பயனளித்த பண்ணைக் குட்டை- நீரின்றி அமையாது உலகு

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பயனளிக்குமா பண்ணைக் குட்டை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாகக் கூட இந்தக் கட்டுரையை வைத்துக் கொள்ளலாம். மழை இவ்வளவு விரைவில் எங்கள் ஊருக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நாங்கள் அமைத்திருந்த பண்ணைக் குட்டை முழுவதும் தண்ணீர் நிறைந்தது எங்களுக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்னும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றவாறு இயற்கை அளித்த இந்த மழை, கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த அந்த நாட்கள் நிறைவேறியது போல ஒரு மன மகிழ்ச்சி.

மழை நீர் சேகரிப்பு பற்றி பல ஊடகங்கள் வாயிலாக நமது அரசாங்கமும், பல சமூர்க ஆர்வலர்களும் அவர்களால் இயன்ற வரை மக்களிடம் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனாலும் மக்கள் இதை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்களா என்பது மிகப்பெரிய கேள்வி தான்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நாட்களில் மக்கள் குடி நீருக்குக் கூட குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் செல்வதும், தண்ணிரை தொலைவிலிருந்து வாங்கி உபயோகிக்கும் நிலையும் உள்ளது. ஆனால் மக்கள் முழு மனது வைத்து மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீர் மட்டம் கனிசமாக உயரும். அதனால் நீர் வளமும் உயரும். குடி நீர் பிரச்சினை என்பது நம்மை நெறுங்க முடியாத அளவிற்கு நம்மை நாமே காத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அருகாமையில் நிரம்பிய ஏரி ஒன்றின் புகைப்படம்


மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர வைக்க அப்படியொரு அருமையான திட்டம் தான் இந்த பண்ணைக் குட்டை திட்டம். அதிகமாக மழை பெய்யும் நாட்களில் மழை நீர் வீணாக ஆறுகளில் சென்று கலப்பதன் மூலம் மழை பெய்யும் இடங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வது சந்தேகம் தான். மாறாக முடிந்த வரை மழை நீரை அந்தந்த இடத்திலேயே இது போன்று பண்ணைக் குட்டை அமைத்தும் நீரை முழுவதுமாக பூமிக்குள்ளேயே செலுத்தலாம். இதன் மூலம் கிணறுகளும், ஆழ் துளைக் கிணறுகளும் மிக விரைவிலேய பயன் பெறும்.


 நிரம்பிய பண்ணைக் குட்டை


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக எங்கள் ஊரில் பெய்த கன மழையால் நாங்கள் ஏற்படுத்தியிருந்த இந்த பண்ணைக் குட்டை முழுவதும் நிரம்பியது. இதன் காரணமாக அருகாமையில் இருந்த கிணறும், ஆழ்துளைக் கிணறும் இரண்டு நாட்களிலேயே பயன் பெற்றது என்பது நெகிழ்ச்சியான தருணம் தான்.

நாம் நம்முடைய எதிர்கால வாழ்விற்கு பொன், பொருள் சேமித்து வைப்பது மட்டுமல்ல நீரையும் சேமித்து வைப்பது இன்றைய சூழலுக்கு மிக மிக தேவையான ஒன்றே..


--------------------------------

கீச்சுகள்- 13


புறப்பட்ட இடமும், சேர்ந்த இடமும் சரி என்பதற்காக வந்த பாதைகள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது...

*

ஆகச்சிறந்த ஆயுதங்கள்
தேவையில்லை.,
சிறிய விளக்கை
அணைக்க..



 *

விதிகளே சரியாக இல்லாத போது விதி மீறலைப் பற்றி என்ன பேசி என்ன பயன்??...

*

இந்த மண்ணிற்கு அப்படி என்ன பெரிய எதிர்பார்ப்பு இருந்து விடப் போகிறது அந்த வானத்திடம்..
மழையைத் தவிர...

*


சாதனைக்காக படைப்புகளை உருவாக்க வேண்டியதில்லை..
நல்ல படைப்புகள் தானாகவே சாதனையை உருவாக்கும்...


*

கேள்வி என்பது மற்றவர்களைக் கேட்க மட்டமல்ல, நம்மையே நாம் கேட்பதற்கும் தான்...


*


அடையாளம் தெரியாமல் காணாமல் போனவைகள் பட்டியலில் நேற்றைய மழை தான் இன்று முதலிடம் பிடிக்கிறது....

*

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுமந்துகொண்டு நம்பிக்கை என்னும் கயிற்றால் இழுக்கப்படுவதுதான் வாழ்க்கைக்தேர்....

*


மௌனத்தின் எண்ணிலடங்கா அர்த்தங்களில் ஒன்று தான் இந்த 'சம்மதம்'...

---------

பஞ்சு கன்னம்





கொடிய

நஞ்சு கூட
அமிழ்தம் ஆகும்..
அவள்
பஞ்சு போன்ற
கன்னத்தில்
பட்டுத் தெரித்தால்...

-------

கீச்சுகள்- 12


களைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது புத்திசாலித்தனமாகவும், உழைக்காமல் முன்னேறுவது எப்படியென்று யோசிப்பது சோம்பேறித்தனமாகவும் தான் எனக்குப் படுகின்றது...

*

நினைக்காததும் கிடைக்க தேடிக்கொண்டே இரு....

*

லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் என்பதாலோ என்னவோ அதை இன்னும் ஒழித்து விட முடியவில்லை...


* 


தினமும் இருமிக் கொண்டே தான் இருக்கிறாய்.. கொஞ்சம் உமிழ்ந்து நீரைத் துப்பி விட்டுத்தான் போய் விடேன் மேகமே...


*

விழுந்த இடத்திலேயே அந்த கணத்திலேயே எழுந்து விட்டால் அதுவும் ஒரு வெற்றி தான்..

-தடங்கல் இல்லாமல் தடங்கள் அமைவதில்லை...


*

கொஞ்சம் நாமாகவும் கற்றுத் தெரிந்து கொள்ளலாம்..
அனுபவம் தான் அத்தனையையும் கற்றுத் தர வேண்டுமென்பதில்லை.

* 

 நிலவைப் போல் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தான் பார்க்கிறது.. ஆனாலும் அமாவாசையில் மட்டுமே சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றி கிடைக்கிறது இந்த சோலார் விளக்கிற்கு...

*

காரணங்கள் கச்சிதமாக இருக்கவேண்டும் என்றில்லை..
- குழந்தையின் அழுகைக்கும், புன்னகைக்கும்..



....

இதழ் படிப்பு




ஆங்கில நாளிதழைக் கூட
முழுமையாய்
படித்து விட
முடிகிறது என்னால்.,
.

ஆனால்.,
அவளின்
இதழைப் படிப்பதில்
இன்னும் நான்
Pre-Kg 
தான்...


...

கீச்சுகள்- 11


பிரிதலின் போதுதான் அதைப் பற்றிய புரிதலும் அதிகமாகிறது...
-மின்வெட்டு உள்பட..

*

முட்டைக்கும் வருவலுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....

-
கோழிக்கு..


*
இப்போதைக்கு சொல்ல இதுதான்..

அதே குற்றம், அதே பிழை
-
அநேக இடங்களில்



*

குழந்தை அழுதால் மட்டுமல்ல அந்த வானம் அழுதாலும் ரசிக்க ஒரு கூட்டமே உள்ளது...


*

ஏன், எதற்கு என்பதை மற்றவர்களிடம் கேட்பதற்கு முன்னால், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் இன்னும் கூட கொஞ்சம் சிறப்பாக இருக்கும்..

* 

வழிமுறைகளையே சரியாக அமைக்காமல் நடந்த தவறுக்கு வருத்தப்படுவதும், வார்த்தைகளைக் கொட்டுவதும் நல்ல நிர்வாகத்திற்கு பொருத்தமான செயல் அல்ல....

*

இயற்கையாக வெளிப்படுவது, செயற்கையாக வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு பண்புகளைக் கொண்டுள்ளது மனிதனின் சிரிப்பு...


*


'இப்படி கெட்டது நடக்குமென்று எனக்கு முன்னரே தெரியும்' என்று கூறும் பலரும் அதைத் தடுக்க முயற்சி எடுத்திருந்தால் அப்பொழுதே நல்லவன் பட்டம் வாங்கி இருக்கலாமே.........

கீச்சுகள்- 10


நல்ல உள்ளங்களுக்கு, நல்ல உள்ளங்கள் வாழ்த்துவதற்காவே இந்த உள்ளங்கையால் ஆசிர்வாதம் செய்வது நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டிருக்கலாம்...

*


உயிருக்குப் (நீதிக்குப்) போராடும் உயிரை (நீதியை), அவரவர் கொன்றால் குணப்படுத்த முடியாததாகவும், அடுத்தவர் கொன்றால் மிகப்பெரிய குற்றமாகவும் தீர்ப்பளிக்கிறது நம் மனம் எனும் நீதிமன்றம்...


*


எதிரி என்று நினைத்து அவரை
உதறி நீயும் எறிந்து விட்டு,
சிதறி நீயும் கிடந்த போது
பதறி வந்து உதவிய அதே 'அவரை' நினைத்து
கதறி அழ மட்டும் எப்படி கற்றுக் கொண்டாய் மனமே?.


*

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிவதற்கு அனுபவம் எனும் அகராதி நன்றாகவே உதவுகின்றது.....

*

கூர்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான், நரசிம்ம அவதாரம் எடுத்ததும் விஷ்ணு தான்.
-
உருவம் முக்கியமல்ல... உபயோகம் தான் முக்கியம்..

*


ஏட்டில் எழுதாமலேயே நாட்டில் நிறைவேற்றப்பட்ட மறைமுக சட்டம் தான்
இந்த லஞ்சம்....

*

திட்டங்களைப் பற்றி தெளிவாய்த் தெரியாத அதிகாரிகளும்,

அரைகுறையாய் அறிந்து வைத்துள்ள அறிவிப்பு பலகைகளும்.. .

-(
அரசு) அலுவலகங்களில்.

கீச்சுகள்- 9


திட்டித் திருந்துவதற்கு முன்னாலேயே, பட்டுத் திருந்தி விட்டால் நல்ல பாட்டாளி என்ற பெயரையே வாங்கி விடிகிறோம் சில நேரங்களில்...........

*

தற்பொழுதெல்லாம் பல திரைப்படங்களின் தலைப்பு படத்துடன்தான் ஒட்டுவதில்லை பாவம் ...


*

பாலுக்கும், பாம்புக்கும் ஆடை கொடுத்து கௌரவம் செய்திருக்கிறது இந்த இயற்கை....

*

நமக்குத் தேவை உள்ளபோது பராமரிப்பதும், தேவை இல்லாதபோது நிராகரிப்பதும், சில பொருள்களை மட்டுமல்ல., பல மனிதர்களையும் தான்




ஒரு மரத்தின் கிளையை வெட்டுவதற்கு, இன்னொரு மரத்தின் கிளையினால் செய்யப்பட்ட ஏணியே துணைபுரிவதற்கு உதவி என்பதா?, துரோகம் என்பதா?....


*

குழந்தைக்கு உணவு ஊட்ட இந்த அறிவியல் யுகத்திலும் சில அம்மாக்களின் நம்பிக்கை.......
-அந்த நிலா... 

*

குறைந்தபட்சம், அதிகபட்சம் என்று குறிப்பிட்டு சலுகைகளை அறிவிப்பதும் ஒருவகை பாரபட்சம் தான்...


*

கண்ணீர் அஞ்சலி பதிவிலும் புன்னகைத்துக் கொண்டுள்ள புகைப் படங்களைப் பார்த்தால் நம் வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கையின் விழுக்காடு நம்மை அறியாமலேயே நிறையவே கூடி விடுகிறது...