ஊட்டிக்குப் பயணம்…. சுற்றுலாவாக அல்ல....

கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி (19.06.13) காலை 6 மணிக்கு ஊட்டி நண்பர் கணேஷ் அவர்களின் தம்பியின் திருமணத்திற்குச் செல்ல ஏற்கனவே திட்டமிட்டபடி நண்பர்கள் நிறைய பேர் ஒரு டிராவல்ஸ் வண்டிக்கு அளவாகப் புறப்பட்டுக் கிளம்பினோம். கொஞ்சம் தைரியமாகவே எந்தவித பாதுகாப்புக் கருவிகளையும் (போர்வை, சால்வை போன்ற) எடுத்துக் கொண்டு செல்லவில்லை.

ஆனால் அதற்கு முதல் நாள் இரவே ஊட்டியில் பலத்த காற்று, மழை என்ற செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்திருந்தாலும் மனதை ஒருவித தைரியமாக ஆக்கிக் கொண்டு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம்.

மேட்டுப்பாளையம் செல்லும் வரை எந்தவித மேடு, பள்ளம் இல்லாத சாலை என்பதாலோ, புறப்பட்ட பிரியம் என்பதாலோ எங்கள் வண்டியின் ஓட்டுநர் மிக விரைவாகவே மேட்டுப்பாளையம் ஓட்டி வந்துவிட்டார்.. அங்கு தேநீர் பருகிவிட்டு அப்படியே எங்கள் பயணம் மலை மேலே செல்ல ஆரம்பித்தது.

என் மனது கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. அதுவும் வளைவுகளில் கொஞ்சம் அதிகமாகவே படபடத்தது. இருந்தாலும் மிகப் பெரிய தைரியசாலியவே முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு, இருக்கையில் அசையாமலேயே அமர்ந்திருந்தேன். ஒரு வழியாக நீண்ட நேரத்திற்குப் பின் 9 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தோம். அங்கு வண்டியை நிறுத்தாமல் ஊட்டி நோக்கி பயணம் தொடர்ந்தது. 10 மணிக்குள் சென்று திருமண முகூர்த்தத்தைப் பார்த்து விடலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தோம்..

ஆனால் வழிகளில் சாலை பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.. அதனால் மேலும் தாமதம் ஆனது. அப்பொழுது என்னுடைய 6-ஆம் வகுப்பு ஆசிரியர் என்னைப் பார்த்து அடிக்கடி சொன்ன உனக்குத் தான் கணக்கு நல்லா வராதே என்ற வாக்கியம் என் மனதில் என்னையே கேள்வி கேட்டுக் கொண்டது.

எப்படியோ அந்த நண்பரின் ஊரான ஊட்டி-சோலூர் என்ற இடத்திற்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.. திருமண வீட்டிற்கு வந்ததும் நாங்கள் எப்பொழுது திருமணத்திற்குச் சென்றாலும் தவறாமல் செய்யும் அந்த கும்பிடும் பழக்கத்தைச் செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு ரொம்பவும் புதிய முறைபோல் உணர்ந்ததை எங்கள் மனது புரிந்து கொண்டது. அதனால் மேற்கொண்டு அது போல் செய்வதை நிறுத்திக் கொண்டோம்..
திருமண வீட்டின் முன்பு


அங்கு என்னையும், தோழர்களையும் நண்பர் கணேஷ் நன்றாக வரவேற்று, ஊட்டிக்குப் பெயர் போன வருக்கியையையும், மற்ற சில பலகாரங்களையும் கொடுத்து நன்றாக தமிழர் முறைப்படி உபசரித்தார்.. 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் முகூர்த்தம் முடிந்தது என்றும் தெரிவித்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் அவர் இல்லத்திலேயே நடைபெற்றது என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது.
மணமகனுடன் நான்


அதன் பிறகு நடந்த சம்பர்தாயங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அங்கு அவர்கள் ஊர் சமுதாயக் கூடத்தில் பரிமாறிய உணவினையும் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளைக்கும், மனப்பெண்ணுக்கும் வாழ்த்தையும் சொல்லிவிட்டு அங்கு இருந்து விடை பெற்றோம்.

ஊட்டி வந்தது வந்து விட்டோம், அப்படியே சிறிய சுற்றுலாவாக தாவரவியல் பூங்காவிற்கு சென்று வருவோம் என்று ஒரு சில பேர் சொல்ல, போலாமே என்று புன்னகையான பதிலும் வர அப்படியே அங்கு சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வீடு நோக்கி எங்கள் வண்டியைக் கிளப்ப, இந்த இனிதான பயணம் இனிதே நிறைவு பெற்றது.. கடைசி வரை கடும் குளிரும், மழையும் வராமல் இருந்தது இதில் மிகப் பெரிய சிறப்பம்சம்.


இது வரை சுற்றுலாவகவே ஊட்டி சென்று கொண்டிருந்த எனக்கு இந்தப் பயணம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது..

2 comments:

வீரக்குமார் said...

நல்ல பதிவு

-வீரா

Dhianeswaran Anandan said...

தங்களது சுவடு மிகவும் அருமை.