சிறுமியின் ஆசை ஆசை


தினசரி காலையில் பள்ளிப் பேருந்தை
      தவறாமல் பிடித்திட ஆசை

எட்டு பாடவேளையும் திட்டு வாங்காமல்
      நன்றாகப் படித்திட ஆசை

இடைவேளையிலே கடைக்குச் சென்று இனிதான
     மிட்டாய் கடித்திட ஆசை

விளையாடும் போது தோழியைக் கொஞ்சம்
     செல்லமாய் இடித்திட ஆசை

ஆண்டு விழாவில் சிவாஜி போல
     சிறப்பாய் நடித்திட ஆசை

காகிதக் கப்பல் செய்வதற்காக புதிய
     தாளை மடித்திட ஆசை

தீபாவளியில் திரியைக் கொளுத்தி குண்டு
     வெடியை வெடித்திட ஆசை

சீனியையும் தூளையையும் சமமாய்ப் போட்டு
     தேநீர் குடித்திட ஆசை

விரும்பிய அனைத்தையும் தமிழ் வார்த்தையில்
     மட்டும் வடித்திட ஆசை

வீட்டுக் கணக்கை நானே தீர்த்து விடையைப்
     பார்க்காமல் முடித்திட ஆசை

இத்தனை ஆசையும் பட்டெனப் பறந்தது
     மேசையின் சத்தம் சட்டெனக் கேட்டதும்...

No comments: