டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து
கொண்டே வருகிறது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி கடும் உயர்வு.
அடுத்த பிரதமருக்கு தகுதியானவர் யார். நாட்டில் கொலை, கொள்ளை பெருகி விட்டது. இது
போன்ற பல பேச்சுகளை சாதாரண மக்களும் பேசும் வகையில் விஞ்ஞானம் மக்களுடன் பின்னிப் பிணைந்துவிட்டது
என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
வட மாநிலத்தில் பலத்த மழை
பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிகின்றது. தமிழகத்தின் பெரும் பகுதிகளில் ஒரு துளி
கூட மழை இல்லாமல் பல வகையான மரங்கள் எல்லாம் காய்ந்து விழுகின்றது. குடிநீர்
விநியோகம் முறையாகச் செய்ய வேண்டி மக்கள் சாலை மறியல். தொழிற்சாலையில் இருந்து
வரும் புகையால் அதன் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு உடல் ரீதியாக பல
பிரச்சனைகள் வருகின்றதாகவும், உடனே அதற்கு சீல் வைக்கக் கூறியும் மக்கள் கலெக்டர்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போன்ற பல செய்திகளும் பலதரப்பட்ட மக்களும்
எளிதில் வாசிக்கும் விதமாக எல்லா நாளிதழ்களிலும் ஏதாவது பக்கங்களில் அன்றாடம்
வந்து விடுகின்றது.
காங்கயத்திலிருந்து
திருப்பூர் நோக்கி காலை வேளையில் இரு சக்கர வாகனத்திலே பயணம் செய்கின்றேன். பல
கனவுகளைச் சுமந்து கொண்டு வேலைக்குச் செல்ல பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டம் ஒரு பக்கமும், பல ஆசைகளை மனதிலும், கனமான அந்த புத்தக மூட்டையை
முதுகிலும் சுமந்து கொண்டு பள்ளிப் பேருந்திற்காக நிற்கும் மாணவ மாணவிகள் கூட்டம்
மறு பக்கமும் கண்ணில் தென்படுகிறார்கள்.
காலை பத்து மணிக்கு திறக்கும்
கடைக்காக எட்டு மணிக்கே கடைக்கு அருகாமையில் வந்து, கடைக்காரரின் (டாஸ்மாக்)
வருகைக்காக காத்துக் கொண்டிருப்போர் கூட்டமும் எப்பொழுதும் குறைவதே இல்லை. பல விளை
நிலங்கள், விலை நிலங்களாக பல வித்தியாசமான பெயர்களில் நகரங்களாகவும் மாறிக்கொண்டு
வருவதும் வழக்கமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தங்கள் வீட்டுக்
குப்பைகளை ரோட்டோரத்திலும், நொய்யல் ஆற்றின் அருகாமையிலும் கொட்டும் பழக்கத்தையும்
மக்கள் எப்பொழுதும் போலவே நமக்கென்ன என்ற மனநிலையோடவே செய்து கொண்டிருப்பதையும்
காண முடிகிறது.

அந்தக் குப்பைகள் எல்லாம்
அடிக்கின்ற காற்றிற்கு அருகில் உள்ள வீடு, காடு என அனைத்தையும் விட்டு வைக்காமல்
சுழன்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் 80% மக்காத பாலித்தீன் பைகளே அதிகம்
உள்ளது. அந்த பாலித்தீன் பைகளின் தன்மைகளைப் பற்றி அரசாங்கம் தன்னால் முடிந்த வரை முன்னர்
குறிப்பிட்ட அதே ஊடகங்களில் தான் விளம்பரம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் குப்பைகள் எல்லாம்
எப்பொழுது அழியும்? எப்பொழுது நம் மக்கள் புரிந்து கொண்டு சுயமாக சிந்தித்து
செயல்படுவார்கள்? சமூகம் என்பதில் தான் நாமும் இருக்கிறோம் என்பதை எப்பொழுது
உணர்வார்கள்? என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளேயே கேட்டுக் கொள்ளப்பட்டன.
உள்ளூர் செய்திகள் முதல்
உலக நிகழ்வுகள் வரை ஆராய்ந்து அலசும் நாம் வீணாக எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தையே
குற்றம் சாட்டாமல், இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பது பற்றி நாமே உணர்ந்து
செயல்படுதல் தான் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாக இருக்க முடியும்...
.
.