கடந்த ஆண்டு நினைவுகளை ஒரு வாரம் தாமதமாகவே பதிவிடுகிறேன். இதற்கு வேலைப்பளு, சோம்பேறித்தனம் எனக் காரணம்
எது வேண்டுமானாலும் கூறலாம். நான் கடந்து வந்த 2013 ஆம் வருடத்தில் என்னுள்
ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும், நான் சந்தித்த நிகழ்வுகள் பற்றியும் சுருக்கமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். இதில் விடுதலும் இருக்கலாம்.
2013 ஆம் ஆண்டு ஆங்கிலப்
புத்தாண்டு அதற்கு முன் நான் சந்தித்த புத்தாண்டுகளைப் போலவே வழக்கமான
ஒன்றாகத்தான் இருந்தது. அப்படி ஒன்றும் பெரிதாய் இந்த வருடத்தில் (2013) நான் என்ன
சந்தித்து விடப் போகிறேன்? பெரிதாய் எதைக் கற்றுவிடப் போகிறேன் என்ற எண்ணம்தான்
என் மனதில் வடிந்து கொண்டிருந்தது. வழக்கமான நாட்களில் ஒன்றாகத்தான் ஒவ்வொரு
நாளும் கழிந்து கொண்டே இருந்தது.
முகநூலில் முன்னர்
இருந்தே கணக்கு வைத்திருந்தாலும் அதை படங்களை பதிவேற்றுவதற்கும், பகிர்வதற்கும்
மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்தேன். நான்கு மாதத்திற்கு பிறகு தான் எதேச்சையாக திரு.
ஈரோடு கதிர் அவர்களின் நட்பில் இணைந்(த்)தேன், பிறகு நான் எப்போதெல்லாம் என்
முகநூலைத் திறக்கின்றேனோ அப்போதெல்லாம் அவருடைய பதிவுகள் என் கண்ணில் படாமல்
போவதில்லை. அவருடைய பல பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக அவர்
இரண்டு மூன்று வரிகளில் எழுதி பதிவிடுவது என்னுள் சிறு தாக்கத்தையாவது
ஏற்படுத்தும்.
பிறகு மெல்ல மெல்ல ஊர்ந்து வரும்
ஆமை போல் நானும் கொஞ்சம் கொஞ்சமாக என் சிறு சிறு பதிவுகளை முகநூல், Twitter,
Google+ என அனைத்திலும் பதிய ஆரம்பித்தேன். அதிலிருந்து இன்று வரை
தொடர்ந்து இணையத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை மிகவும் பெருமையாகவே
நினைக்கின்றேன். புதிதாய் பல நட்புகள், தொடர்பிலில்லாமல் இருந்த பழைய பல நட்புகள் முகநூல், Twitter மற்றும்
Google Plus மூலமாகவும் கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சியையும்
பட்டியலிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.
மற்றொரு முக்கியமான நிகழ்வு
என்னவென்றால் என்னுள் மிதமாக இருந்த வாசிப்பு பழக்கம் இன்னும் மிகையாக மாறி
என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த பெருமை மக்கள் சிந்தனைப் பேரவைக்கும், அதன்
நிறுவனர் திரு.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களையுமே சாரும். மக்கள் சிந்தனைப் பேரவை
மூலம் மிகவும் சிறப்பாக தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தப்படுகின்ற ஈரோடு புத்தகத்
திருவிழா மட்டும் இல்லையென்றால் என்னுள் வாசிப்பு விதை தூவப்பட்டிருக்குமா என்று
நினைக்கவே ஒரு கணம் மனதில் கனம் உண்டாகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சிறு கலந்துரையாடல்
சந்திப்பில் முதன் முதலில் அவருடன் நேரில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது
கேட்ட அவருடைய நேர்த்தியான பேச்சின் மூலம் இன்னும் அதிகம் அவரால் கவரப்பட்டு
அவருடைய பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளை இணையத்தில் தேட என்னுள் ஆர்வம் சற்று
அதிகமாகவே தொற்றிக் கொண்டது.இணையத்தில் கிடைத்த அவரது காணொளித் தொகுப்புகளைக்
கிட்டத்தட்ட அனைத்தையும் பார்த்து ரசித்து விட்டேன். 01.01.14 அன்று அவரை நேரில்
சந்திக்கும் வாய்ப்பும், அவரருகில் அமர்ந்து உணவருந்தும் வாய்ப்பும் கிடைத்ததால்
அவரின் பேச்சுக்கள் அடங்கிய காணொளிகளைப் பார்த்தது பற்றிக் கூறினேன். அவருடைய
முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
அவ்வப்போது வலைப்பூவில் எழுதி
வந்தாலும் முகநூலில் இரண்டு வரிகள் எழுதும் அளவிற்கு வலைப்பூவில் எழுதுவதில்லை
என்பதுதான் உண்மை. இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் மற்றுமொரு நெகிழ்வான
தருணம் என்னவென்றால் மூன்று முறை என் பதிவு (இரண்டு வரி பதிவுகள்) குங்குமம் வார
இதழில் வலைப்பேச்சு பக்கத்தில்
இடம்பெற்றதுதான். அந்த மகிழ்ச்சியை வெறும் வார்த்தையாலோ அல்லது எழுச்சி
மிகு எழுத்துக்களாலோ அளவிட முடியாதது. இந்த நிகழ்வால் என் மனக்குதிரைக்கு இன்னும்
கூட தீனி இதனால் கிடைத்ததென்றுதான் சொல்ல முடியும்.
இந்த செயலைச் செய்வதற்கு முதலில்
கொஞ்சம் தயக்கமாகவோ இருந்தது. விமர்சனங்கள் நிச்சயமாம வரும் என்று துணிந்தும்
வருடத்தின் இறுதியில் முழு மனதாக “Blogger” (!!!) என்று முகநூலில் என் சுய விபரத்தில் பதித்து விட்டேன். புதிய நட்புகள் பல
கிடைத்த வருடம், தொடர்பில் இல்லாமல் இருந்த பழைய நட்புகள் மீண்டும் கிடைத்த
வருடம், நான் இணையத்தில் எழுத, வாசிக்க ஆரம்பித்த வருடம் அன்று பட்டியலிட்டுக்
கொண்டாட வேண்டிய அந்த வருடம் எனக்கு ஒரு பொக்கிஷமே.
காய்ந்த நிலமாய்க் கிடந்த என்
மனதை உழவிட்டு என்னுள் பல சிந்தனை விதைகளை விதைத்த இந்த 2013ஆம் வருடம் எப்படியோ
கடந்து விட்டதென்றாலும் இத்தனை நினைவுகளை கல்வெட்டாய் என் மனதில் பதித்தமையால் இது
போதும்..
2 comments:
இனிய நினைவுகள்... இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி..
Post a Comment