தண்டனையாகும் தமிழ்ப் பேச்சு

தண்டனையாகும் தமிழ்ப் பேச்சு:
நான் இதுவரை சிறிய சிந்தனைகளை மட்டுமே என் எழுத்துக்களில் தெரிவித்து வந்தேன்.. இன்று முதல் முறையாக கட்டுரை வடிவில் கொஞ்சம் என் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளேன்.

நேற்று (07.07.13) இரவு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கின்றது.. அதில் பேசப்பட்ட தலைப்பு ஏன் உங்கள் வாழ்க்கையில் தமிழுக்கு இடமில்லை.. இதில் ஒருபுறம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும், மற்றொருபுறம் அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பங்கு பெற்றனர்.. அந்த மாணவ மாணவிகள் அனைவரும் ஆங்கில வழியில் படிப்பவர்கள் என்று முதலிலேயே தெரிந்தது. திரு.கோபிநாத் அவர்கள்தான் வழக்கம்போல் அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டும் இருந்தார்..

நேற்று மற்றும் என்னவோ தெரியவில்லை, வழக்கத்திலிருந்து மாறுபட்டு இரண்டு தரப்பினரும் ஆங்கிலத்தை மட்டுமே ஆரம்பத்திலிருந்து ஆதரித்துப் பேசினர்..
திரு.கோபி அவர்கள் ஆங்கிலம் ஏன் பிடிக்கிறது, தமிழ் ஏன் பிடிக்கவில்லை? போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் இருந்தார்.. அதற்கு அவர்கள் தன்னுடைய இயல்பான பதில்களைத்தான் வெளிப்படுத்தினாலும், எனக்குக் கொஞ்சம் மனக்கஷ்டத்தையே கொடுத்தது...

தமிழ் பழைய மொழி, தமிழ் பாடவேளை வந்தாலே தூங்குவோம், மிகவும் சலிப்பாக இருக்கும், அதிலும் ஒரு மாணவி கூறினாள் நான் தமிழ் தேர்வைப் புறக்கணித்து விட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்து இருக்கின்றேன் என்று...
ஏன் தமிழ் பேசுவது என்பது இவ்வளவு கூச்சமாக இருக்கிறது என்பதற்கும் பல காரணங்களும் இரண்டு தரப்பினரும் கூறினர்.. அதில் பல பள்ளிகளில் இன்று நடக்கும் சில செயல்களும் அங்கு குறிப்பிடப்பட்டன.. அதில் அவர்கள் கூறிய அதிக்கப்படியான செயல்கள் பள்ளியில் பாடவேளையின் போது தமிழில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அபராதமாக ஒரு ரூபாய் தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார்கள்...
தமிழ் என்பது தண்டனை மொழியாக ஆங்கில வழி பள்ளிகள் பாவிப்பது மிகவும் வேதனைக்குரியது.. இனி வரும் காலங்களில் அதே தமிழில் ஒவ்வொரு வார்த்தையைக் கற்பிப்பதற்கும் இனி பள்ளிகள் செலவு செய்ய அந்தப் பணத்தை (தண்டனை அபராதம்) 10 வட்டிக்கு விட்டாலும் கட்டுபடி ஆகப்போவதில்லை என்பதை நினைத்துக் கொண்டு என்னில் புன்னகைத்துக்கொண்டேன்

இறுதி கட்டத்தில் அந்த மாணவ, மாணவிகளைப் பார்த்து ஆங்கிலத்தில் ஒரு கவிதை சொல்லுங்கள் என்று திரு.கோபி அவர்கள் கேட்டார்.. அவ்வளவுதான் அத்தனை பேரும் ஆட்டம் இழந்தனர்.. மீண்டும் புன்னகைத்துக்கொண்டேன்.. அங்கு தமிழ் எழுத, பேசத்தெரியாதவர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கும் ஒரு சில கைகள் உயர்த்தப்பட்டன, அதுதான் வேதனையின் உச்சகட்டம்..

ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அது மட்டுமே அறிவாகி விடாது.. தமிழ் நன்றாக பயின்றால் அது கூட ஆங்கிலம் சிறப்பாக பேச அதுவும் ஒரு வழி வகுக்கும்.. பள்ளிகள் நினைத்தால் தமிழுக்கு மரியாதை கொடுத்து தமிழை மாணவர்களிடையே நன்றாக வளர்க்கலாம்.. தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது உணர்வுகளுடன் தொடர்புடையது.. நிச்சயமாக இதை அனைவரும் புரிந்துகொண்டு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாள் வரும் என்பதை மட்டும் உறுதியாக நம்பிக்கொண்டு என் எழுத்தை இத்துடன் முடிக்கின்றேன்..


-தினேஷ் பழனிசாமி....

1 comment:

SURESH said...

நல்லவேளை பாரதியார் உயிரோடு இல்லை....இருந்திருந்தால் செத்திருப்பார்......