மழை எங்கள் உயிருக்கு மேல்...

மழையைக் கண்ணில் பார்த்து பல நாள் ஆயிற்று.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் ஐயாவையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பல நாள் ஆயிற்று. வழக்கமா ஆவணி புரட்டாசி மாதங்களில் பெய்யும் பருவ மழையும் கடந்த வருடம் பெருமளவிற்கு ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டது. பெய்த ஒரு சில இடங்களிலும் கூட இன்றைய தேதியில் வறட்சியே நிலவுகிறது. கடந்த சில வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் முன் கூட்டியே கோடையின் தாக்கம் மிகக் கடுமையாகவே உள்ளது. காலை பதினொரு மணிக்கு மேல் வெளியில் இந்த வெயிலில் செல்வது என்பது மிகக் கடினமான செயலே.

பச்சை பசேலென இருந்த புல்வெளிகளையெல்லாம் தற்போது பார்க்கும் போது கண்ணிற்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மழை இந்த வருடமேனும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கை ஓடிக்கொண்டுதான் உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் பல விவசாயிகள் பலர் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய பாசன அணையான மேட்டூர் அணையானது சென்ற வருடம் நிரம்பினாலும் தற்போது அதில் ஐம்பது அடிக்கும் குறைவாகவே நீர் இருப்பு இருப்பதால் இந்த வருட விவசாயத்தின் நிலை மிகப்பெரிய கேள்விக்குறியாகவே நம் கண் முன்னே நிற்கிறது. கொளுத்தும் வெயிலின் காரணமாக தண்ணீர் மட மடவென குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் மழை குறைவாகப் பெய்யினும் கூட கர்நாடகத்தில் கனிசமான மழை இருப்பின் டெல்டா மாவட்டங்களுக்கு எப்படியோ நீர் கிடைத்து விடும்.

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது பவானி சாகர் அணை. இந்த அணையிலும் தற்போது நீர் இருப்பு ஐம்பது அடிக்கும் குறைவாகவே உள்ளது. நீர் வரத்தும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதே போல் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் தரும் முக்கிய அணையாக இருப்பது பொள்ளாச்சி ஆழியார் அணை. இதிலும் மற்றவைகளைப் போலவே தண்ணிர் மிகக் குறைவான இருப்பே உள்ளது. இந்த வருடம் மழை பொய்ப்பின் இம் மாவட்டத்தில் அதிகமாக உள்ள தென்னை மரங்கள் வறலும் நிலை ஏற்படக் கூடும். ஏற்கனவே மழை குறைவின் காரணமாக சில பகுதிகளில் தென்னை வறண்டு காட்சியளிக்கிறது. தென்னை சார்ந்த தொழில்களும் கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படும்.

வருண பகவானுக்கு இணையத்தில் ஒரு கணக்கிருந்தால் அதில் மழை வேண்டி விண்ணப்பங்களே குவிந்து கொண்டிருக்கும். மற்ற பொருள்களை இணையத்தில் வாங்குவது போல் இந்த மழையையும் வாங்கும் விஞ்ஞான நம் கையில் இருந்தால் அணைவரும் கணினியின் முன்னே அமர்ந்து கொண்டு ஆஃபர் விலையில் கிடைக்கிறதா என ஆராய்ச்சி செய்து கொண்டே வாங்க முயற்சித்துக் கொண்டிருப்போம். என்ன செய்ய? இந்த மழைக்காகவேனும் கடவுளை நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. அவரிடம் தான் முறையிட வேண்டியுள்ளது.மரங்களையெல்லாம் நாம் தான் வெட்டுவோம். புதிதாக ஒரு மரங்கள் கூட நட்டு வளர்க்க மாட்டோம். அவ்வப்போது பெய்யும் மழையையும் கூட மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து சேமிக்க மாட்டோம். இருந்தாலும் அந்தக் கடவுள் மட்டும் மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும் என்று அதற்கே கட்டளையிடுவோம். மழை பொய்த்து விட்டது அதன் மீதே பழியை சுமத்துவோம். ஏனெனில் நாம் மனிதன். ஆறறிவு கொண்டவனாம்.

கடந்த பத்து நாட்களாக அவ்வப்போது மழை வந்து சென்றாலும் அது விவசாயம் செழிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரளவிற்காவது தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் என்று மற்றவர்களைப் போலவே நானும் நம்பிக்கொண்டே இருக்கின்றேன்..


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த வருடம் மழை அதிகம் என்று சொல்கிறார்கள்... ம்... நம்புவோம்...

Parathan Thiyagalingam said...

நான் இலங்கையிலிருந்து வாடா பகுதி யாழ்பாணம்... இங்கும் மழை இல்லை.. நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன்..