நான் யமனானேன்..


எவன் செய்த கொடுமையாலோ
குடிபெயர்ந்த குருவியொன்று
என் வீட்டுக் கூரையிலே
தன் கூட்டினைத்தான் பின்னி வைத்து

தன் நெஞ்சம் நெகிழ்ந்திடவும்
தன்னினமும் வளர்ந்திடவும்
கருமுட்டையொன்றை அதிலிட்டு
அடைகாத்து வாழ்ந்துவர

அதை நானறியாது குப்பையென்று
குச்சி வைத்து தள்ளிவிட
குப்பென்று விழுந்த முட்டை
பட்டென்று சிதறிவிட

சட்டென்று பறந்த பட்சி
இமைப்பொழுதில் கண் மறைய.,
இப்படியும் நான் யமனானேன்
எருமை வண்டி யேறாமல்.

வைராக்கியமான 'வைக்கம் விஜயலட்சுமி'

வசை பாடும் மனிதர்கள் கூட இதமான இசைக்கு மயங்கியே ஆவார்கள். இசையை ரசிக்காத உயிரினமே இருக்க முடியாதெனலாம். அதிலும் நாம் மனித இனமாயிற்றே. நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா, என்ன? ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பாடல் என்று பலவற்றைக் கூற முடியும். அந்தப் பாடலின் இசை, வரிகள், பாடிய விதம், பாடலில் இடம் பெற்ற காட்சிகள் என ஏதாவது ஒன்று நம் மனதை வருடியதாகவோ நமக்குள் சிறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவோ இருக்கும். பல நேரங்களில் நம்மை அறியாமலேயே பயணங்களில், தனிமையில் நமக்கு பிடித்தமான பாடல்களை நம் வாய் முனக ஆரம்பித்து விடுகிறது.

இப்போது வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் படங்கள் மற்றும் பாடல்கள் வெளிவரும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இதனால் வெளிவரும் அனைத்துப் பாடல்களையும் சினிமா துறையில் இருப்பவர்களே கேட்பது அபூர்வம் தான். அதனால் சராசரி மக்கள் அனைத்துப் பாடல்களையும் கேட்க வாய்ப்புள்ளது என்பதும் தவறே. மிகச்சிறப்பாக வந்த பாடல்கள் கூட சில நேரங்களில் மக்களிடையே வெற்றி பெறாமல் போவதுமுண்டு. இதற்குக் காரணம் மக்களை முழுமையாய் அந்தப் பாடல் வந்து சேராததாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் புதுமுகங்கள் பலரது நடிப்பால் வெளிவரும்/வெளிவந்த படங்களாக இருக்கலாம்.

மிகப்பெரிய போட்டிகள் கொண்ட சினிமா உலகில் மிகச்சாதாரணமாக எந்த ஒரு நபராலும் அவ்வளவு எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். திறமையும் விடா முயற்சியும் தொடர்ந்து போராடும் குணமும் கொண்டுள்ளவர் தான் மிகப் பெரிய சிம்மாசனத்தைத் தொட முடியும்.

அதிலும் முகம் அதிக அளவில் தெரியாத இசைத்துறையில் மிகப் பெரிய இலக்கை எட்டுவது எளிதான செயல் அல்ல. இன்னும் குறிப்பாக பாடகர் முகம் பிரபலமடைவது குறைந்தபட்சம் பத்து வெற்றிப் பாடல்களுக்குப் பிறகுதான். தற்போது வெளிவரும் பெரும்பாலான பாடல்களில் குரலின் ஆதிக்கம் குறைந்து இசையின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் பாடலைப் பாடியவர் யாராக இருக்கும் எனக் கணிப்பதும் பெரும் சிரமமே.

கடந்த ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான செல்லுலோய்டு என்ற படத்தில் இடம்பெற்றிருந்த காட்டே காட்டே என்ற பாடலைப் பாடியதன் மூலம் பலரது கவனத்திற்கும் வந்தவர் வைக்கம் விஜயலட்சுமி. கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறவியிலேயே கண் பார்வையற்றுப் பிறந்தவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருப்பதால் இங்கு அதிகம் பதிய அவசியப்படாது. அவரது குரலில் இதுவரை வெளிவந்த தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களைக் கேட்கும் போது நம் மனதை பிசக வைக்கிறதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. கண்மூடி ரசித்தால் கண்ணீரையும் வர வைக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.


இவரது குரலில் ஏற்கனவே வெளிவந்த செல்லுலோய்டு மலையாளப் படத்தின் காட்டே காட்டே என்ற பாடல் தமிழில் காற்றே காற்றே என்ற பழனிபாரதியின் வரிகளோடு இவரது குரலால் பாடலாக்கப்பட்டது. அந்தப் பாடல் பலரது மனதையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.


இவரது குரலில் தமிழில் மற்றுமொரு பாடலாக டி.இமான் அவர்கள் இசையில் என்னமோ ஏதோ என்ற படத்தில் புதிய உலகை புதிய உலகை என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட பின்பு ஏற்பட்ட என் மனதின் நிலையை எந்த வார்த்தைகளாலும் அலங்கரிக்க முடியவில்லை. இதயத்தில் இன்னும் ஒரு ஈரம் கசிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு. பலமுறை கேட்ட பின்பும் மீண்டும் மீண்டும் கேட்கவே மனம் நாடுகிறது. உடலும் உடனமர்ந்து கேட்க இசைகிறது. இதற்கும் மேலாக இந்தப் பாடலில் இசையின் தாக்கம் அதிகம் இல்லாமல் இவரது இதமான குரலே மேலோங்கி நிற்கிறது. இந்தப் பாடல் பல தரப்பு மக்களையும் சென்று சேரும் என்பதில் சந்தேகமில்லை.

'புதிய உலகை' பாடலைக் கேட்க மற்றும் தரவிறக்க


இது போன்ற தருணங்களில் விஜயலட்சுமியின் பெற்றோர் தன் மகளுக்காக செய்த ஊக்கம் மிகவும் போற்றுதல் மற்றும் பாராட்டுதலுக்குரியது. உடலில் குறை என்று ஒரு போதும் தன்னை நினைக்காமல் விடா முயற்சி என்னும் வைராக்கியத்தோடு போராடி கோட்டயம் முதல் கோடம்பாக்கம் வரை தன் காந்தக் குரலோடு தன் முகத்தையும் பலர் அறிய வைத்த வைக்கம் விஜயலட்சுமியின் திறமை மென்மேலும் வளர வேண்டும். இவருக்கு கேரள அரசின் விருதுகள் மட்டுமல்ல, தமிழக அரசின் விருதுகளும் தேசிய விருதுகளும் உறுதியாக கிடைக்குமென்று நம்புகிறேன். தொடர்ந்து ஊக்குவிப்போம்..

வாழ்த்துக்களுடன்

தினேஷ்...

‘ஒன்பதாம் திசை’ சிறுகதைத் தொகுப்பு வாசித்த பின்பு

வாசிப்பு என்பது என் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாவல், நாளிதழ், கட்டுரை, சிறுகதை, நகைச்சுவை, தன்னம்பிக்கை நூல் என எதாவது ஒரு புத்தகத்தை தினசரி குறைந்தது பத்துப் பக்கத்தையாவது வாசித்த பிறகு தான் தூக்கத்திற்கே அடிக்கல் நாட்டுவது என் வாடிக்கையாகிவிட்டது. தினசரி வாசிப்பு என்பதால் ஒரே மாதிரியான புத்தகங்கள் ஒரு வித சலிப்பைக் கொடுக்கலாம் என்பதாலும், தற்போது வெளிவரும் புத்தகங்களின் மலைக்க வைக்கும் விலையாலும் நூலகங்களை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நான் உறுப்பினராக சேர்ந்துள்ள அரசு நூலகங்கத்தில் துறை வாரியாக புத்தகத்தைத் தேடிப் பிடிப்பது என்பதும் ஒரு ஆகச்சிறந்த சாதனையே. நேற்று சில புத்தகங்களை எடுக்கலாம் என்று நூலகத்திற்கு சென்று சிறிது நேரம் தேடிய போது என் கண்ணில் பட்ட ஒரு புத்தகம் “ஒன்பதாம் திசை. இதற்கு முன்னர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் எழுதிய “ஒன்பதாவது திசை பத்தாவது கிரகம் என்ற கிரைம் நாவலை வாசித்தவன் என்பதால் இதுவும் கிரைம் நாவல் வகையைச் சார்ந்திருக்குமோ என்று எண்ணி உள் பக்கத்தைப் புரட்டிய போதுதான் தெரிந்தது இது ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று.

இல்லம் திரும்பிய பிறகு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். புத்தகத்தின் ஆசிரியர் ‘மல்லை தமிழச்சி என்று இருந்தது. நான் இது வரை அறிந்திடாத பெயர்தான் அது. ஆசிரியர் குறிப்பு, அணிந்துரை, வாழ்த்துரை என்ற எதையும் வாசிக்காமல் நேரடியாக சிறுகதைக்குள் சென்றேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருப்பது பட்டியலைப் பார்த்ததுமே தெரிந்தது. புத்தகத்தை திருப்பிக் கொடுக்க 15 நாட்கள் இருப்பதால் அதற்குள் அனைத்தையும் படித்து விடலாம் என்று எண்ணித்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் முதல் சிறுகதையே என்னைப் புத்தகத்தில் தன்வசப்படுத்தியது.

தொடர்ந்து ஒவ்வொன்றாக அனைத்து சிறுகதைகளையும் நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இடைவிடாது வாசித்து முடித்து விட்டேன். மொத்தம் 17 சிறுகதைகள் இருந்தாலும் ஒன்றோடொன்று ஒரு துளி கூட தொடர்பில்லாததால் சிறு சலிப்பு கூட ஏற்படாமல் வாசிப்பில் கட்டிப் போட்டது அந்தப் புத்தகம். அனைத்து சிறு கதைகளும் நம் அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி, நாம் நேரில் கண்ட என ஏதாவது ஒரு வகையில் நம்மோடு தொடர்புடைய அல்லது நம் சொந்த வாழ்வின் எண்ணங்களின் பிரதிபலிப்பு போலவேதான் அனைத்துக் கதைகளும் இருந்தன. சமூகத்தைப் பற்றி முகத்திலறைந்து சொல்லப்பட்ட உண்மைகள் பல.


பிறகு இறுதியாகவே இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியது எழுத்தாளர் திரு.ஜெயகாந்தன் என்பதைப் பார்த்தேன். படைப்புத்திறனும், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பார்வையும் உடையது இவரது சிறுகதைகள். மனிதாபிமானமும் முற்போக்குக் கருத்துகளும் கொண்ட இவரது எழுத்துத்திறமை மேலும் மேலும் வளர்ந்து தமிழிலக்கிய உலகில் இவருக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென வாழ்த்துகிறேனென்றும் எழுதியுள்ளார்.

திரு ஜெயகாந்தன் சொல்வது போல் மல்லை தமிழச்சியின் கதைகளிலிருந்து அவருக்கு சமூகத்தின் மீது தெளிவான பார்வையும், முற்போக்கு சிந்தனையும் உள்ளதென்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது நேர்த்தியான எழுத்துக் கோர்வை பாமர மக்களும் எளிதில் படித்து பொருளுணரும் படியான நடையில் உள்ளது. ஒவ்வொரு கதைக்கும் அவர் வாத்தைகளையும், சொற்றொடர்களை உருவாக்கக் கையாண்டுள்ள விதம் அவரது எழுத்தாளுமைக்கு அடையாளம். அனைத்து சிறுகதைகளிலும் யாதார்த்தமே மிகுதி.

வாசித்தபின்பு சமூகத்தின் மீதான அகன்ற பார்வையும் கூரிய தெளிவும் நமக்கும் வருமென்பதில் சந்தேகமில்லை. இந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து கொள்ள அட்டைப் படத்திற்காக வெகு நேரம் தேடினேன். எங்கும் கிடைத்த பாடில்லை. இறுதியாக அவரது முகநூல் முகநூல் பக்கதைக் கண்டுபிடித்து அந்தப் பக்கதிலேதான் ஒன்பதாம் திசை அட்டைப் படத்தையும் எடுக்க முடிந்தது.

இப்படியும் ஒரு அமைதியா!!

அவரது முகநூல் பக்கதிற்கு சென்றபோது எனக்கு ஆச்சர்யமும் அதே சமயம் அதிசயமாகவும் இருந்தது. வெறும் இரு வரிகளிலோ அல்லது துளி கூட சுவாரஸ்யம் இல்லாத பதிவுகளை இடுபவர்கள் கூட 5000 நண்பர்கள், 10000-க்கும் மேல் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் வெறும் ‘முன்னூத்தி சொச்ச நண்பர்களையும், நூறுக்கும் குறைவான பின் தொடர்பாளர்களையும் வைந்திருந்தது என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இவரது படைப்புகளான “விடியலே! விழித்தெழு!! (-வாழ்வியல் வழிகாட்டி நூல்), விழியில் நனையும் உயிர் (-கவிதை) , ஒன்பதாம் திசை (-சிறுகதைத் தொகுப்பு ) இந்த மூன்று புத்தகங்களும் இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் பத்மா பதிப்பகம் அரங்கு எண் 63 இல் கிடைக்கும் என்று அவர் முகநூலில் எழுதியிருந்த ஒற்றை நிலைத்தகவலை (அதுவும் ஜனவரி 17 அன்று) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அத்தோடு மட்டுமல்லாமல் ஜெயா தொலைக்காட்சியில் டிசம்பர் 19, 2013 காலை மலர் சிறப்பு விருந்தினர் பகுதியில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்ப இருப்பதாகவும் சில நிலைத்தகவல் எழுதி இருந்தார். இதையும் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இப்போது வரை அந்தக் காணொளியையும் இணையத்தில் பதிவேற்றியதாகத் தெரியவில்லை.

இவர் “மல்லை தமிழச்சியின்கவிதைகள் என்ற வலைப்பூ ஒன்றையும் வைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டிலேயே வலைப்பூ உலகில் கால் வைத்த இவர் 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் பதிவையும் அங்கு எழுதவில்லை. அவரின் வலைப்பூவிற்கு இன்றுவரை ஒரு பின் தொடர்பாளர்கள் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியே. தன்னைப் பற்றி சுயபுராணம் பாடும் மனோ நிலையில் அதிக பேர் உள்ள இந்த உலகில் இப்படியும் ஒரு பெண் எழுத்தாளரா என என்னை மலைக்க வைக்கிறது.

இவரைப் போன்ற எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்துலகிற்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டியதுள்ளது. இப்போது அவருக்குத் தேவை நம்மைப் போன்றவர்களின் தொடந்த ஆதரவும், சிறந்த ஊக்கமுமே. இவரைப் போன்றவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெளிவர வேண்டுமென்ற விருப்பம் எனக்குள் உள்ளது.

தொடர்க அவர் எழுத்துப் பணி, வளர்க அவர் தமிழ்த் தொண்டு.


வாழ்த்துக்களுடன்

தினேஷ்..