சிறுமியின் ஆசை ஆசை


தினசரி காலையில் பள்ளிப் பேருந்தை
      தவறாமல் பிடித்திட ஆசை

எட்டு பாடவேளையும் திட்டு வாங்காமல்
      நன்றாகப் படித்திட ஆசை

இடைவேளையிலே கடைக்குச் சென்று இனிதான
     மிட்டாய் கடித்திட ஆசை

விளையாடும் போது தோழியைக் கொஞ்சம்
     செல்லமாய் இடித்திட ஆசை

ஆண்டு விழாவில் சிவாஜி போல
     சிறப்பாய் நடித்திட ஆசை

காகிதக் கப்பல் செய்வதற்காக புதிய
     தாளை மடித்திட ஆசை

தீபாவளியில் திரியைக் கொளுத்தி குண்டு
     வெடியை வெடித்திட ஆசை

சீனியையும் தூளையையும் சமமாய்ப் போட்டு
     தேநீர் குடித்திட ஆசை

விரும்பிய அனைத்தையும் தமிழ் வார்த்தையில்
     மட்டும் வடித்திட ஆசை

வீட்டுக் கணக்கை நானே தீர்த்து விடையைப்
     பார்க்காமல் முடித்திட ஆசை

இத்தனை ஆசையும் பட்டெனப் பறந்தது
     மேசையின் சத்தம் சட்டெனக் கேட்டதும்...

பாலைவன பூமி இங்கே..


ஆடி மாசம் முடிஞ்சுருச்சு
ஆவணியும் பொறந்திருச்சு

காவிரியும் பெருகிருச்சு
கபினியும் தான் நெறஞ்சுருச்சு

வாய்க்கால்லயும் தண்ணி வந்துருச்சு
நாற்றங்கால்லயும் நெல்லு தூவியாச்சு


ஆனா.... இங்க...


தென்னையெல்லாம் வறண்டுருச்சு
பனையும் பாதி கருகிருச்சு

கிணறும் கீழே போயிருச்சு
மனசும் ஓடா ஒடஞ்சுருச்சு

கடவுளுக்கு கண்ணும் போச்சு
எங்களுக்கு மண்ணும் போச்சு

பலருக்கு பேச்சு போச்சு
சிலருக்கு மூச்சே போச்சு

சோலைவன கனவு போச்சு
பாலைவன பூமி ஆச்சு...

என்னவளே நீ எங்கிருக்கிறாய்?....



புவியில் உள்ள காற்றாக
மண்ணில் ஊறும் ஊற்றாக

பகலில் ஒளிரும் சூரியனாக
இரவில் மிளிரும் சந்திரனாக

செடியில் பூக்கும் பூவாக
பூவில் கலந்த மணமாக

குயிலிடும் கேட்கும் குரலாக
மயிலிடம் தெரியும் அழகாக

வானில் மின்னும் தாரகையாக
ஓவியம் வரையும் தூரிகையாக

விழியில் உள்ள ஒளியாக
உடலில் கலந்த உயிராக

என்னவளே இதில் நீ எங்கிருக்கிறாய்
வந்துவிடு நான் காத்திருக்கிறேன்...