ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது??!!?


பெரிய மழை பெய்வதற்கு முன் ஆகாயமே அதிர இடி வருகின்றதோ இல்லையோ, டீ குடி, டீ குடி என்று காலை 11 மணி ஆகி விட்டால் போதும் உடலில் எங்கிருந்துதான் சுற்றறிக்கை வருகின்றதென்றே தெரியவில்லை. அதைக் குடித்த பிறகுதான் வேறு வேலையையே பார்க்க மனம் ஒத்துழைக்கிறது..

நேற்றும் வழக்கம்போல் டீ குடிக்க வழக்கமாகச் செல்லும் கடைக்கே சென்றேன். பூக்களை உதிரி விட்டால் போல் ஈக்களும், FM-ல் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற விஜய் நடித்து வெளிவர இருக்கும் தலைவா படத்தின் பாடலும் வழக்கத்திலிருந்து மாறுபட்டு என்னை இனிதாய் (!) வரவேற்றன.

டீக்கடைக்கே உரித்தான வடைக்கு ஜோடியாய் அருகிலேயே வைக்கப்பட்டிருக்கும் அந்த வெட்டிய செய்தித்தாளை வடையோடு ஒட்டி எடுத்துக் கொண்டு அக்கா... ஒரு டீ.... என்று ஒரு டீயையும் ஆர்டர் செய்துவிட்டு, பல அரசியல் வாதிகள் ஆக வேண்டிய ஆட்கள் அமருகின்ற அந்தப் பெஞ்சில் நானும் அமர்ந்தேன்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக உலக செய்திகள் வரை மக்கள் அறித்துகொள்ள வேண்டுமென்றோ, இதைப் படிக்கின்ற சாக்கிலாவது இரண்டு டீ, வடை வியாபாரம் ஆகுமென்றோ டீக்கடைக்காரர்கள் தங்கள் கடையில் வைக்கப்பட்டிருக்கும் தினசரி நாளிதழை நான் இறுதி பக்கத்திலிருந்து முதல் பக்கம் வரை புரட்ட ஆரம்பித்தேன்.

அங்கு அந்த டீக்கடைக்காரர் (நான் டீ ஆர்டர் செய்த அக்காவின் கணவர்) அருகினில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவரை நாற்காலியில் அமர்த்திக் கொண்டு எதையோ பேசுவது போல் எனக்குத் தெரிந்தது. இவர் உசிலைமணி போல் இருந்ததால் அவர் அருகில் இருந்தவரை நன்றாகப் பார்க்கவே முடியவில்லை. ஏதோ உறவினர் வந்து உள்ளார் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருப்பது போல் தெரிந்தாலும் அந்தக் கடைக்காரர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த உறவினர் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து ஒரு சத்தத்தையும் காணவில்லை.. ஆனால் மாறாக அவர் கேட்பவைகளுக்கு அவரின் மனைவியிடம் இருந்து கொஞ்சம் உரக்கமாவே பதில் வந்தது. அரசல் புரசலாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு என் கையில் இருந்த வடையும் தீர, அந்த அக்கா என் அருகில் உள்ள பெஞ்சில் டீயை வைத்து விட்டு ஏப்பா.... இந்தா.... டீ... எடுத்துக்கோ... என்று சொன்ன பாணியிலேயே, அந்த கணவன் மனைவிக்குள் கொஞ்சம் சண்டை என்று சுதாரித்துக் கொண்டேன்..

ஆனால் இறுதி வரை அந்த மூன்றாவது ஆள் எதற்கு அங்கு வந்திருக்கின்றார், ஏன் பேசவே இல்லை என்ற கேள்வி ஒரு பக்கமாக என் மூளையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அவருடைய திருமுகத்தைப் பார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், என் கையில் இருந்த டீயும் முடிய, என் ஆறடி உடலை அப்படியே எழுப்பி, இன்னும் கொஞ்சம் காலால் உந்தி அரை அடி சேர்த்து கொஞ்சம் கழுத்தை உயர்த்தி எட்டிப் பார்த்தேன்.. அந்தக் கணப் பொழுதில்

லொல்....... லொல்....... லொல்...... லொல்......

என்று சத்தம் காதைக் கிழித்தது. கொஞ்சம் கண்ணைத் தேய்த்து நன்றாக உத்துப் பார்த்தால்தான் தெரிந்தது, அது  வெள்ளை நிறத்தில் பொசு பொசுவென்றிருந்த பொமரேனியன் நாய்.. அந்த நாயைப் பார்த்து என் மனதில் கேட்டுக் கொண்டேன் ஏம்பா..... இவ்வளவு நேரமா ஒரு வார்த்தை கூடவா பேசாம(!) இருக்கறது, என்னைப் பார்த்ததற்கு அப்புறம் தான் பேசனுமா (!)??? .



பிறகு அந்த டீ, வடை இரண்டிற்கும் பணத்தைக் கொடுத்து விட்டு கடையை விட்டு நடையைக் கட்டினேன். நிறைய கணவன் மனைவி சண்டை பார்த்த எனக்கு இந்தச் சண்டை கொஞ்சம் விசித்திரமாகவே தெரிந்தது..

இந்த நிகழ்வில் இன்னொரு விசித்திரம் என்னவென்றால் அந்தக் கடைக்காரர் அந்த நாயை நன்றாக சலவை செய்ததோடு (!), கடைக்குள்ளேயே ஒரு நாற்காலியில் அமர வைத்தது, அதோடு உரையாடியதும்தான்...