமாக இருந்த வாசிப்பு பழக்கம் இன்னும் மிகையாக மாறி என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன் நிறுவனர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களையுமே சாரும். மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் மிகவும் சிறப்பாக தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற ஈரோடு புத்தகத் திருவிழா மட்டும் இல்லையென்றால் என்னுள் வாசிப்பு விதை தூவப்பட்டிருக்குமா என்று நினைக்கவே ஒரு கணம் மனதில் கனம் உண்டாகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சிறு கலந்துரையாடல் சந்திப்பில் முதன் முதலில் அவருடன் நேரில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கேட்ட அவருடைய நேர்த்தியான பேச்சின் மூலம் இன்னும் அதிகம் அவரால் கவரப்பட்டு அவருடைய பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளை இணையத்தில் தேட என்னுள் ஆர்வம் சற்று அதிகமாகவே தொற்றிக் கொண்டது.இணையத்தில் கிடைத்த அவரது காணொளித் தொகுப்புகளைக் கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்து ரசித்து விட்டேன். 01.01.14 அன்று அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும், அவரருகில் அமர்ந்து உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்ததால் அவரின் பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளைப் பார்த்தது பற்றிக் கூறினேன். அவருடைய முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

அவ்வப்போது வலைப்பூவில் எழுதி வந்தாலும் முகநூலில் இரண்டு வரிகள் எழுதும் அளவிற்கு வலைப்பூவில் எழுதுவதில்லை என்பதுதான் உண்மை. இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மற்றுமொரு நெகிழ்வான தருணம் என்னவென்றால் மூன்று முறை என் பதிவு (இரண்டு வரி பதிவுகள்) குங்குமம் வார இதழில் வலைப்பேச்சு பக்கத்தில்  இடம்பெற்றதுதான். அந்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தையாலோ அல்லது எழுச்சி மிகு எழுத்துக்களாலோ அளவிட முடியாதது. இந்த நிகழ்வால் என் மனக்குதிரைக்கு இன்னும் கூட தீனி இதனால் கிடைத்ததென்றுதான் சொல்ல முடியும்.

இந்த செயலைச் செய்வதற்கு முதலில் கொஞ்சம் தயக்கமாகவோ இருந்தது. விமர்சனங்கள் நிச்சயமாம வரும் என்று துணிந்தும் வருடத்தின் இறுதியில் முழு மனதாக “Blogger” (!!!) என்று முகநூலில் என் சுய விபரத்தில் பதித்து விட்டேன். புதிய நட்புகள் பல கிடைத்த வருடம், தொடர்பில் இல்லாமல் இருந்த பழைய நட்புகள் மீண்டும் கிடைத்த வருடம், நான் இணையத்தில் எழுத, வாசிக்க ஆரம்பித்த வருடம் அன்று பட்டியலிட்டுக் கொண்டாட வேண்டிய அந்த வருடம் எனக்கு ஒரு பொக்கிஷமே.




காய்ந்த நிலமாய்க் கிடந்த என் மனதை உழவிட்டு என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த இந்த 2013ஆம் வருடம் எப்படியோ கடந்து விட்டதென்றாலும் இத்தனை நினைவுகளை கல்வெட்டாய் என் மனதில் பதித்தமையால் இது போதும்..