பயனளிக்குமா பண்ணைக் குட்டை???

தலைப்பிலிருந்தே உங்களுக்கு ஓரளவு யோசனை தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். ஆம்.. இது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டம் தான். இந்தத் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாத எங்கள் குடும்பத்திற்கு இந்தத் திட்டம் பற்றி வீடு தேடி வந்து அரசாங்க அதிகாரிகள் எங்கள் தோட்டத்தில் அரசாங்கத்தின் முழு செலவிலேயே ஏற்படுத்தித் தருகிறோம் என்று கூறினார்கள்.

முதலில் கொஞ்சம் யோசித்த பின், மழை நீரை சேகரிக்கும் திட்டம் தானே, இதனால் நிலத்தடி நீர் மட்டம் தானே பெருகப் போகின்றது என்று நாங்களும் ஒப்புதல் கொடுத்தோம். திட்டத்தின் மதிப்பீடு ரூ.36000 என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்தே முழு பணியும் செய்து தருகின்றோம் என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கும் இரண்டு குச்சிகளை நட்டி கயிற்றைக் கட்டி பங்கு பிரித்துத்தான் வேலை செய்வார்களே என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.

திட்டமும் தொடங்கியது. இது குழி பறைக்கும் வேலை என்பதால் நல்ல வேளையாக அந்த அளவு குச்சிகளை நடாமல் அவர்கள் வேலை செய்தது கொஞ்சம் மன நிறைவைத் தந்தது. இந்த வேலையை மேற்பார்வையிட்டு அவர்களிடம் சரியாக வேலை வாங்குவதற்கும், ஆட்கள் வருகை பதிவு கணக்கை எழுதுவதற்குமாக இரண்டு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பணியையும் சிறப்பாக செய்தனர்.


வேலை நடைபெறும்போது பார்வையிடும் என் தந்தை


திட்டமும் ஒரு வாரத்தில் நிறைவு பெற்றது. சராசரியாக 45x45x2 அடி என்ற விகிதத்தில் குட்டையும் அமைக்கப்பட்டது. எப்படி கணக்கு போட்டாலும் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் தண்ணீரை இதில் தேக்கி வைக்கலாம் என்று மன நிறைவைப் பெற்றுக் கொண்டோம்.

திட்டம் திட்டமிட்டபடி நிறைவேறியது. எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அது தான் இன்னும் நடக்கவில்லை. கூடிய விரைவில் வானம் பார்த்த பூமியாகவே உள்ள எங்கள் தோட்டத்திற்கும் வருணன் வழி விடுவான் என்று நம்பிக்கொண்டே இருக்கின்றோம்.

கலைஞர் ஆட்சியில் விவசாயக் கடன் ரூ.40000 தள்ளுபடி செய்யப்பட்டது, அம்மா ஆட்சியில் எங்களுக்காக ரூ.36000 செலவு செய்யப்பட்டுள்ளது. (JCB விட்டு வேலை செய்திருந்தால் 5000 தானே ஆகியிருக்குமென்று யாரும் கேட்டு விடாதீர்கள்.)

ஏழு கோடிக்கும் மேல் வாழும் இந்த தமிழகத்தில், எங்களுக்கு மட்டுமே அரசாங்கம் இவ்வளவு செலவு செய்திருப்பது அதிசயம் கலந்த ஆச்சர்யமும் தான். ஆகையால் முன்னாள் முதலமைச்சருக்கும், இன்னாள் முதலமைச்சருக்கும் லட்சோப லட்ச நன்றிகள்.. 

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனளித்ததா பண்ணைக்குட்டை ?? அறிய ஆவல் ..!

தினேஷ் பழனிசாமி said...

இதுவரை பயனளிக்கவில்லை என்பது தான் உண்மை.. :-)

Unknown said...

பண்ணைக்குட்டை.. done by nrega.nic.in... it is central govt.. but not include 100 days project.. it is not a state govt project

தினேஷ் பழனிசாமி said...

எங்கள் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் தான் செய்யப்பட்டது..