வாசிப்பு என்பது என் அன்றாட
நிகழ்வுகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாவல், நாளிதழ், கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை,
தன்னம்பிக்கை நூல் என எதாவது ஒரு புத்தகத்தை தினசரி குறைந்தது பத்துப்
பக்கத்தையாவது வாசித்த பிறகு தான் தூக்கத்திற்கே அடிக்கல் நாட்டுவது என்
வாடிக்கையாகிவிட்டது. தினசரி வாசிப்பு என்பதால் ஒரே மாதிரியான புத்தகங்கள் ஒரு வித
சலிப்பைக் கொடுக்கலாம் என்பதாலும், தற்போது வெளிவரும் புத்தகங்களின் மலைக்க
வைக்கும் விலையாலும் நூலகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நான் உறுப்பினராக சேர்ந்துள்ள
அரசு நூலகங்கத்தில் துறை வாரியாக புத்தகத்தைத் தேடிப் பிடிப்பது என்பதும் ஒரு ஆகச்சிறந்த
சாதனையே. நேற்று சில புத்தகங்களை எடுக்கலாம் என்று நூலகத்திற்கு சென்று சிறிது
நேரம் தேடிய போது என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் “ஒன்பதாம் திசை”. இதற்கு
முன்னர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய “ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம்” என்ற கிரைம்
நாவலை வாசித்தவன் என்பதால் இதுவும் கிரைம் நாவல் வகையைச் சார்ந்திருக்குமோ என்று எண்ணி
உள் பக்கத்தைப் புரட்டிய போதுதான் தெரிந்தது இது ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று.
இல்லம் திரும்பிய பிறகு
புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் ஆசிரியர் ‘மல்லை தமிழச்சி’ என்று
இருந்தது. நான் இது வரை அறிந்திடாத பெயர்தான் அது. ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை
என்ற எதையும் வாசிக்காமல் நேரடியாக சிறுகதைக்குள் சென்றேன். மொத்தம் 17 சிறுகதைகள்
இருப்பது பட்டியலைப் பார்த்ததுமே தெரிந்தது. புத்தகத்தை திருப்பிக் கொடுக்க 15
நாட்கள் இருப்பதால் அதற்குள் அனைத்தையும் படித்து விடலாம் என்று எண்ணித்தான்
வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சிறுகதையே என்னைப் புத்தகத்தில் தன்வசப்படுத்தியது.
தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்து
சிறுகதைகளையும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இடைவிடாது வாசித்து முடித்து
விட்டேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருந்தாலும் ஒன்றோடொன்று ஒரு துளி கூட
தொடர்பில்லாததால் சிறு சலிப்பு கூட ஏற்படாமல் வாசிப்பில் கட்டிப் போட்டது அந்தப்
புத்தகம். அனைத்து சிறு கதைகளும் நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி, நாம்
நேரில் கண்ட என ஏதாவது ஒரு வகையில் நம்மோடு தொடர்புடைய அல்லது நம் சொந்த வாழ்வின்
எண்ணங்களின் பிரதிபலிப்பு போலவேதான் அனைத்துக் கதைகளும் இருந்தன. சமூகத்தைப் பற்றி
முகத்திலறைந்து சொல்லப்பட்ட உண்மைகள் பல.
பிறகு இறுதியாகவே இந்தப்
புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியது எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் என்பதைப்
பார்த்தேன். படைப்புத்திறனும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையும் உடையது
இவரது சிறுகதைகள். மனிதாபிமானமும் முற்போக்குக் கருத்துகளும் கொண்ட இவரது எழுத்துத்திறமை
மேலும் மேலும் வளர்ந்து தமிழிலக்கிய உலகில் இவருக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத்
தர வேண்டுமென வாழ்த்துகிறேனென்றும் எழுதியுள்ளார்.
திரு ஜெயகாந்தன் சொல்வது போல் மல்லை
தமிழச்சியின் கதைகளிலிருந்து அவருக்கு சமூகத்தின் மீது தெளிவான பார்வையும்,
முற்போக்கு சிந்தனையும் உள்ளதென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது நேர்த்தியான
எழுத்துக் கோர்வை பாமர மக்களும் எளிதில் படித்து பொருளுணரும் படியான நடையில்
உள்ளது. ஒவ்வொரு கதைக்கும் அவர் வாத்தைகளையும், சொற்றொடர்களை உருவாக்கக்
கையாண்டுள்ள விதம் அவரது எழுத்தாளுமைக்கு அடையாளம். அனைத்து சிறுகதைகளிலும்
யாதார்த்தமே மிகுதி.
வாசித்தபின்பு சமூகத்தின் மீதான
அகன்ற பார்வையும் கூரிய தெளிவும் நமக்கும் வருமென்பதில் சந்தேகமில்லை. இந்த
அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்ள அட்டைப் படத்திற்காக வெகு நேரம் தேடினேன்.
எங்கும் கிடைத்த பாடில்லை. இறுதியாக அவரது முகநூல் முகநூல் பக்கதைக் கண்டுபிடித்து
அந்தப் பக்கதிலேதான் ‘ஒன்பதாம் திசை’ அட்டைப்
படத்தையும் எடுக்க முடிந்தது.
இப்படியும் ஒரு அமைதியா!!
அவரது முகநூல் பக்கதிற்கு
சென்றபோது எனக்கு ஆச்சர்யமும் அதே சமயம் அதிசயமாகவும் இருந்தது. வெறும் இரு
வரிகளிலோ அல்லது துளி கூட சுவாரஸ்யம் இல்லாத பதிவுகளை இடுபவர்கள் கூட 5000
நண்பர்கள், 10000-க்கும் மேல் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் வெறும்
‘முன்னூத்தி சொச்ச’ நண்பர்களையும், நூறுக்கும் குறைவான பின் தொடர்பாளர்களையும் வைந்திருந்தது
என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இவரது படைப்புகளான “விடியலே! விழித்தெழு!!” (-வாழ்வியல் வழிகாட்டி நூல்), “விழியில் நனையும் உயிர்” (-கவிதை) , “ஒன்பதாம் திசை” (-சிறுகதைத் தொகுப்பு ) இந்த மூன்று புத்தகங்களும் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்மா பதிப்பகம் அரங்கு எண் 63 இல் கிடைக்கும் என்று அவர் முகநூலில் எழுதியிருந்த ஒற்றை நிலைத்தகவலை
(அதுவும் ஜனவரி 17 அன்று) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
அத்தோடு மட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் டிசம்பர் 19, 2013 காலை மலர் சிறப்பு
விருந்தினர் பகுதியில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் சில
நிலைத்தகவல் எழுதி இருந்தார். இதையும் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று
தெரியவில்லை. இப்போது வரை அந்தக் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றியதாகத்
தெரியவில்லை.
இவர் “மல்லை தமிழச்சியின்கவிதைகள்” என்ற வலைப்பூ ஒன்றையும் வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே
வலைப்பூ உலகில் கால் வைத்த இவர் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் பதிவையும்
அங்கு எழுதவில்லை. அவரின் வலைப்பூவிற்கு இன்றுவரை ஒரு பின் தொடர்பாளர்கள் கூட இல்லை
என்பது வருத்தத்திற்குரிய செய்தியே. தன்னைப் பற்றி சுயபுராணம் பாடும் மனோ நிலையில்
அதிக பேர் உள்ள இந்த உலகில் இப்படியும் ஒரு பெண் எழுத்தாளரா என என்னை மலைக்க
வைக்கிறது.
இவரைப் போன்ற எழுத்தாளுமை மிக்க
எழுத்தாளர்கள் எழுத்துலகிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியதுள்ளது. இப்போது
அவருக்குத் தேவை நம்மைப் போன்றவர்களின் தொடந்த ஆதரவும், சிறந்த ஊக்கமுமே. இவரைப்
போன்றவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்ற விருப்பம் எனக்குள் உள்ளது.
வாழ்த்துக்களுடன்
தினேஷ்..
3 comments:
இவ்வளவு சிறப்புகள் உள்ளவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது...
என்றேனும் ஒரு நாள் மிளிர்வார்...
நல்லதொரு தள அறிமுகத்திற்கும் நன்றி...
நல்லதொரு வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!
நல்ல ஒரு அறிமுகத்துக்கு நன்றி.
Post a Comment