*
பேருந்துப் பயணத்தில் ஜன்னலோர
இருக்கையில் தாயின் கையில் கைகளை அசைத்தபடியே அழும் பச்சிளம் குழந்தை. பின் இருக்கையில் கொஞ்சம் படபடப்புடனேயே நான்.
*
மன நலம் பாதிக்கப்படுவது
மரணத்திலும் கொடுமை. அவர்களை அனாதையாய்
விடுவது அதனினும் கொடுமை..
*
சில நெகிழ்வான தருணங்களில்
திடமாக உள்ள நெஞ்சமும் திரவமாக மாறுவதின் அடையாளம் தான் கண்ணீர்..

*
மிரண்டு போகும் பயம், மிரள வைக்கும் துணிச்சல் இவை இரண்டுமே இரவில் எளிதில்
சாத்தியம்...
*
வென்றே ஆகவேண்டுமெனத்தானே
இவ்வளவு ஒப்பனைகளும், ஒத்திகைகளும்...
*
தீர்மானம் நிறைவேற்றுவது
மட்டுமல்ல, அந்தக் காரியத்திலே மிகத் தீர்மானமாக இருப்பதும் மிகவும்
சிறப்பு..
*
எறும்பின் தாகத்தை
எண்ணெய்தான் நன்கு அறியும்..
*
ஒன்றின் கெடுதலிலிருந்து
காத்துக்கொள்ள மற்றொன்றைக் கொண்டு வருகிறோம். அதன் கெடுதலை உணர்ந்தும், உணராமலும்...
*
தான் நோய் நொடி இல்லாமல்
வாழணும், தன் வியாபாரம் சிறக்கணும் என கடவுளை வேண்டி கடையைத்
திறக்கிறான் மருந்து வியாபாரி.
*
சரக்கு என்ற சொல்லை
மதுவிற்காகப் பயன்படுத்தும் போதுதான் அந்த வார்த்தை முழுமையடைந்ததாய் உணரும் பல
குடிமகன்கள்!
*
பக்கத்து வீட்டுப்பையன்
பத்தாம் வகுப்பென்பதால் பலத்த குரலில் படித்துக்கொண்டே இருக்கிறான், கணிதப் பாடத்தையும் சேர்த்து.. #இன்றைய_கல்வி.
*
எந்தக் கடையிலும்
கிடைக்கப்பெறாத உத்வேக மருந்து..
-♥ அவள் கடைக்கண் பார்வை ♥
*
பல நிகழ்வுகளைக் கடந்தாலும்
நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்க்கை ரதத்தில் பயணிக்கிறோம்..
*
விருப்பமில்லா பொறுப்புகளைத்
திணிப்பதன் மூலம் வெறுப்புகள்தான் வேரூன்றி வளரத் தொடங்குகிறது...
*
மனதிற்கு மருந்தாக சிறிதளவேனும்
சமாதானம் நித்தம் தேவைப்படுகிறது.
*
பனித்துளிக்குள் பகலவன் பளபளப்பாய்ச் சிரிக்கிறான்., எமன் தானென்று
அறியாமல்.
*
குறைந்தபட்ச தண்டனையாக மரண
தண்டனையே விதிக்கப்படுகிறது கொசுவிற்கு..
*
நிழல் கூட எப்போதும்
உன்னுடனேயே வர வேண்டுமென்றால் அது வெளிச்சத்தின் ஒத்துழைப்பால்தான் சாத்தியம்...
*
இங்கிலிஷ் மட்டுமல்ல
இங்கிதமும் தெரிஞ்சுக்கணும்...
*
அநாயாசமாக செய்து
முடிப்பவனுக்கு அனுபவம் மட்டுமல்ல அவன் வித்தியாசமான அணுகுமுறை கூட காரணமாக
இருக்கலாம்.
*
ஔவியம் அழித்தலும் ஆகச்சிறந்த
சாதனையே..
*
வாய்ப்பு வாசல் வர வேண்டுமென
நினைப்பது ஆசை என வைத்தால், வாயிற்கதவு வரை வர வேண்டுமென
நினைப்பது பேராசையே...
*
பண்டிகைகளை அழித்து வெறும்
விடுமுறையாய் (மட்டும்) எண்ணி தொலைக்காட்சியில் தொலைக்கிறோம்.
*
அலைபேசியில் ஐந்தாறு
மொழிகளில் அநாயாசமாக பேசிக்கொண்டு வருபவரின் அருகில் அவ்வளவு ஒரு அடக்க ஒடுக்கமாக
அசைவில்லாமல் நான்.. #பேருந்துப்பயணத்தில்
*