இவங்கதான் ரியல் சாம்பியன்ஸ்

தினமும் செய்தித்தாள்களைப் படிக்கும் போது ஏதாவது ஒரு பக்கத்தில் யாரேனும் தற்கொலை செய்து கொண்ட செய்தியைப் பார்த்து விட முடிகிறது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, காதல் தோல்வி, வறுமை, கடன் தொல்லை, தீரா நோய் என ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒரு காரணம் முன் வைக்கப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் கூட இது போன்ற செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளது.

அது போலவே நம் அன்றாட வாழ்க்கையில் நாள் தவறாமல் வாகன விபத்துகள் நடந்த செய்தியையும் செய்தித்தாள்களில் வாசித்து விட முடிகிறது. வாரம் இருமுறையேனும் நம் அக்கம் பக்கத்திலேயே ஏதாவது விபத்துகளை நேரில் பார்த்து விடுவதும், மற்றவர்கள் மூலமாக காதால் கேட்டு விடுவதும் இயல்பாகிவிட்டது. விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து நடந்த இடம் பழைய நிலைக்கு திரும்பி விட்டாலும் நாம் அந்த இடத்தைக் கடக்கும் ஒவ்வொரு கணமும் அந்த விபத்துக் காட்சிகள் நம் கண் முன்னே ஓட ஆரம்பித்து விடுகின்றன. சில சமயங்களில் சிறிய விபத்துகளாக இருந்தால் உயிர் இழப்புகள் இல்லாமல் உறுப்புகள் இழப்போடும் அந்த வடுக்களோடும் முடிந்து போனாலும் பல சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படுவதும் சாதாரணமாகவே நடந்து விடுகின்றது.

சில நேரங்களில் ஒரு பக்கம் சாலையில் சரியாகவே சென்றாலும் எதிர் வருபவர்களின் அலட்சியத்தால் இரு தரப்பினருக்குமே சேதாரங்கள் ஏற்பட்டு விடுகின்றது. பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுவதற்கு இன்று முக்கியக் காரணமாக இருப்பது குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது தான். விபத்துகள் என்பது கண நேரத்தில் நடந்து விடுவது தான். ஆனாலும் நம்மால் முடிந்த வரை தடுக்கக்கூடியது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதில் கடும் விபத்தினை சந்தித்து உயிர் தப்பி, கை கால் என ஏதாவது உறுப்புகளை இழந்து சமூகத்தில் உள்ள சக மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் சில நேரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி மனதில் உள்ள குறைகளை அவர்கள் வெளிக்காட்டாமல் நம்மோடு சக மனிதர்களாக பழகும் போது நமக்கு நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு சற்று கூடவே செய்கிறது. அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் என்பது இருந்தாலும் அவர்கள் நம்மிடம் எந்த உதவியும் கேட்காத தருணங்களில் அவர்கள் சிறந்த முன் உதாரணங்களாக நம் கண் முன்னே தெரிகின்றனர்.

தொலைக்காட்சிகளை குறிப்பிட்ட நேரம் பார்த்தாலும் அதில் வரும் விளம்பரங்களை மற்றவர்களைப் போலவே நானும் அதிகம் விரும்பிப் பார்ப்பதில்லை. சன் டிவியில் இன்று (10.11.13) சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி முற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று முன்னரே விளம்பரப்படுத்தியதை நான் பார்க்கவில்லை. இன்று எதேச்சையாக சேனல்களை மாற்றிக் கொண்டு வரும்போது இந்த நிகழ்ச்சி என் கண்ணில் பட்டது.

வழக்கமாக நான் பார்த்த இது போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இரண்டு அல்லது மூன்று நடுவர்கள் அமர்ந்திருப்பர். ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருப்பார். திறமையை வெளிப்படுத்தும் நபர்களின் திறமையை சிறப்பு விருந்தினர் மட்டும் பாராட்டுவர். ஆனால் நடுவர்கள் மட்டும் அடுக்கடுக்காய் பல காரனங்களைக் கூறி திறமையை வெளிப்படுத்தும் நபரின் மனதை கடப்பாரையால் தாக்குவது போன்று தாக்கி அவர்களில் மனதைப் புண்படுத்தியே தீருவர். சில நேரங்களில் அவர்களை கண்ணீர் வர வைத்தும் ரசிப்பர்.

நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்
இன்றைய நிகழ்ச்சியிலும் அது போலவே நடுவர்களாக நடிகை ரேவதி மற்றும் பட்டிமன்றம் ராஜா அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாக்யராஜ் அவர்களும் அமர்ந்திருந்தார். இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மற்ற நிகழ்ச்சிகளைப் போன்று எதாவது அழ வைக்கும் சம்பவம் நடந்து விடுமோ என்ற சலனம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் நல்ல வேளையாக அப்படி ஏதும் நடக்காமல் இருந்தது என் மனதிற்கு மிகுந்த ஆறுதல் அளித்தது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மொத்தம் ஆறு (மாற்றுத்)திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தக் காணொளியைக் காணும் போது என் மனம் என்னிடமே இல்லை. நான் ஒரு குழந்தை போலவே மாறி எந்த முழு நிகழ்ச்சியும் கண்டு ரசித்தேன். ஆட்டம், பாட்டம், இசை என எல்லாவற்றிலும் எள்ளளவும் குறை கூறாத அளவிற்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

திறமைகளை வெளிப்படுத்திய (மாற்றுத்)திறனாளிகள்

உடலில் குறை இருந்தாலும் மனதில் அதை நினைத்துக் கொள்ளாமல் தங்களையும் ஒரு சராசரி மனிதர்கள் போலவே நினைத்து அவர்கள் அசத்திய ஒவ்வொரு திறமையும் என்னை மிகவும் நெகிழச் செய்தது.
மரணத்தைப் பற்றிய பயமோ, மனதில் தற்கொலை எண்ணமோ உள்ளவர்கள் இவர்கள் போன்றவர்கள் திறமைகளைப் பார்ப்பார்களேயானால் அவர்கள் புது வாழ்க்கை பற்றிய சிந்தனைகளையே நினைப்பார்கள் என்பது நிதர்சன உண்மை.

வாழத்துணிந்தவனுக்கு வாழ்க்கை என்பது சவால் அல்ல. கண்டிப்பா இவங்கதான் சாம்பியன்ஸ்....
--------------------------------------


1 comment:

இராஜ முகுந்தன் வல்வையூரான் said...

உண்மைதான் நண்பா. ஊனம் மனதில் இல்லாமல் மயக்கினர் எமை. நன்றிகள் பகிர்வுக்கு.